Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மக்கள் உறங்கிய பின் செய்தி ஊர்ஜிதம்..

தமிழக முதல்வரும் அ.இ.அ.தி.மு.க செயலாளருமான செல்வி ஜெயலலிதா மரணமடைந்தார், இந்தச் செய்தி இப்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

முதல்வரின் வாகனம் அப்பலோ மருத்தவமனையில் இருந்து புறப்படத் தயாராகிவிட்டது, அப்பலோ மருத்துவமனையில் இருந்து போயஸ்கார்டன்வரை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், மந்திரிகள் ஓரிடத்தில் கூடி ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துள்ளார்கள், அனைவரும் சோகம் ததும்பிய முகங்களுடன் காணப்படுகிறார்கள்.

இந்திய நேரம் இரவு 11.30 மணியளவில் உயிர் பிரிந்ததாக அப்பலோ மருத்துவமனை அறிவித்துள்ளது இறக்கும்போது அவருக்கு வயது 68.

அடுத்து என்ன..?

அப்பலோவில் இருந்து வைத்தியர்கள், அதிகாரிகள் எல்லோரும் வெளியேறினார்கள், முன்னர் மரணம் என்ற செய்தி வெளியாகி பின் மக்களை தணிவிப்பது போல அவர் மரணிக்கவில்லை என்ற செய்தி வெளியாகி இப்போது மரணம் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு விடயங்களும் பொய்யா உண்மையா திட்டமிட்ட செயலா என்பதற்கு அப்பால் இப்போது ஓரளவு மக்கள் இழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.

நாளை உறக்கம் விட்டெழும் தமிழக மக்களுக்கு முதல்வரின் மரணச்செய்தி காத்திருக்கிறது.

அப்பலோவில் அனுமதிக்கப்பட்டு 74 நாட்கள் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டும் அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

அவருடைய நோய்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளின் தகவல்கள் அவர் மீண்டு வருவதற்குரிய தடயங்கள் கொண்டதாக இருக்கவில்லை.

இதுபோன்ற செயற்கைச் சுவாச வாழ்வில் வரும் வழமையான மாரடைப்பு அவரை தாக்கியுள்ளது, அதன் பின் உயிர் பிழைப்பது மிகவும் கடினமாகியிருக்கிறது.

அவர் உயிர் பிழைத்தாலும் ஆட்சியை நடத்தியிருப்பது கடினமான காரியமாகவே இருக்கும், ஐந்து தடவைகள் முதல்வராக இருந்த திறமைமிக்க தலைவரை தமிழகம் இழந்து நிற்கிறது.

வீடியோ: http://www.cinekolly.com/2016/12/breaking-tamil-nadu-chief-minister.html

செய்திகள் தொடர்கின்றன…

—————————————-

ஜெ.ஜெயலலிதா என்று அறியப்படும் கோமளவல்லி செயராம்[2] (4 பிப்ரவரி 1948 – 5 டிசம்பர் 2016) தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 அன்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக உள்ள இவரைப் “புரட்சித் தலைவி” என இவரது ஆதரவாளர்கள் அழைப்பர்.[3] தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்ட இவர்,[சான்று தேவை] கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர்.

1984 முதல் 1989 வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ம. கோ. இராமச்சந்திரனின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக ஜெயலலிதா தன்னை அறிவித்துக் கொண்டார். ஜானகி இராமச்சந்திரனுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ரூ.66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், 2014 செப்டம்பர் 27 இல் செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.[4][5][6][7] பதவியில் இருக்கும் போதே பதவியில் இருந்து அகற்றப்பட்ட முதலாவது இந்திய மாநில முதல்வர் செயலலிதா ஆவார்.[8][9] 2015 மே 11 அன்று சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து செயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து 5-வது முறையாக செயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

மைசூர் சமஸ்தானம் (தற்போது கர்நாடகா) மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் – வேதவல்லி இணையரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார். இவர் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் மறைந்தார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர் பெங்களூரில் இருந்த பொழுது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து [10] மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பை கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தார். [11] மேலும் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

1981ல் அ. தி. மு. க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு 1984ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான இவருக்கு 185வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா (முன்னாள் தமிழக முதல்வர் கா. ந. அண்ணாதுரை) அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னால் மோகனரங்கம் (மேலவை உறுப்பினர்) அமர்ந்திருந்தார்.[12] எம். ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து [13] 1989 ஆவது ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.

ஜெயலலிதா தமிழக முதல்வராக கீழ்காணும் காலங்களில் பணியாற்றியிருக்கிறார்.

ஜூன் 24, 1991 முதல் மே 11, 1996 வரை – தமிழகத்தின் 11 வது முதல்வர்.
மே 14, 2001 முதல் செப்டம்பர் 21, 2001 வரை – தமிழக முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது)
மார்ச் 2, 2002 முதல் மே 12, 2006 வரை – தமிழகத்தின் 14 வது முதல்வர்.
மே 16, 2011 முதல் செப்டம்பர் 27, 2014 வரை – தமிழகத்தின் 16 வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது),
மே 23, 2015 முதல் மே 22, 2016 வரை தமிழகத்தின் 18 வது முதல்வர்
மே 23, 2016 முதல் இன்று வரை தமிழகத்தின் 19 வது முதல்வர்

2001, ஏப்பிரல் 24. அன்று ஜெயலலிதா 2001, மே 10 அன்று நடைபெற்ற 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு 4 தொகுதிகளுக்கு ( ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை) வேட்புமனு அளித்திருந்த மனுக்கள் தள்ளுபடி\நிராகரிக்கப்பட்டன. இவையனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கோ அதற்கு மேலோ தண்டனைபெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால் தள்ளுபடி செய்யப்பட்டன.[14] ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரி செயா, கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரி மதிவாணன் சட்ட உட்கூறு 8(3) கீழ் வேட்புமனுவை தள்ளுபடி செய்தனர். இச்சட்டத்தின் படி ஒருத்தர் இரு தொகுதிகளுக்கு மேல் மனு தாக்கல் செய்திருந்தால் மனுவை தள்ளுபடி செய்யலாம். ஜெயலலிதா டான்சி நில வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தார். அவரது மேல் முறையீடு மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா முடிவு செய்தார். 2001ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் தங்க. தமிழ்ச்செல்வன் அதிமுக சார்பாக வென்றார்.

2016 தேர்தலில் போட்டி
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் போட்டியிட்டார்.அவரது வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களின்படி, செயலலிதாவுக்கு உள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.118.58 கோடியாகும், கடன் ரூ.2.04 கோடி. 2006ம் ஆண்டு ஜெயலலிதா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது அவரின் சொத்து மதிப்பு ரூ.24.7 கோடியாக இருந்தது. 2011 சட்டசபை தேர்தலின்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.51.40 கோடியாக உயர்ந்தது. [15] ஏப்பிரல் 25, 2016 அன்று வேட்புமனு அளித்தார்[16]. அத்தேர்தலில் டாக்டர். ராதாகிருஷ்ணன் நகரில் போட்டியிட்டு 97,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

விருதுகளும் சிறப்புகளும்
இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

கலைமாமணி விருது – தமிழ்நாடு அரசு (1972)
சிறப்பு முனைவர் பட்டம் – சென்னைப் பல்கலைக்கழகம் (டிசம்பர் 19, 1991)
தங்க மங்கை விருது – பன்னாட்டு மனித உரிமைகளுக்கான குழு, உக்ரைன்
புனைப் பெயர்கள்
‘அம்மு’ என்று அழைக்கப்பட்டார். 1991 தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்று முதல்வரான பின்னர் மரியாதை கருதி அம்மா என்று தொண்டர்களால் அழைக்கப்படுகிறார்.[21]
புரட்சித்தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ம. கோ. ராமச்சந்திரனின் அரசியல் வாரிசாக கருதப்படுவதால், புரட்சித் தலைவி என்றும் அழைக்கப்படுகிறார்.
வழக்குகள்
ஜெயலலிதாவின் மீதான வழக்கு விவரங்கள்,

வண்ணத் தொலைக்காட்சி வழக்கு

ஊராட்சிகளில் பயன்படுத்த 45,302 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் 10.16 கோடி ரூபாய் அளவிற்கு கையூட்டுப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட இவ்வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி, தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், அதிகாரிகள் ஹெச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள்.
தீர்ப்பு – அரசுத் தரப்பு சாட்சிகளாக 80 பேரை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோரை 2000-ஆம் ஆண்டு மே 30 அன்று விடுவித்தார். அதேசமயம் அமைச்சர் செல்வகணபதிக்கும், அதிகாரிகளுக்கும் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

டான்சி நில வழக்கு

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கியதாகவும் அதை விற்ற வகையில் அரசுக்கு சுமார் 3 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
தீர்ப்பு – 2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் இரண்டு வழக்குகளுக்குமாகச் சேர்த்து ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அளித்தது.

சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பிற்குத் தடை விதித்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்யவில்லை. இது 2001-ஆம் ஆண்டு ஒரு சட்ட சிக்கலுக்கு வித்திட்டது. 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்று, முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது, எனவே அவர் பதவியேற்கக் கூடாது என வழக்குகள் தொடரப்பட்டன, இவ்வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு விலகினார். 2003-இல் சென்னை உயர்நீதி மன்றம் அவரை விடுவித்த பின்னர் ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.

இவ்வழக்கின் காரணமாக அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகி ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார்.

பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு

கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு.

தீர்ப்பு – சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வகணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது
2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்தி வெளியானதும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ரகளையில் ஈடுபட்டனர். அச்சமயம் தர்மபுரி மாவட்டத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டு பேருந்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்தச் சம்பவத்தில் காயத்ரி, கோகில வாணி, ஹேமலதா என்ற மூன்று பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்து போயினர். தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் மூன்று அதிமுகவினருக்கு சேலம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தன[22], இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு, ‘கல்லூரி’ என்று ஒரு திரைப்படம் உருவானது.
நிலக்கரி இறக்குமதி வழக்கு

தமிழக அனல் மின்நிலையங்களில் பயன்படுத்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் அரசுக்கு 6.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், தலைமைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன், மின்வாரியத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
தீர்ப்பு – சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த வழக்கில் சுப்ரமணியம் சுவாமியும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். ‘700 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகப் புகார் அளித்திருந்த சுப்ரமணியம் சுவாமியால், விசாரணையின்போது குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடவோ, விளக்கவோ முடியவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

டிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்கு

அரசு -தனியார் கூட்டுறவில் உருவான நிறுவனம் ஸ்பிக். செட்டிநாட்டரசர் குடும்பத்தைச் சேர்ந்த எம்.ஏ. சிதம்பரமும், அவரது மகன் ஏ.சி. முத்தையாவும், தோற்றுவித்த அந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை (26%) தமிழக அரசு நிறுவனமான டிட்கோ வைத்திருந்தது. நிறுவனத்தின் தலைவராக எம்.ஏ.சிதம்பரமும், துணைத்தலைவராக ஏ.சி.முத்தையாவும் இருந்தார்கள். 89-ஆம் ஆண்டு ஏற்பட்ட திமுக ஆட்சியின்போது பெரும்பான்மைப் பங்குகளை தமிழக அரசு வைத்திருப்பதால் தலைமைச் செயலாளர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்தது. :எம்.ஏ.சிதம்பரம் குடும்பத்தினர் தலைவராவதற்கு ஏதுவாக தமிழக அரசு தன்னிடமிருந்த 2 லட்சம் கடன் பத்திரங்களை அவர்களுக்கு மாற்றிக் கொடுத்தது. 12.37 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை 40.66 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டுதான் கொடுத்தது. ஆனால், இதில் ஊழல் நடந்ததாக சுப்ரமணியன் சுவாமி கூறி வந்த குற்றச்சாட்டுக்களையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

தீர்ப்பு – 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் நாள் சிறப்பு நீதிமன்றம் சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை எனச் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்தது. அரசுக்கோ, டிட்கோவிற்கோ நிதி இழப்பு ஏற்படவில்லை என்றும் சொல்லியது.

செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில் பொது நல வழக்குத் தொடர்ந்ததாகவும், இந்தப் பங்கு பரிமாற்றம் பற்றித் தனக்குத் தனிப்படத் தெரியாது என்றும் அதுவும் கட்டுரை வெளிவந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் வழக்குத் தொடர்ந்திருப்பதாலும் பொது நல வழக்குத் தொடர்ந்த சுப்ரமணிய சுவாமியின் சாட்சியத்தை ஏற்க இயலாது என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
பிறந்த நாள் பரிசு வழக்கு

1992-ஆம் ஆண்டு 57 பேரிடமிருந்து 89 வரைவோலைகள் (இதில் அயல்நாட்டிலிருந்து 3 லட்சம் டாலருக்கான ஒரு வரைவோலையும் அடக்கம்) மூலம் 2 கோடி ரூபாய்க்கு மேல் தனது பிறந்த நாளன்று பரிசாகப் பெற்றதாக சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. பின்பு குற்றச்சாட்டுப் பதிவு செய்தபோது 21 பேரிடமிருந்து 1.48 கோடி ரூபாய் என்று அதைக் குறைத்துவிட்டது. இந்த வழக்கில் அன்றைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.

தீர்ப்பு – 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா, சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த மொத்தக் குற்றசாட்டுக்களையும் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார். பத்தாண்டுகளாகியும் சி.பி.ஐ. விசாரணையை முடிக்காமல் காரணமின்றி இழுத்தடிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட எவரும் புகார் அளித்து, சி.பி.ஐ. இந்த வழக்கைத் தொடரவில்லை என்றும், ஜெயலலிதா அவரது வருமான வரி தாக்கலின் போது பிறந்தநாள் பரிசுகள் குறித்துக் கொடுத்திருந்த தகவலை அடிப்படையாகக்கொண்டே குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவே அவர் எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கு

ஜெயலலிதா தமிழக முதல்வராக 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினைத் தொடர்வதற்கான அனுமதியை மாநில ஆளுனரிடமிருந்து சுப்பிரமணியன் சுவாமி பெற்றார்.

2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரானது இந்த வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனு அளித்தார். அதை ஏற்று கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கியது.

இவ்வழக்கில் 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்தன.

2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தியதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக தீர்ப்பு கர்நாடக மாநிலத்தின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.

இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.[4][5][6].

இதன் தொடர்ச்சியாக அவர் முதல்வர் பதவியை இழந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.[7][23].

மே 11 ,2015 அன்று சொத்துக்குவிப்பு வழக்கின் வழங்கப்பட்ட தண்டனைக்கெதிராக இவரால் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.[24]
ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசின் மேல்முறையீட்டை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.[25]

வருமானவரிக் கணக்கு வழக்கு

முதன்மை கட்டுரை: ஜெயலலிதா வருமானவரி வழக்கு
வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வருமானவரி வழக்கு சென்னை கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

இந்நிலையில் ரூபாய் இரண்டு கோடி வருமானவரித் துறைக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா அபராதம் செலுத்தியதால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி அன்று வருமானவரித் துறையினர் வழக்கை திரும்ப பெற்றதின் மூலம் வருமானவரிக் கணக்கு வழக்கு முடிவுக்கு வந்தது.[26] அனைத்து வழக்குகளிலிருந்தும் இவர் விடுவிக்கப்பட்டமையால் 2015 மே மாதம் 23 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சராகப் ஐந்தாவது முறையாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

1 Response to தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் உத்தியோகபூர்வ அறிவிப்பு

  1. தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா மரணம்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் அறிக்கை!

    தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
    • தமிழகத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தை சார்ந்தவர்களும் அண்ணன் தம்பிகளாக, அன்புச்சகோதரர்களாக, ஒரு தாய் மக்களாக மத நல்லிணக்கத்துடன் வாழ, தமிழகம் அமைதி பூங்காவாக திகழ பாடுபட்டவர்.
    • தொலைநோக்குப் பார்வையும் நிர்வாகத் திறமையும் மிக்கவர்.
    • ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, வெற்றிக்கரமாக நடத்திக் காட்டியவர்.
    • மதவாத சக்திகள் தமிழகத்தில் தலையெடுக்க விடாமல் தடுத்தவர்.
    • வன்முறை குறைந்த தமிழகத்தை உருவாக்க பாடுபட்டவர். இவரது ஆட்சியில் வன்முறை இருக்காது என்று மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர்.
    அவரை இழந்து தவிக்கும் அதிமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தமிழக மக்களுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி.

    பரங்கிப்பேட்டை அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., பொதுச்செயலாளர்
    மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

     

Post a Comment

Followers