Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தொடர்வண்டி சேவை வணிகமல்ல,கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று பாமக  நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை  விடுத்துள்ளார்.

அறிக்கையில், இந்தியாவில் தொடர்வண்டிக் கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கான முன்னறிவிப்பை மத்திய  நிதியமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டிருக்கிறார். தொடர்வண்டிக் கட்டணத்தை உயர்த்துவதற்காக அவர் கூறியுள்ள காரணங்கள் நியாயமற்றவை. அவற்றில் ஒன்றைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. 

தலைநகர் டெல்லியில்  நடந்த இந்திய தொடர்வண்டித்துறையில் கணக்கியல் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசும் போதுதான் தொடர்வண்டிக் கட்டணங்களை உயர்த்த வேண்டியதன் தேவை குறித்து வலியுறுத்தியிருகிறார். இந்நிகழ்ச்சியில் அருண் ஜெட்லி ஆற்றிய உரை மக்கள் நலன் விரும்பும் அரசின் மத்திய அமைச்சருக்கானது அல்ல; மாறாக லாபம் குவிக்க நினைக்கும் நினைக்கும் பெருவணிக நிறுவன முதலாளிக்கானது என்பதுதான் உண்மை.‘ 

எந்த ஒரு நிறுவனத்தையும், குறிப்பாக வணிக நிறுவனத்தை நடத்துவதற்கான அத்தியாவசியத் தத்துவங்களில் முதன்மையானது நுகர்வோர் பெறும் சேவைக்கு அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதாகும்’’ என்று கூறியுள்ளார். தொடர்வண்டித் துறையை சேவை நிறுவனமாக ஆட்சியாளர்கள் பார்த்து வந்த நிலையில், அருண் ஜெட்லி மட்டும் அதை வணிக நிறுவனமாக பார்க்கத் தொடங்கியிருப்பது மிகவும் ஆபத்தான போக்கு ஆகும். 

அதுமட்டுமின்றி, தொடர்வண்டித்துறை வசூலிக்கும் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, அதற்காகக் கிடைக்கும் சேவை மிகவும் குறைவு ஆகும். அதிவேகத் தொடர்வண்டிகளில் குளிரூட்டி வசதியுடன் கூடிய முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு விமான பயணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப் படும் சூழலில், அதற்குரிய வசதிகளும், சேவைகளும் வழங்கப்படுகின்றனவா? என்பதை  அருண் ஜெட்லி தான் விளக்க வேண்டும். 

மக்களைக் கவரும் என்ற நோக்குடன் திட்டங்களை செயல்படுத்துவதால் தான் தொடர்வண்டித்துறை வருவாய் குறைந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்வண்டித்துறை வரலாற்றை அவர் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்பதையே அவரது கருத்துக்கள் காட்டுகின்றன.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்பதற்கு முன்பு வரை தொடர்வண்டிகள்  ஏழைகளின் வாகனங்களாக இருந்தன. மிகக் குறைந்த கட்டணத்தில் இந்தியாவின் எந்த பகுதிக்கும் தொடர்வண்டியில் சென்று வந்துவிடலாம் என்ற நம்பிக்கை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இருந்தது. 2002 ஆம் ஆண்டு முதல் 2012&ஆம் ஆண்டு வரையான 11 ஆண்டுகளில் தொடர்வண்டிக் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. இவற்றில் சுமார் 7 ஆண்டுகள் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய தொடர்வண்டித்துறை இணை அமைச்சர்களாக இருந்தனர். பா.ம.க.வைச் சேர்ந்த ஏ.கே.மூர்த்தி அமைச்சராக இருந்தபோது தான் தொடர்வண்டி நிலையங்களில் பயணிகள் அமருவதற்கான இருக்கைகள், குடிநீர், தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டன. 

லாலு பிரசாத் யாதவும், பா.ம.க.வைச் சேர்ந்த அரங்க. வேலுவும் தொடர்வண்டித்துறையை கவனித்த போது புதிய திட்டங்கள் செயல்படுத்தபட்டதுடன், ஒரு முறை தொடர்வண்டிக் கட்டணமும் சிறிதளவு குறைக்கப்பட்டது. அப்போது தான் தொடர்வண்டித்துறை மிக அதிக லாபம் ஈட்டியது. எனவே, சேவை வழங்குவதற்கும், வருவாய் குறைவதற்கும் தொடர்பில்லை என்பதை அருண் ஜெட்லி உணர வேண்டும். 

பாரதிய ஜனதா அரசு பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் 2014 ஜூன், 2015 ஜூன், 2016 செப்டம்பர் என 3 முறை கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, சிறப்புத் தொடர்வண்டிகளுக்கு முன்பு வழக்கமான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்ட நிலையில், இப்போது கூட்டத்திற்கு ஏற்ப கட்டணம் உயர்த்தப்படுகிறது. இவ்வளவுக்கு பிறகும், ஏதோ சேவை வழங்குவதாகக் கூறி கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிடுவது மக்கள் நலனுக்கு எதிரான செயல் ஆகும். 

இப்போதும் கூட தொடர்வண்டிப் பயணிகளுக்கு மத்திய அரசு எந்தவிதமான கூடுதல் வசதிகளையோ, சேவைகளையோ வழங்கப்போவதில்லை. மாறாக கடந்த பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமலிருக்கும் பயணிகள் பாதுகாப்பு குறித்த சில திட்டங்களை செயல்படுத்துவதற்காகவே கட்டணத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிருகிறது. பாதுகாப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு ரூ.1,19,183 கோடி  நிதியுதவி  வழங்கும்படி மத்திய நிதி அமைச்சகத்தை தொடர்வண்டி அமைச்சகம் கோரியிருந்தது. 

ஆனால், அதில் 25 விழுக்காட்டை மட்டுமே வழங்க ஒப்புக்கொண்ட நிதித்துறை மீதமுள்ள பணத்தை கட்டண உயர்வின் மூலம் திரட்டிக் கொள்ளும்படி கூறிவிட்டது. அதன்படி தான் தொடர்வண்டிக் கட்டணங்கள் உயர்த்தப்பட  உள்ளன. அதிலும் உயர்வகுப்புக் கட்டணங்கள் கடந்த காலங்களில் அதிகமாக உயர்த்தப்பட்டதைக் காரணம் காட்டி இம்முறை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயணிக்கும் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி, படுக்கை வசதி ஆகியவற்றுக்கான கட்டணங்கள் தான் உயர்த்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துமே ஏழைகளுக்கு பாதகமாகவும், பணக்காரர்களுக்கு சாதகமாகவும் தான் அமைந்துள்ளன. மேடுகளை கரைத்து பள்ளங்களை நிரப்புவது தான் சிறந்த பொருளாதாரமாகும். ஆனால், மத்திய அரசின் செயல்பாடுகள் இதற்கு நேர் எதிராக உள்ளன. இது  நல்லதல்ல. எனவே, தொடர்வண்டி கட்டணங்களை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

0 Responses to தொடர்வண்டி சேவை வணிகமல்ல, கட்டணத்தை உயர்த்தக் கூடாது: ராமதாஸ்

Post a Comment

Followers