Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புல்மோட்டை பிரதேசத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில் புல்மோட்டை அரிசி மலை பௌத்த தியான மண்டபத்திற்கு ஹம்பாந்தோட்டை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட பணாமுற திளக்க வன்ச என்னும் பௌத்த பிக்கு அதனை பௌத்த கோவிலாக மாற்றினர்.

பின்னர் அரிசி மலை பகுதியை சூழவுள்ள பகுதியை பௌத்த விகாரைக்கான நிலமாக அரிசி மலை, பொன்மலைக்குடா, வெற்றிலைக்கேணி, வீரன் தீவு போன்ற முஸ்லிம்களுக்கு சொந்தமான 500 ஏக்கர் காணியினை புனித பூமியாக்க நினைத்தனர்.

இதற்காக திருகோணமலையின் முன்னாள் அரசாங்க அதிபர் சில்வா மஹிந்தவின் அனுசரணையுடன் புல்மோட்டையின் ஏனைய பகுதிகளான 14ஆம் கட்டை பம்ப் ஹவுஸ், சாத்தனமடு, ஆண்டான் குளம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய புல்மோட்டை பிரதேசத்தில் சுமார் 2500 ஏக்கர் காணியை அளவிட முற்பட்டனர்.

இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தலைமையில் குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தௌபீக் புல்மோட்டை பெரிய பள்ளிவாசலின் தலைவர் கலீல் லெப்பை, ஐனியப்பில்லை, ஐயூப்கான் மௌலவி ஆகியோர் உட்பட புல்மோட்டை மக்களால் ஆர்ப்பாட்டத்தின் மூலம் பல தடைவைகள் குறித்த பகுதியில் காணி அளவீடு செய்வதைத் தடுத்தும் குறித்த நபர்களைப் பல தடவைகள் நீதிமன்றுக்கு நிறுத்தியும் மேற்படி காணி ஆக்கிரமிப்பு முயற்சிகள் இடை நிறுத்தப்பட்டன.

மேலும் அரிசி மலை பகுதியில் 2004 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மூவருக்கு நிஹார்ப் நிறுவனத்தினால் கட்டிக் கொடுக்கப்பட்ட 03 வீடுகள் கடற் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டது.

குறித்த காலப் பகுதியில் காலித் என்பவரின் வீடு உடைக்கப்பட்டு பௌத்த கோவிலுக்காக மேலதிக கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் மாகாண சபை உறுப்பினர் அன்வரால் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வீடு மீட்கப்பட்டு அவர் குடி அமர்த்தப்பட்டார்.

அவர் இல்லாத சமயம் வீட்டின் ஓடுகள் கழற்றப்பட்டு வீடு உடைக்கப்பட்ட நிலையில் புல்மோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டும் அது தோல்வியுற்றது.

பிக்குவான பணமுற திளக்க வன்ச கொழும்பில் இருந்து சிங்கலே ராவண பலய போன்ற இனவாதக் கும்பல்களை பௌத்த பிக்குகளோடு வரவழைத்து மிக மோசமாக நடந்து கொண்டார்.

பின்னர் மிகுதி இரண்டு வீடும் படையினரிடமிருந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் விடுவித்து கொடுத்த போது அந்த பௌத்த பிக்கு அரிசிமலை பகுதியை கை விட்டு 14 ஆம் கட்டைப் பகுதியை நோக்கி நகர்ந்தார்.

குறித்த பகுதியிலே வெளி மாகாணங்களில் இருந்து சட்ட விரோதமாக மக்கள் குடியமர்ந்த போது அவற்றுக்கும் குச்சவெளி பிரதேச செயலாளரால் நீதி மன்றுக்கு கொடுக்கப்பட்டு சட்ட ரீதியாக வெளி ஏற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதிலும் தோல்வி கண்ட பிக்கு இனவாத கும்பல்களில் ஒன்றான மஹா சேனா பலாக்காய என்ற கூட்டத்தோடு தொடர்பை ஏற்படுத்தி அவர்களைப் புல்மோட்டைப் பிரதேசத்திற்கு கொண்டு வந்து இனவாதம் பேசினார்.

இதனை குறித்த வீடியோவை முகநூலினூடாக வெளியிட்ட கும்பல்களின் ஒருவனான அமித் வீரசிங்க என்பவனின் முகநூலைப் பார்ப்பதினூடாக அறியக் கூடியதாக இருந்தது.

குறித்த முகநூலில், முஸ்லிம்களின் கடைகளுக்கு சிங்களவர்கள் போகக் கூடாது என்றும் புல்மோட்டையில் சிங்கள பெரும்பான்மை மக்கள் குடியமர்ந்துள்ள பகுதியிலே அவர்களுக்காக புதிய கடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்படும் என்றும் சிங்க இளைஞசர்கள் ஒன்று பட வேண்டும் என்றும் பதிவுகள் இட்டப்பட்டிருந்தன.

இதனால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான அன்வர், முதலமைச்சர் ஊடாக கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தார்.

எனவே புல்மோட்டை பொலிஸ் அதிகாரி, மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் போன்றோருக்கு வீடியோ மற்றும் போட்டோக்களை அனுப்பப்பட்டதுடன் புல்மோட்டை பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பினை வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும், குறித்த அரிசி மலை பௌத்த பிக்குவின் தலைமையில் மஹா சேனா பலாக்காய கும்பல்கள் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு சட்ட விரோத குடியேற்றக் காரர்களுக்கு சில பொருட்கள் வழங்கினர்.

இதன் போது, அரசாங்க அதிபர் 50 கடைகளுக்கு அனுமதியற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வை நிறுத்தும்படி பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியதால் பிக்கு 13 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள பௌத்த கோவில் பகுதியிலே அடிக்கல் ஒன்றை நாட்டிச் சென்றனர்.

எனவே புல்மோட்டை பிரதேசத்தில் பெரும்பான்மை மக்களை குடியமர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு அலையும் அரிசி மலை பௌத்த பிக்கு தன்னுடைய நடவடிக்கைக்கு இனவாத கும்பல்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றார்.

மேலும் புல்மோட்டை பிரதேசத்தில் எதிர்காலத்தில் முஸ்லீம் மற்றும் அண்மை கிராமமான பதவி ஸ்ரீ புற சிங்கள மக்களோடு உள்ள உறவை சீர்குலைக்க எடுக்கும் முயற்சி பிரதேச மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

அத்தோடு புல்மோட்டை பிரதேசமக்கள் சிங்கள மக்களின் காணிகளை அடாவடியாக பிடித்திருப்பதாகவும் வதந்திகளை பரவுவதுடன் ஹம்பாந்தோட்டை பகுதியில் இருந்து வந்து இரு சமூகங்களையும் பிரிக்கின்ற முழு முயற்சியில் மஹிந்தவின் முகவராக குறித்த பிக்கு செயற்படுவது புலனாகிறது.

மேலும் புல்மோட்டை பிரதேசத்தை அண்டிய ஏனைய பௌத்த விகாரைகளிலுள்ள பௌத்த துறவிகள் மிகவும் நெருக்கமாக புல்மோட்டை முஸ்லிம்களோடு உறவை வைக்கும் போது

மஹிந்தவின் நிகழ்ச்சி நிரலின்படி இயங்கும் அரிசி மலை பௌத்த பிக்குவின் நடவடிக்கைகளுக்கு நல்லாட்சி அரசு தீர்வு எடுக்குமா என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to திருகோணமலை - புல்மோட்டையில் பௌத்த தேரரின் ஆதிக்கம்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.