Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய (தமிழக) மீனவர்களின் படகுகளையோ உபகரணங்களையோ திரும்பக் கையளிக்கப் போவதில்லை என மீன்பிடி மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்கும் இந்திய படகுகளை தடுத்து வைத்து வருவதன் மூலம், இந்திய மீனவர்களின் அத்துமீறல் 50 வீதத்தினால் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பிலான அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் நேற்று வியாழக்கிழமை இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டன. பேச்சுவார்த்தையையொட்டி இலங்கையினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் உபகரணங்களையும் விடுவிக்குமாறு இந்திய மீனவர்கள் கோரியிருந்தனர். இந்த நிலையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிலாபம் கிரயம்கல்லிய பிரதேசத்தில் நேற்று 'வாவியுடன் கிராமம்' திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையில் மீன்பிடிக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு தென்னிந்திய மீனவர்களின் அத்துமீறலே பிரதான சவாலாக உள்ளது. இதற்கு இறுதித் தீர்வு காண்பதற்காக இராஜதந்திர மட்டத்தில் பேச்சு நடத்தி வருகின்றோம். அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர மட்டத்திலான மற்றொரு பேச்சுவார்த்தை ஜனவரி 02ஆம் திகதி கொழும்பில் நடைபெறுகிறது. தற்பொழுது 122 இழுவைப்படகுகளுடன் மேலும் 140 நாட்டுப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றுடன் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் யாவும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. அரசுடமையாக்கப்பட்ட படகுகளையோ உபகரணங்களையோ விடுவிக்க மாட்டோம். கைது செய்யப்பட்டுள்ள சகல இந்திய மீனவர்களையும் சட்டமா அதிபரின் ஆலோசனைப் பிரகாரம் விடுதலை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை உறுதி செய்யும் வகையில்இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to எந்தக் காரணம் கொண்டும் இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது: மஹிந்த அமரவீர

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...