Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒற்றையாட்சியின் கீழ் அனைவரதும் ஒத்துழைப்புடன் ஆகக்கூடிய அதிகாரப் பரவலாக்கல் மூலம் நாட்டில் நிலவுகின்ற சமச்சீரற்ற நிலையை அகற்றி, அனைவரும் சமமாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் புதிய அரசியல் அமைப்பைத் தயாரிப்பதற்கு உறுதிபூண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை காலை அதன் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் கட்சித் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. அதன்போதே, மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறக் கூடிய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனைகளின்படி ஜனாதிபதி அவரது அதிகாரங்களைச் செயற்படுத்துவதன் மூலம் பாராளுமன்றத்தின் உயர்தன்மையைப் பாதுகாக்கவும் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசமுள்ள விசேட அதிகாரங்களில் அவ்வாறே இடம்பெற முடியும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“2015 பாராளுமன்றத் தேர்தலில் நாம் நாட்டு மக்களுக்கு முன்வைத்த 5 அம்ச வேலைத்திட்டம் கொள்கையறிக்கையின் பிரகாரம் நாட்டில் ஜனநாயகத்தை மேலும் வலுவடையச் செய்யும் பொருட்டு நல்லாட்சி அடிப்படையில் அரசதுறைக்கு மேலும் வலுச்சேர்க்கக் கூடிய வகையில் பிரதேச பிரதிநிதித்துவங்களை பலமடையச் செய்து பிரதேச மட்டத்தில் காணக்கூடிய சமச்சீரற்ற முறையை இல்லாதொழித்து மனித உரிமைகள் மேலும் வளமடையச் செய்து மக்கள் குழுக்களுக்கும் தனி நபர்களுக்குமிடையில் காணப்படுகின்ற சமச்சீரற்ற முறையை இல்லாதொழித்து சமநிலையை வலுவடையச் செய்யும் வகையில் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பொருட்டு அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது அனைத்துக் கட்சிகளுடனும் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அந்தக் கொள்கையறிக்கையின்படி கிடைக்கப் பெற்ற மக்கள் ஆணையின் பிரகாரம் ஒற்றையாட்சியின் கீழ் அனைத்துத் தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் செய்யக் கூடிய விதத்தில் உச்சகட்ட அதிகாரப் பரவலாக்கலை செய்வதற்கும்

பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக் கூடிய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி தமக்குரிய அதிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் பாராளுமன்றத்தின் உன்னதத்தன்மையை பாதுகாத்துக் கொள்ளவும் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பயன்படுத்தப்படும் விசேட அதிகாரங்களை அதே நிலையில் பயன்படுத்தவும், விருப்புவாக்கு முறையை முடிவுக்குக் கொண்டுவந்து விகிதாசார முறை மற்றும் தொகுதி அடிப்படையிலான தேர்தலை நடத்துவதற்குரிய விதத்தில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்கவும் 6 உப குழுக்கள் முன்வைத்த அறி்க்கைகளையும் எதிர்காலத்தில் செயற்பாட்டுக் குழு முன் வைக்கும் அறிக்கையையும் கருத்தில் கொண்டு நாங்கள் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணைக்கு இயைவான விதத்தில் இணக்கப்பாடு தெரிவிக்கவும் முழுமையான அரசியல் அமைப்பு நகலை தயாரித்ததன் பின்னர் செயற் குழுவின் இணக்கப்பாட்டுடன் அதற்கு அனுமதியைப் பெற்றுக்கொடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.

ஜனநாயகம் மனித உரிமைகள், சுதந்திரம், அடிப்படை உரிமைகள், மக்களிள் இறைமை மட்டுமன்றி பாராளுமன்ற அதிகாரத்தையும் காலில் போட்டு மிதித்து குடும்ப ஏகாதிபத்திய இருண்டயுகத்தை நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட எமது தாயகத்தை ஜனவரி 8ஆம் திகதி ஜனநாயகப் புரட்சியின் மூலம் மீட்டெடுத்து மீண்டும் உன்னத நிலைக்குக் கொண்டு செல்லும் சவால்மிக்க பணியொன்றுக்கு பங்களிப்புச் செய்த அனைத்து சமூகத்தவர்களுக்கும் எங்களுடைய நன்றியைத் மீண்டுமொரு தடவை சமர்ப்பித்துக் கொள்கிறோம்.” என்றுள்ளது.

0 Responses to ஒற்றையாட்சியின் கீழ் ஆகக்கூடிய அதிகாரப் பரவலாக்கம்: ஐ.தே.க செயற்குழு தீர்மானம்!

Post a Comment

Followers