Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மோசடியில் ஈடுபட்டதற்காக பாதுகாப்பு படைகளிலிருந்து துரத்திவிடப்பட்ட முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் இடம்பெறும் பல்வேறு குழப்பங்களுக்கு அவர்களே காரணம் என்று பிராந்திய அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார். 

சர்வதேச சட்டங்கள் மற்றும் உள்நாட்டு சட்டங்களுக்கு அமைவாகவே தான் யுத்தத்தை முன்னெடுத்ததாகவும், இதற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கோத்தபாய ராஜபக்ஷவின் எண்ணங்களை நிறைவேற்றச் சென்று சட்டத்தை மீறியவர்கள் தொடர்பில் தன்னால் பொறுப்பேற்க முடியாது என்றும் அவர்  கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தியமையாலேயே நாடு என்ற அங்கீகாரம் எமக்கு சர்வதேச ரீதியில் கிடைத்துள்ளது. பாதுகாப்பு இன்றி நாடொன்றில் பொருளாதார முன்னேற்றமோ அல்லது நாட்டை முன்னேற்றுவதற்கான எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாது. நாட்டின் பாதுகாப்புக்கு உள்ளக ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் அச்சுறுத்தல் ஏற்படலாம். உள்ளக அச்சுறுத்தல் தொடர்பில் எமக்கு அனுபவங்கள் உள்ளன. இவற்றை தடுத்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் உள்ளது.

புலனாய்வுப் பிரிவில் மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் இருந்தனர். எனினும், திறமைவாய்ந்த அதிகாரிகளை உரிய பதவிகளுக்கு நியமித்து அதனை மீளமைக்க முடிந்தது. மோசடிகள் தொடர்பில் துரத்திவிடப்பட்ட புலனாய்வு அதிகாரிகளே கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து மோசடிகளுடன் தொடர்புபட்டுள்ளனர்.

சர்வதேச சட்டங்கள் மற்றும் உள்நாட்டு சட்டங்களுக்கு அமையவே நான் யுத்தத்தை முன்னெடுத்தேன். இராணுவத்தினருக்கு எதிரான சவால்களுக்குப் பொறுப்புக் கூற நான் தயாராகவே இருக்கின்றேன்.

எனினும், கோத்தபாய ராஜபக்ஷவின் எண்ணங்களை நிறைவேற்றச் சென்று சட்டத்தை மீறிச் செயற்பட்ட இராணுவ அதிகாரிகள் தொடர்பில் என்னால் பொறுப்புக் கூற முடியாது. அதற்கான பொறுப்பை கோத்தபாய ராஜபக்ஷவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொடர்ந்தும் இராணுவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க இராணுவத்தினர் முன்வர வேண்டும். இராணுவத்தின் பொறுப்புக்கள் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளிடம் கையளிக்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து முன்னாள் புலனாய்வாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்: பொன்சேகா

Post a Comment

Followers