Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கலைஞரை காணச் சென்றபோது நடந்தது என்ன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில்,நவம்பர் திங்களில் திமுக தலைவர் அண்ணன் கலைஞர் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என அறிந்த மாத்திரத்தில், சகோதரி கனிமொழி அவர்களிடம் தலைவர் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சியாகவும், கவலையாகவும் இருக்கிறது. தற்போது எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டேன்.

உடம்பில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. கஷ்டப்படுகிறார்கள். பயப்படும்படியாக இல்லை என்றார்.அடுத்த சில நிமிடங்களில் சகோதரர் மு.க.அழகிரி அவர்களிடம், அப்பா அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டேன், ஒன்றும் கவலைப்பட வேண்டாம். ஓரிரு நாட்களில் குணமடைந்து வீடு திரும்பிவிடுவார்கள் என்றார். நான் நிம்மதி அடைந்தேன். அவர்கள் இல்லம் திரும்பியபோது, என் மனம் அமைதி அடைந்தது.

டிசம்பர் 15 ஆம் தேதி அன்று தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டு, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது அறிந்து, மனம் தாங்கமுடியாத வேதனையுற்றது. அன்றுதான் டில்லியில் பிரதமர் நரேந்திரமோடி அவர்களை சந்தித்துவிட்டு, சென்னை வந்து விமானத்தில் திருச்சிக்கு சென்று அங்கிருந்து காரில் பயணித்து விடிற்காலை 3 மணிக்கு ராமேசுவரம் போய் சேர்ந்தேன்.

ஏற்கனவே நான் அறிவித்த மீனவர்களைப் பாதுகாக்கும் அறப்போராட்டம் டிசம்பர் 16 இல் திட்டமிட்டபடி அங்கு நடைபெற்றது. 15 ஆம் தேதி எனக்கு மிக நெருங்கிய உறவினராகிய ஒரு அம்மையார் தேனியில் மறைந்துவிட்டதால், ராமேசுவரத்திலிருந்து நேற்று டிசம்பர் 16ஆம் தேதி இரவு தேனி போய்ச் சேர்ந்தேன், உறவினர் வீட்டில் துக்கம் கேட்டாலும், மனமெல்லாம் காவேரி மருத்துவமனையைச் சுற்றியே வட்டமிட்டது.

காலை செய்தித்தாள்களைப் பார்த்து கலைஞர் அவர்கள் உடல்நலம் தேறி வருகிறார் என்ற செய்தி அறிந்து கவலை குறைந்தது.கலிங்கப்பட்டி கிராமத்தில் நாளை 18 ஆம் தேதி  ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்த நான், அதனை ரத்து செய்துவிட்டு, கலைஞர் அவர்களை மருத்துவமனையில் சந்திக்க வேண்டும் என்பதற்காக மதுரையிலிருந்து மாலை 5. மணிக்குப் புறப்பட்ட ஜெட் விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தேன்.

சென்னைக்கு வந்த உடன், விமான நிலையத்திலிருந்தவாறு சகோதரி கனிமொழியிடம், தலைவரைப் பார்க்க நான் காவேரி மருத்துவமனைக்கு வருகிறேன். தலைவரை பார்க்க முடியுமா? என்று கேட்டேன். அவர் சிசிக்சை பெறும் அறைக்குச் சென்று பார்க்க யாரையும் அனுமதிப்பது இல்லை என்றார். திரு ராகுல்காந்தி அவர்கள் அறைக்குள் சென்று பார்த்திருக்கிறாரே! பரவாயில்லை. நான் பார்க்க முடியாவிட்டாலும், உன்னையும் உன் சகோதரர்களையும், உன் அம்மா அவர்களையும் பார்த்து தலைவரின் நலம் விசாரித்துவிட்டுப் போகிறேன் என்று தகவல் தெரிவித்துவிட்டேன்.

எனவே, நான் அங்கு மருத்துவமனைக்கு கலைஞரை பார்க்க வரப்போவது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். திமுக பொருளாளர் திரு மு.க.Þடாலின் அவர்கள் அண்ணன் கோ.சி.மணி அவர்கள் படத்திறப்பிற்காக சென்றுள்ளார் என்ற செய்தியும் கிடைத்தது. அண்ணன் கோ.சி.மணி அவர்கள் மறைந்தபோது, அண்ணன் மணி அவர்களுக்கு நான் மலர் வளையம் வைக்கச் சென்றபோது, ஒருவரின் ஏற்பாட்டின் பேரில் சிலர் கூச்சலிட்டார்கள். ஆனால், அண்ணன் கோ.சி. மணி குடும்பத்தாரும், திமுக பழைய தோழர்களும் அவர்களை கண்டித்தார்கள். அன்று மாலையில் மேக்கிரிமங்கலத்தில் இரங்கல் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.ஆனால், ஆடுதுறைக்கு நான் சென்றபோது,  அதற்கு முன்பே அங்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுகவின் அனைத்து முன்னணியினரோடும் மயிலாடுதுறைக்குச் சென்றுவிட்டார்.

நான் சென்றபோது இன்னாள், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர்கூட அங்கு இல்லை. இரங்கல் கூட்டத்திற்கு சென்றால், அங்கும் ஏதாவது அசம்பாவிதம் நடைபெறலாம். அந்த நிகழ்ச்சிக்கு ஒரு சிறு குறையும் வந்துவிடக்கூடாது என்று கருதி, நான் என் திட்டத்தை மாற்றிக்கொண்டு ஊருக்குப்போய்விட்டேன். ஆனால், எங்கே நான் இரங்கல் கூட்டத்துக்கு வந்துவிடுவேனோ என்று கருதி அண்ணன் கோ.சி. மணி அவர்களுக்கு இரங்கல் கூட்டமே நடத்தப்படவில்லை.

மேக்கிரிமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் எதிர்க்கட்சி தலைவர் இரங்கல் கூட்டத்தை நடத்த முற்படவில்லை. படத்திறப்பு நிகழ்ச்சியின்போது பேசிக்கொள்ளலாம் என்றாராம். கழகத்தின் ஒரு கிளைச் செயலாளர் இறந்தாலும் இரங்கல் கூட்டம் நடத்துவது வழக்கம்.   20 ஆம் தேதி நடக்க இருந்த பொதுக்குழுவை ஒத்தி வைத்ததைப் போன்று, படத்திறப்பு நிகழ்ச்சியை மற்றொரு தேதிக்கு ஒத்திவைத்துவிடலாம். திமுக தலைவர் உடல்நலம் பாதிக்கப்பட்டது தெறிந்து அவரது அருகிலேயே இருந்திருக்கலாம். அதுபற்றி முடிவு எடுப்பது அவர்களது உரிமை. நான் வருவதை முன்கூட்டி அறிந்துகொண்டு, திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரின் தொலைபேசி ஏற்பாட்டின் பேரில்தான் என்னைத் தாக்குவதற்கு திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்டு, 10 பெண்கள் உட்பட 70 பேர் மருத்துவமனைக்கு அருகில் திடீரென்று குவிக்கப்பட்டார்கள். நானும் மல்லை சத்யா அவர்களும், முராத் புகாரிங அவர்களும், 7 மாவட்டச் செயலாளர்களும் காவேரி மருத்துவமனையை நெருங்கும்போதே அதில் முதல் காரில் முன் இருக்கையில் வந்த என்னை நோக்கி செருப்புகளும், கற்களும் வீசப்பட்டன. கார் மீது மரக்கட்டைகள் வந்து விழுந்தன.

என் பின்னால் வந்த வண்டிகளில் வந்த தோழர்கள் நியாயமான ஆத்திரத்தோடு முன்னால் ஓடிவந்தார்கள். நான் காரைவிட்டு இறங்கி, அவர்கள் அனைவரையும் சத்தம்போட்டு, அவர்கள் தாக்கினால் தாக்கட்டும். நாம் திரும்பிச் சென்றுவிடுவோம் என்று கூறியவாறு அங்கிருந்து நாங்கள் சென்றுவிட்டோம்.   நடந்த சம்பவத்தை அறிந்து சகோதரர் மு.க.அழகிரி அவர்களும், சகோதரர் மு.க.தமிழரசு, சகோதரி செல்வி, ராஜாத்தி அம்மாள் அவர்களும் மிக மிக வருத்தப்பட்டார்கள் என்பதை உடனடியாக அறிந்தேன்.

எனது தாயார் மாரியம்மாள் 2015 நவம்பர் 6 ஆம் தேதி மறைந்தபோது, அன்று இரவு கலிங்கப்பட்டி வீட்டுக்கு சகோதரி கனிமொழி துக்கம் கேட்க வந்தார்கள். மறுநாள் காலையில், சகோதரர் மு.க.Þடாலின் அவர்கள் என் வீட்டுக்கு வரும்போது வாசலுக்கு வெளியில் இருந்தே அவரை மிக மரியாதையாக அழைத்துச் சென்று, என் தாயாரின் உடலுக்கு அவர் மலர்வளையம் வைத்தபின் வீட்டுக்குள் அழைத்துச் சென்று அவரை கௌரவமாக நடத்தி, பின்னர் வெளியில் வந்து மிக கவனமாக காருக்கு அனுப்பி வைத்தேன்.

முயலோடும் ஓடுவது, ஓநாயோடும் சேர்ந்து விரட்டுவது என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்ற தமிழ்ப் பழமொழி ஒன்றும் உண்டு. அது யாருக்குப் பொருந்தும் என்பதை இந்த நேரத்தில் தமிழக மக்களின் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1964 இல்  அறிஞர் அண்ணா முன்னிலையில் உரையாற்றி, அந்த இயக்கத்தின் மாணவர் பிரிவில் பணியாற்றி, 1965 ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிந்த பின்பு மாநிலக் கல்லூரி விக்டோரியா விடுதி தமிழ் மன்றத் தலைவராக இருந்த நான், கலைஞர் அவர்களை அழைத்துச் சென்று எனது தலைமையில் புதிய புறநானூறு என்ற தலைப்பில் உரையாற்றச் செய்தேன்.

1969 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் சட்டக் கல்லூரியில் அறிஞர் அண்ணா சிலையை திறந்து வைக்க அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களை அழைத்துவந்து, ஆங்கிலத்தில் நான் வாசித்துக்கொடுத்த வரவேற்பு மடல்தான் 20 ஆண்டுகள் கோபாலபுரம் வீட்டில், அவர் பார்வையாளர்களை சந்திக்கின்ற இடத்தில் இடம் பெற்ற ஒரே ஒரு வரவேற்பு மடலாக சுவற்றில் இடம்பெற்றது. என் உயிருக்கு மேலாக அவர் மீது பக்தி செலுத்தினேன். அவரது நிழலில் வளர்ந்தேன். மூன்று முறை என்னை மாநிலங்கள் அவைக்கு அனுப்பி வைத்தார். அவர்மீது துரும்புவிழ அனுமதிக்காதவனாக வாழ்ந்தேன்.

காலச் சுழற்சியில் நான் திமுகவிலிருந்து நீக்கப்பட்டேன். ஆயினும், அவர்

படைத்த சங்கத் தமிழும், குறளோவியமும், பொன்னர் சங்கர் உள்ளிட்ட

காவியங்களும் காலத்தை வென்று நிற்பவை என்று அரசியல் ரீதியாக மாறுபட்டு

நின்ற காலத்திலும் சொல்லி வந்திருக்கிறேன்.

என் உதிர அணுக்களில் நன்றி உணர்ச்சி நீக்க முடியாதது. அவர் உடல்நலம்

குறைந்து கஷ்டப்படுகிறாரே என்று நான் எவ்வளவு வேதனை அடைந்திருப்பேன்

என்பது என் மனசாட்சிக்குத்தான் தெரியும்.தலைவர் கலைஞர் அவர்கள் முழுமையாக

உடல்நலம் பெற்று, வழக்கமான பணிகளை தொடர இயற்கைத் தாயின் அருளைப்

பிரார்த்திக்கிறேன்.

இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு எதிரே நடைபெற்ற சம்பவத்தை கழகக்

கண்மணிகள் பொருட்படுத்த வேண்டாம் என்பதோடு, எனக்கு இந்த சம்பவத்தால் எவர்

மீதும் ஆத்திரமோ, வெறுப்போ அணு அளவும் இல்லை என்பதையும்

தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிவித்து உள்ளார்

0 Responses to கலைஞரை காணச் சென்றபோது நடந்தது என்ன?: வைகோ

Post a Comment

Followers