Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விமர்சன எழுத்தாள வித்தகர் சோ இராமசாமி மறைவு இதழியல் உலகுக்கு பேரிழப்பாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எழுத்தாளரும், நாடக உலகில் சிறப்பு முத்திரை பதித்தவருமான இனிய நண்பர் சோ இராமசாமி அவர்கள் மறைந்தார்! என்ற செய்தியை அறிந்த மாத்திரத்தில் மிகவும் வேதனைப்பட்டேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன்அவர்களின் பார் மகளே பார் திரைப்படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் முதன் முதலாக அவரை நான் திரையில் கண்டேன். அதுபோல பெரும்புகழ் பெற்ற தங்கப்பதக்கம் திரைப்படத்தில் அரசியல்வாதி, கவுன்சிலர் என இரட்டை வேடத்தில் நடித்த சோ இராமசாமி அவர்களின் அபாரமான நடிப்பு என்னைக் கவர்ந்தது. 

நான் சட்டக் கல்லூரியில் பயிலும்போது ஒரு திரைப்படத்தில் சோ இராமசாமி அவர்கள் நடித்த காட்சியில் மாணவர்களாகிய நாங்களும் உடன் பங்கேற்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்பொழுது அவருடன் நான் உரையாடியபோது, அவரது புத்திக்கூர்மை என்னை ஈர்த்தது.

அரசியல் ரீதியாக நான் சார்ந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை அவர் சாடினாலும், அவரது ‘முகமுது பின் துக்ளக்’ நாடகம் என்னை வியப்பின் எல்லைக்கே கொண்டுசென்றது. நெருக்கடி நிலை காலத்தில் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் துணிச்சலாக மத்திய அரசை விமர்சித்து எழுதினார். 

1999 நாடாளுமன்றத் தேர்தலின்போது அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களோடு திடீரென தி.மு.க. கரம் கோர்த்ததால் நான் வாஜ்பாய் அவர்களை விட்டு விலகிச் சென்றுவிடுவேன் என்று கருதி திரு சோ இராமசாமி அவர்களும், திரு  குருமூர்த்தி அவர்களும் எனது அண்ணாநகர் இல்லத்துக்கு வந்து ஒரு மணி நேரம் என்னோடு விவாதித்தனர். அதுபோல நான் பலமுறை துக்ளக் அலுவலகத்துக்குச் சென்று அவரோடும், துக்ளக் ரமேஷ் அவர்களோடும் விவாதித்திருக்கிறேன். அவரது இல்லத் திருமண விழாக்களுக்கு நான் சென்றுள்ளேன். 

துக்ளக் பத்திரிகையில் அவரது கேள்வி பதில் பகுதியை தவறாமல் படிப்பேன். 1989 தொடக்கத்தில் இலங்கை வன்னிக் காட்டுக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய பின் தி.மு.க. எடுத்த நிலைப்பாடு குறித்து துக்ளக் பத்திரிகையின் அட்டைப் படத்தில் அவர் போட்ட கார்டூன் மறக்க முடியாதது ஆகும். 

அவர் என்னைக் கடுமையாக கிண்டல் செய்து துக்ளக் கேள்வி பதிலில் எழுதுவதை நான் மிகவும் ரசிப்பேன். என்னுடைய இலக்கிய உரைகளைப் பற்றி அவர் மிகவும் சிலாகித்துப் பாராட்டி எழுதியதை பெருமையாகக் கருதுகிறேன். 

ராஜாஜி அவர்கள் எழுதிய வியாசர் விருந்து காவியமும், சக்கரவர்த்தி திருமகன் காவியமும் இலக்கிய உலகில் அழியாப் புகழ்பெற்றவை ஆகும். அதுபோலவே நண்பர் சோ இராமசாமி அவர்கள் மிக விரிவாக எழுதிய மகாபாரதம் பேசுகிறது எனும் உரைநடைக் காவியமும் இலக்கிய உலகில் அழியாத ஒளிச்சுடர் ஆகும். பல நேரங்களில் மகாபாரதம் குறித்த எனது ஐயங்களை அவரோடு பேசி விவாதிப்பேன். 

அவர் உடல் நலம்குன்றி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதெல்லாம் நான் நேரில் சென்று நலம் விசாரித்தேன். ஆனால் இம்முறை தமிழக முதலமைச்சர் சகோதரி ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது, நான் அங்கு சென்றும்கூட, நண்பர் சோ இராமசாமி அவர்கள் அங்கு அனுமதிக்கப்பட்டது எனக்குத் தெரியாததால் பார்க்க முடியாமல் போயிற்று.  உடல் நலம் மிகவும் கடுமையாக பாதிப்பட்டிருந்த நிலையிலும் அவரது உடல்தான் தளர்வுற்றதே தவிர, அவரது எழுதுகோல் ஓயவில்லை. 

டிசம்பர் 5ஆம் தேதி தமிழகத்தைக் கண்ணீரில் தவிக்கவிட்டு மறைந்த முதலமைச்சர் சகோதரி ஜெயலலிதா அவர்களின் உற்ற நண்பரான எழுத்தாளர் சோ இராமசாமி அவர்களும் அதே மருத்துவமனையில் டிசம்பர் 7 ஆம் தேதி அதிகாலையில் உயிர் நீத்தார் என்ற செய்தி, என் உள்ளத்தை மிகவும் வாட்டுகிறது. அவரது விமர்சன எழுத்துகள், இதிகாச படைப்புகள் காலத்தால் அழியாத புகழோடு நிலைக்கும். 

இனிய நண்பர் சோ இராமசாமி அவர்களது மறைவினால் துயரத்தில் தவிக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும், துக்ளக் பத்திரிகை நண்பர்களுக்கும், துக்ளக் வாசகர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

0 Responses to சோ ராமசாமி மறைவு இதழியல் உலகுக்கு பேரிழப்பாகும்: வைகோ இரங்கல்!

Post a Comment

Followers