Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள மலேஷியா தயாராக இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அப்துல் ரஷாக் தெரிவித்துள்ளார்.

மலேஷியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மலேஷியப் பிரதமர் அப்துல் ரஷாக்குக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, மலேஷியப் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  நாட்டில் நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்புதலும், நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துதலுமே தனது முதன்மையான எதிர்பார்ப்புகள் என்று குறிப்பிட்டதுடன்; அதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதுடன்,  பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக நட்பு நாடுகளின் ஒத்துழைப்புகளை பெற்று வருவதாகவும் கூறினார்.

இலங்கைக்கும் மலேஷியாவிற்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புதிய உடன்படிக்கைகள் மூலம் இருநாடுகளுக்குமிடையில் சுற்றுலா, கல்வி, விவசாயம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் போன்ற துறைகளில் புதிய உறவுகள் கட்டியெழுப்பப்படுமென தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை மாணவர்கள் மலேஷியாவில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முறைமையொன்றை தயாரிக்குமாறு மலேசிய பிரதமருக்கு ஆலோசனை வழங்கினார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் விவசாய அமைச்சர் என்ற வகையில் தான் மலேஷியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை நினைவுபடுத்திய ஜனாதிபதி, மலேஷியா விவசாயத் துறையில் அடைந்துள்ள முன்னேற்றத்தை தான் அவ்வேளையில் கண்ணுற்றதாகவும் இலங்கையின் விவசாயத்துறைக்கு மலேஷியாவின் தொழில்நுட்ப உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த மலேஷிய பிரதமர், இலங்கையின் சகவாழ்வு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இலங்கையுடன் முதலீட்டு, வர்த்தக வாய்ப்புக்களை அனைத்து துறைகளிலும் மேம்படுத்துவது மலேஷியாவின் எதிர்பார்ப்பாகுமெனவும் தெரிவித்தார். இலங்கையின் கல்வித்துறை அபிவிருத்திக்காக உதவுவதற்கு எச்சந்தர்ப்பத்திலும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப பயிற்சிக்காக மலேஷியாவில் கூடுதலான வாய்ப்புகள் உள்ளன. அத்துறையில் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையிலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

0 Responses to இலங்கையில் புதிய முதலீடுகளைச் செய்ய மலேஷியா தயார்; மைத்திரியுடனான சந்திப்பில் அப்துல் ரஷாக் தெரிவிப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.