Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு, பல ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், இலங்கை நீதித்துறையின் தீர்ப்புக்களில் நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கத்தின் 11வது ஆண்டு நினைவு தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு நினைவுப் பேருரை ஆற்றும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அழிக்கப்பட்ட தினத்திலும் மக்கள் பீனிக்ஸ் பறவைகள் போல எழுந்து நிற்கிறார்கள் என்ன இலட்சியத்துக்காக இலட்சக் கணக்கான உயிர்கள் பலி கொடுக்கப்பட்டனவோ அந்த ஆத்மாக்களுடைய பலம் எங்களுக்கு எப்போதும் இருந்து கொண்டேயிருககிறது.

எந்த இலட்சியத்துக்காக போராடினார்களோ அதற்காக நாங்கள் மீண்டும் எழுந்து கொண்டிருக்கின்றோம்.என்னைப் பொறுத்த வரையில் நானும் 3 முறை இறந்து விட்டேன் என்று தூக்கி வீசப்பட்டவன்தான்.

அண்மையிலே நாரந்தனை வழக்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகு. குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் இறந்து விட்டோம் என்றுதான் மருத்துவ மனைக்குக் கொண்டு வந்தார்கள்.

நாலாம் மாடியிலே நான் மூர்ச்சித்து வீழ்ந்த பொழுது மரணித்து விட்டேன் என்று கூறி விட்டார்கள். மூன்றாவதாக ஆனையிறவு இராணுவ முகாமிலும் நான் மரணித்து விட்டேன் என்று தூக்கி வீசப்பட்டேன். இவை சிறிய சம்பவங்கள்தான்.

எங்களுடைய மக்கள் தங்களுடைய உயிர்களைப் பலி கொடுத்து இத்தனை ஆண்டுகளாக இனத்தின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்த சூழலோடு ஒப்பிடுகின்ற பொழுது என்னு டைய உயிர் மீண்டும் தப்பியிருக்கக் கூடியது பெரிய அர்ப்பணம் என்று கூற வரவில்லை.

தமிழர் தாயகத்தின் அழகான மண்ணிலே நாம் ஆக்கிரமிக்கப்பட்டவர்களாக அடக்கி ஒடுக்கப்டடவர்களாக இருப்பதற்கு எதிராக தந்தை செல்வாவோடு, அமிர்தலிங்கம் அவர்களோடு, தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு தன்னை இளவயதிலிருந்து இணைத்துக் கொண்டு போராட்டங்களிலும் மகாநாடுகளிலும் கலந்து கொண்டு தீர்மானங்கள் எடுப்பதிலெல்லாம் பங்குபற்றி வந்தவர்தான் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள்.

எங்களோடு உழைத்த பலர் இப்பொழுது எம்மிடையே இல்லை. இலட்சியத்துக்காக இனத்தின் விடுதலைக்காக ஜனநாயகத்துக்காக எமது இளைஞர் சமுதாயம் இந்த மண்ணிலே இருந்து வந்திருக்கின்றது.

ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் மனித உரிமைகளுக்காக இராணுவ, அரச படுகொலைகளுக்கு எதிராக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் கொடுத்தார். பல நாடுகளுக்குச் சென்று பல தூதர்களிடம் குரல் கொடுத்திருக்கின்றார்.

கட்சியின் ஏகோபித்த தீர்மானத்தில் ஒன்றுபட்டுழைத்தவர். கட்சியின் பண்பைக் கட்டிக் காத்தவர். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் நம்முடைய இனத்தின் விடுதலைக்காக உழைத்தவர்.

குற்றவாளிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட அவரின் வழக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்டிருக்கின்றது. தனித்தனியாக, கூட்டமாக எமது மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளின் இலங்கை அரசாங்கத்தின் தீர்ப்புக்களின் மீது நாங்கள் திருப்தி கொள்ளவில்லை.

அதனால் இன்னமும் நாங்கள் கவலையடைந்திருக்கின்றோம். பழைய தீர்ப்புக்கள் இலங்கையின் நீதித்துறையை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது. இரத்தத்தில் இந்த மக்களின் உணர்வு இன்னமும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கின்றது.' என்றார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புளியந்தீவு தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களினால் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

0 Responses to இலங்கை நீதித்துறையின் தீர்ப்புக்களில் நம்பிக்கை கொள்ளவில்லை: மாவை சேனாதிராஜா

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...