Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்திலுள்ள நிலங்கள் சூறையாடப்பட்டு வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கிலுள்ள வனப்பகுதிகளில் இராணுவம் தங்கியிருப்பதனால், குறித்த வனப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவை அழிவடைந்து வருகின்றன. காட்டுப்பிரதேசங்களின் நடுவே பாரிய இடைவெளி காணப்படுகின்றமை கூகுள் படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கான 2016ஆம் ஆண்டின் இறுதி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் பங்கேற்று இணைத்தலைமை உரை நிகழ்த்தும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வடக்கு மாகாண சபை தயாராக இருக்கின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வடக்குப் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இதன்போது, வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார தேவைகள் குறித்து ஆராயப்படவுள்ளது. இதேவேளை பாரிய செயற்றிட்டங்களால் மக்கள் பயனடைவார்கள் என்ற தத்துவத்தை மாற்றி சிறுமத்திய கைத்தொழில்களை உருவாக்குவதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.

அத்துடன் தேவையற்ற வெளி மாகாண உள்ளீட்டல்களைக் குறைக்க முடியும். மக்கள் பெருவாரியாக இங்கு தங்கி நெருக்கடிகளுக்கு உள்ளாவதைத் தடுக்க முடியும். நீர்ப்பாவனை, மின்சாரம், வடிகால், கழிவகற்றல் போன்றனவற்றை திறமையுடன் நிர்வகிக்க முடியும். இந்நிலையில், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள சந்திப்பின்போது ஒண்றிணைந்த குரலில் அனைவரதும் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும்.

வடக்குப் பகுதி நிலங்கள் சூறையாடப்பட்டு வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சுண்டிக்குளத்தில் மத்திய அரசாங்கத்தின் உள்ளீடுகள் சுற்றுச்சூழலுக்கு அனுசரணையாக இல்லை.

அத்துடன், வனப்பகுதிகளில் இராணுவத்தினர் பாரியளவான காணிகளை கையகப்படுத்தியிருப்பதனால், வனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வனங்களின் நடுவில் பல இடங்களில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை கூகுள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. வடக்குப் பகுதி வளங்கள் தெற்கிற்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு நிலங்கள் சூறையாடப்படுவது தடுக்கப்பட வேண்டும்: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers