Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அ.தி.மு.க.வின் சோதனையான காலக் கட்டத்தில் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வதுதான் ஒரே வழி என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அ.தி.மு.க.வில், அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவு காரணமாக அப்பொறுப்புக்கு அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க - அந்த அரசியல் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு வருகின்ற 29-12-2016 அன்று சென்னையில் கூடவிருக்கிறது. பல்வேறு வகையிலும் மக்களின் ஈர்ப்பும், செல்வாக்கும் பெற்று இருந்த தலைவரான ஜெயலலிதாவின் தலைமைக்குப் பிறகு - அக்கட்சியை வழி நடத்திச் செல்லவேண்டிய தலைமையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆயத்தங்கள் சட்டப்படி நடைபெறுகின்றன.

சசிகலா கடந்த பல ஆண்டுகளாக வெற்றி - தோல்விகளில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா எப்படிப்பட்ட வியூகங்களை வகுத்தார்; எந்தெந்த அஸ்திரங்களை எவ்வப்போது, யார் யார் மீது ஏவினார் என்பதை எல்லாம் நீக்கமற அவருடன் இருந்து புரிந்தவர் மட்டுமல்ல; அச்செயல் வடிவம் எடுக்கப் பெரும் பங்காற்றியவர் சசிகலா என்பதை எவரே மறுக்க முடியும்?.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான தி.மு.க. மிகுந்த முதிர்ச்சியுடன் - குறுக்கு வழிகளில் எதற்கும் ஆசைப்படாமல், கண்ணியத்துடன் அரசியல் நடத்துவது பாராட்டுக்குரியது. மறைந்த ஜெயலலிதாவை அறிந்தவர், அளந்தவர் - அவருடன் பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து பக்குவப்பட்டவர் என்ற கனிந்த நிலையில் முதிர்ச்சியுடன் உள்ள ஒருவர், அ.தி.மு.க.வின் சோதனையான இந்த காலகட்டத்தில் சசிகலாவை தேர்வு செய்வது, அடுத்தடுத்து வரவிருக்கும் சோதனைகளை எல்லாம் சந்திக்கும் சித்தத்துடன்
இருக்க ஒரே வழி - தடுமாற்றமோ, குழப்பமோ உங்களுக்கு இல்லை; உருவாக்க முயலும் இனப் பகைவர்களை, அரசியல் எதிரிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் அடையாளம் கண்டு நடந்துகொள்வதுதான் முக்கியம்.

சசிகலா இதுவரை கேடயமாய்ப் பயன்பட்டவர்; இனி வாளும் - கேடயமாய் நின்று அந்த இயக்கத்திற்குப் பயன்படுவார் என்பது நம் இனமானக் கண்ணோட்டம். போகப் போக இது மற்றவர்களுக்குப் புரியும். இயற்கை நடப்புகளை எப்போதும் எதிர்கொள்ளப் போதிய பக்குவமும் அவரிடத்தில் அபரிமிதமாய் உண்டு என்பதை இனிதான் அகிலம் காணும் வாய்ப்பு ஏற்படும் - வாய்ப்பே தராமல் எவரையும் மதிப்பிடலாமா?. நமக்குத் தனிப்பட்ட எந்த அபிமானமும் இல்லை; இந்தக் காலகட்டத்தில் தாய்க் கழகம் ஆற்றவேண்டிய கடமை இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 Responses to அ.தி.மு.க.வின் சோதனையான காலக் கட்டத்தில் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வதே வழி: கி.வீரமணி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...