Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன ரீதியாக சிந்திப்பது தவறு என கூறப்பட்டு வருகின்றது. ஆனால், இன ரீதியான சிந்திப்பு இல்லை என்றால், சிறிய இனம் பெரிய இனத்தினுள் சங்கமம் ஆகிவிடும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சர்வோதய அமைப்பின் நல்லிணக்க வேலைத்திட்டத்தின் கீழ் நல்லிணக்கம் மீதான வடக்கு கிழக்கு மக்களின் விதந்துரைகள் எதிர்பார்ப்புகள் குறித்த பிரகடனத்தை வெளியிடும் விசேட நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்விற்கு முதலமைச்சர் அனுப்பி வைத்த தனது வாழ்த்து உரையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது, “இனவாத அடிப்படையை  தவிருங்கள் என்று கூறும்போது பெரும்பான்மை மக்களுக்கு எமது உரித்துக்களை தரைவார்த்து கொடுப்பது போல் ஆகிவிடுகிறது. சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்து அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்கிய பின்னரே தேசிய ரீதியில் நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்க வரவேண்டும். இல்லை என்றால் நாங்கள் பெரும்பான்மை சமூகத்தின் ஒரு அங்கமாக மாறிவிடுவோம்.

டான் யுவான் தர்மபாலா என்ற அரசனுக்கு முடி சூட்டுவதற்காக மதுரையில் இருந்து 400 வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழர்கள் சிங்கள இடங்களாகிய அம்பலன்கொடை, கல்லுப்பிட்டிய  போன்ற இடங்களில் குடியேறினார்கள். காலப்போக்கில் அவர்களும் சிங்களவர்களாகவே மாறிவிடடார்கள். மலைநாடுகளில் இருந்து வேறு இடங்களில் குடியேறியவர்கள் தங்களை சிங்களவர்களாகவே பெயர் மாற்றி கொண்டார்கள்.

தென்னாபிரிக்காவில்  அரசியல் பிணக்குகளை தீர்த்த பின்னரே நல்லிணக்க முயற்சிகளில் இறங்கினார்கள். அரசியல் ரீதியான உரிமைகளும் அடையாளங்களும் உத்தரவாதப்படுத்தப்பட்ட பின்னரே தேசிய ரீதியில் செயலாற்ற வேண்டும். அதனால் தான் அரசியல் முன்மொழிவுக்களை  சமஷ்டியாக முன்வைக்கிறோம்.

வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் கிராமங்களாகும். தமிழினை சட்டபடி ஏற்றுக் கொண்டால் தமிழ்பிரதேசங்களில் வாழும் தமிழர்கள் வாழ்வார்கள். தமிழர்கள் கலாசாரம் வளரும். அவ்வாறு இல்லை என்றால் நாம்  பெரும்பான்மை மொழி கலை கலாசாரங்களுக்குள் அமுக்கப்பட்டுவிடுவோம் என்ற அச்சம் கொள்ள தோணுகிறது. அவ்வாறு அமிழ்ந்துவிட வைப்பது இனப்  படுகொலைக்கு ஒப்பானது என சட்டம்  சொல்கிறது.

எமது இன  தனித்துவத்தை வலியுறுத்திக்கொண்டே தேசியத்தை நோக்கி முன்னேற வேண்டும். சிறுபான்மையினர்  தமக்கு அங்கீகாரம் கிடைக்க முன்னர்  தேசிய ரீதியாக செயற்பட்டால் அவர்கள்  பெரும்பான்மை இனத்திற்குள் இரண்டற கலந்து விடுவார்கள். கிறிஸ்துக்கு முன்னரே வடக்கு கிழக்கில் பேசப்பட்டு வந்த தமிழ் மொழியினை கொச்சைப்படுத்த வேண்டுமா என நீங்களே சிந்தியுங்கள்.” என்றுள்ளார்.

0 Responses to இன ரீதியான சிந்திப்பு இல்லையெனில், சிறிய இனம் பெரிய இனத்தினுள் கலந்துவிடும்: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers