Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்திலுள்ள மக்கள் ஏற்காத பொருத்து வீடுகளை அரசாங்கம் திணிக்க முயலும் காரணத்தை கூற வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்க விரும்பாத பொருத்து வீடுகளை திணிக்க முயலும் காரணத்தைக் கூறவேண்டிய கட்டாயம் துறைசார் அமைச்சரான டி.எம்.சுவாமிநாதனுக்கு உண்டு. எம் மக்களுக்கு வீடு வேண்டும் என்பதனை நாம் மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். அது கல்வீடாக இருக்க வேண்டும். அதற்காக தொங்கிக் கொண்டிருக்கும் வீடுகளை நாம் ஏற்க மாட்டோம் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

பொருத்து வீடுகள் திட்டத்தை யார் எதிர்த்தாலும் செயற்படுத்துவேன் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ள நிலையிலேயே, சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பொருத்து வீடுகள் தொடர்பில் தனிப்பட்ட விருப்பில் இருந்து அகன்று, அதாவது சில்லறை அரசியல் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் அன்றி எமது மக்களுக்கான தேவையை அவர்களின் விருப்பத்திற்கேற்ப நிறைவு செய்ய முன்வரவேண்டும்.

மீள்குடியேற்ற அமைச்சரை எனக்கு 50 வருடமாகத் தெரியும். ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சியின் பின்னர்தான் இத் திட்டம் எமது மக்களுக்கு பொருந்தாது என்று வடக்கு மாகாண சபை ஓர் முடிவை எடுத்தது என்பதனை அவர் உணரவேண்டும். அதற்கும் அப்பால் இதற்கு தற்போது கூறுவதும், ஓர் ஏற்றுக் கொள்ளமுடியாத விலை. இத் திட்டத்தினை திணிப்பதனால் எதிர் காலத்தில் சமுதாயப் பிரச்சனைகளும் ஏற்படும்.

இவ்வாறான நிலையில் இதை முன்னெடுக்க ஏன் முயற்சிக்கப்படுகின்றது என்பதே எனக்குப் புரியவில்லை. அதேநேரம் இத் திட்டத்தினை நாம் மட்டும் எதிர்க்கவில்லை, இத் திட்டத்திற்கு அரசாங்கத்திற்குள்ளும் எதிர்ப்பு உண்டு. அதேநேரம் மக்கள் விரும்பாத எந்த திட்டத்தினையும் மக்கள் மீது திணிக்கக்கூடாது என ஜனாதிபதியும் கூறியதை இப்போது நினைவில் வருகிறது.

எமது பிரதேச காலநிலை நிலைக்குப் பொருந்தாதிருக்கும் இத் திட்டமானது மலையக காலநிலைக்கு பொருந்தக்கூடும். அவ்வாறு பொருந்தினால் அது தொடர்பில் மலையக தலைவர்களுடன் பேசவேண்டும். அவர்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில் ஓர் நாசகாரத் திட்டத்தினை அரசாங்கம் எம்மீது திணிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எமது மக்களுக்கு வீடு வேண்டும் என நாம் தொடர்ந்தும் கூறுவோம். அதற்கு பொருத்துவீடு உசிதமல்ல. பொருத்தமான உசிதமான மாற்றுத் திட்டத்தினையே கண்டு பிடிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு மக்கள் ஏற்காத பொருத்து வீடுகளை அரசு திணிக்கும் காரணத்தைக் கூற வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...