Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாகச் செயற்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) வலியுறுத்தியுள்ளது.

கூட்டமைப்பினரை அன்று புலிகள் காப்பாற்றியதன் காரணமாகவே, இன்றைக்கு பரிகாரம் செய்வதற்காக கூட்டமைப்பினர் மாவீரர் தினம் அனுஷ்டித்து வருகின்றனர் என்றும் கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

கூட்டு எதிரணியின் முக்கிய கட்சியான பிவித்திரு ஹெல உறுமய கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அந்தக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேசத்தின் துரதிஸ்டத்திற்காக எதிர்க்கட்சி தலைவர் பதவி இலங்கையில் தடை செய்யப்பட வேண்டிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, போர்க் காலத்தில் தேர்தலின் போது ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களை அச்சுறுத்தி, கொலை செய்த விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு பாதை அமைத்துக் கொடுத்தது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளின் வேட்பாளர்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர்.

தேர்தல் கண்காணிப்பாளர்களின் அறிக்கைகளில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அக்காலத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச் செல்வனை சந்தித்து கலந்துரையாடியே அரசியலை செய்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.கே.ஈழவேந்தனின் வழக்கின்போதும் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அல்லது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் ஒன்று என கனேடிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

எனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவாகவே கூட்டமைப்பு செயற்படுகிறது என்பதை ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் அறிக்கையும், கனேடிய நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.

1945ஆம் ஆண்டில் ஹிட்லர் தோல்வியடைந்த பின்னர் அவரது கட்சியான நாசி கட்சியை ஜேர்மன் தடை செய்தது. 2003ஆம் ஆண்டில் சதாம் உசைனை தோற்கடித்த பின்னர் அவரது பாத் கட்சி தடை செய்யப்பட்டது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தடை செய்யப்பட வேண்டும். அந்தக் கட்சியின் செயற்பாடு இருக்கும் வரை வடக்கில் வேறு கட்சிகள் தலைதூக்குவது சாத்தியமற்றதாகும். விடுதலைப் புலிகள் தங்களை காப்பாற்றியதற்கான பரிகாரத்திற்காகவே கூட்டமைப்பு இன்று மாவீரர்களை நினைகூர்ந்து வருவதோடு வடக்கில் இனவாதத்தையும் விதைத்து வருகிறது.”என்றுள்ளார்.

0 Responses to விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாக செயற்படும் கூட்டமைப்பினை தடை செய்ய வேண்டும்: கூட்டு எதிரணி

Post a Comment

Followers