Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமைச்சக்ர்கள் போயஸ் கார்டன் நோக்கி செல்கிறார்களே போயஸ் கார்டன் என்ன தலைமைச் செயலகமா, என்று பாட்டாளி  நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் போயஸ் கார்டனில் சசிகலாவைச் சந்தித்து ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைமைச் செயலகத்தை விட போயஸ் கார்டனுக்கு முக்கியத்துவம் கூடியுள்ள நிலையில்  டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில், தமிழ்நாட்டில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், இனியாவது அரசு நிர்வாகம் மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்பட வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்டது. ஆனால், புதிய அதிமுக அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையிலான நல்லத் தொடக்கமாக அமையவில்லை என்பது வருத்தமளிக்கிறது. 

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசு கடந்த 5ஆம் தேதி நள்ளிரவில் பதவியேற்ற நிலையில், முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், புதிய அரசு நிறைவேற்ற வேண்டிய கடமைகளும், பணிகளும் ஏராளமாக இருப்பதை சுட்டிக் காட்டியிருந்தேன். அதுமட்டுமின்றி, மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்காக புதிய அரசு முழு வீச்சில் செயல்பட வேண்டும். யாருடைய வழிகாட்டுதலுக்கும் இடம் தராமல் அரசியல் சட்டத்தை மட்டுமே வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட வேண்டும். 

அரசின் திட்டங்கள் மற்றும் முடிவுகள் குறித்து அரசியல் சட்ட வரம்புக்குட்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் எவருடனும் விவாதிக்காமல், பதவியேற்பின்போது அரசியலமைப்பு சட்டத்தின் 164(3)பிரிவின் கீழ் ஏற்றுக்கொண்ட ரகசியக் காப்பு உறுதிமொழியை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன்.  

ஆனால், ஒவ்வொரு நாளும் தலைமைச் செயலகத்துக்கு சென்று நிர்வாகப் பணிகளை கவனிப்பதற்கு முன்பாக போயஸ் தோட்டத்துக்குச் சென்று வருகையைப் பதிவு செய்வதில்தான் முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆர்வம் காட்டுகிறார். நேற்று  முன்நாள் காலை போயஸ் தோட்டத்துக்கு சென்ற முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி ஆகியோர் சசிகலாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். 

அதைத் தொடர்ந்து நேற்றும் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, செல்லூர் ராஜு, காமராஜ், விஜயபாஸ்கர், பெஞ்சமின் ஆகியோர் தனித்தனி குழுக்களாக போயஸ் தோட்டத்துக்குச் சென்று சசிகலாவை சந்தித்து பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சரும், அமைச்சர்களும் தலைமைச் செயலகம் சென்று பணிகளைக் கவனிப்பதற்கு முன்பாக, எந்த அரசு பதவியிலும், அரசியலமைப்புச் சட்ட பொறுப்பிலும் இல்லாத தனிநபரான சசிகலாவைச் சந்தித்து பேசுவது எந்த வகையில் சரி? என்பது தெரியவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவு இதை அனுமதிக்கிறது என்பதும் புரியவில்லை. 

முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் சசிகலாவை அரசு நிர்வாகம் குறித்து விவாதிப்பதற்காக சந்திக்கவில்லை என்றும், உட்கட்சி விவகாரங்கள் குறித்து பேசுவதற்குத் தான் சந்தித்தனர் என்றும் அதிமுக சார்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்படலாம். அதிமுகவைப் பொருத்தவரை சசிகலா என்பவர் 77 செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே. ஆனாலும், உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக அவரை முதலமைச்சரும், அமைச்சர்களும் சந்தித்திருந்தால் அது உட்கட்சி விஷயம் என்பதால், அது குறித்து வினா எழுப்புவது நாகரீகமான செயலாக இருக்காது. 

ஆனால், ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் இந்த சந்திப்பு குறித்து அப்படி குறிப்பிடவில்லை. மாறாக, 8ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனையில் முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் கடந்த காலங்களில் எவ்வாறு செயல்பட்டார்களோ, அதேபோல் இனியும் செயல்பட வேண்டும் என்று சசிகலா அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. 9ஆம் தேதி நடந்த ஆலோசனையின்போது, தமிழக அரசின் சார்பில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கியதாகவும், அதன்படி தான் நேற்று காலை 11.30 மணிக்கு அமைச்சரவையை பன்னீர்செல்வம் கூட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தான்செயல்பட வேண்டும். மாறாக, அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்; எப்போது அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்றெல்லாம் அறிவுரை வழங்க சசிகலாவுக்கு அதிகாரமில்லை. அவ்வாறு ஆலோசனை வழங்கியிருந்தால் அது அரசின் செயல்பாடுகளில் தலையிடும் செயலாகும். இத்தகைய செயல்களை ஆட்சியாளர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. 

தமிழக அமைச்சர்கள் மட்டுமின்றி, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஜார்ஜும் சசிகலாவை நேற்று சந்தித்து பேசியுள்ளார். அரசுத்துறை செயலாளர்கள் பலரும் நேற்று சசிகலாவைச் சந்தித்ததாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் தான் கட்சி விவகாரங்கள் குறித்து விவாதிக்க சசிகலாவைச் சந்தித்தனர் என்றால், காவல்துறை ஆணையரும், அரசுத்துறை செயலாளர்களும் சசிகலாவை எதற்காக சந்திக்க வேண்டும்? அரசியலமைப்புச் சட்ட பதவி எதிலும் இல்லாத சசிகலாவை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சந்தித்தால் அது மிகவும் மோசமான நிர்வாக சீர்குலைவுகளை ஏற்படுத்திவிடும். சசிகலாவும், அவருக்கு நெருக்கமானவர்களும் தான் அமைச்சர்களை வழிநடத்துகின்றனர் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டு விட்டால், சசிகலாவும் அவரது உறவினர்களும் அரசு நிர்வாகத்தில் புகுந்து ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகிவிடும். 

இது ஜனநாயகத்துக்கு எந்த வகையிலும் நல்லதல்ல. எனவே, பதவியேற்பின்போது ஏற்றுக்கொண்ட ரகசியக்காப்பு உறுதிமொழியை மதித்து, அரசு நிர்வாகம் தொடர்பாக தெரியவரும் எந்த தகவலையும் மற்றவர்களிடம் தெரிவிப்பதையும், நிர்வாக அமைப்புக்கு அப்பால் உள்ளவர்களிடம் அரசு நிர்வாகம் குறித்து ஆலோசனை நடத்துவதையும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தவிர்க்க வேண்டும். அரசியல் சட்டத்தை மதித்து, அதன் வழிகாட்டுதல்படி மட்டும் ஆட்சி செய்ய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்வர வேண்டும். 

அவ்வாறு செய்ய தவறினால் அரசியலமைப்பு சட்டம் மற்றும் நீதித்துறை உதவியுடன் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ஆட்சியாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 Responses to போயஸ் கார்டன் என்ன தலைமைச் செயலகமா? - ராமதாஸ்

Post a Comment

Followers