Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் நடைபெறவுள்ள தேர்தலை அடுத்து கொங்கோ ஜனநாயகக் குடியரசின் அதிபரான ஜோசெஃப் கபிலா பதவி விலகுவார் என அண்மையில் கொங்கோ அரச கட்சிகள் எட்டிய சட்ட வரைவின் பிரகாரம் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக கத்தோலிக்க தேவாலயத்தின் முக்கிய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் கைச்சாத்திடப் படாத குறித்த ஒப்பந்தப் படி கபிலாவால் இனிமேல் கொங்கோ அரச சட்டங்களில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது எனவும் இதனால் 3 ஆவது முறையாகவும் அதிபராக அவரால் நீடிக்க முடியாது எனவும் கொங்கோவின் கத்தோலிக்க பிஷோப் மாநாட்டின் அதிபர் மார்செல் உட்டெம்பி தெரிவித்துள்ளார். கென்யாவில் இருந்து இவ்விடயம் தொடர்பில் தகவல் அளித்த அல் ஜசீரா ஊடகத்தின் நிருபர் ஃபஹ்மிடா மில்லெர்  இன் கூற்றுப் படி கொங்கோவில் இடைக்கால அரசு தேர்தலுக்குப் பின் அடுத்த வருடம் மார்ச் மாதம் அளவில் நிறுவப் படலாம் எனத் தெரிய வருகின்றது.

இந்த இடைக்கால அரசின் போது எதிரணியில் இருந்தே புதிய பிரதமராக ஒருவர் நிர்ணயிக்கப் படவும் திட்டமிடப் பட்டுள்ளதாகவும் அரசியல் அழுத்தம் காரணமாக நாடு கடந்து வாழும் கொங்கோ அரசியல் வாதிகளும் பயமின்றி நாடு திரும்ப முடியும் எனவும் ஃபஹ்மிடா மில்லெர் தெரிவித்துள்ளார்.  கொங்கோ அரசியல் கட்சிகளின் குறித்த ஒப்பந்தம் இறுதி செய்யப் படுமிடத்து 1960 ஆம் ஆண்டு அந்நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அதன் முதலாவது அமைதியான அரசியல் அதிகார மாற்றம் இடம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய அதிபர் கபிலாவின் இரண்டாவது ஆட்சிக் காலம் டிசம்பர் 19 உடன் முடிவடைகின்ற போதும் அவரின் கீழ் வேலை பார்க்கும் அதிகாரிகளால் இந்த ஆட்சிக் காலம் 2018 வரை நீட்டிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கபிலாவின் இந்த நடவடிக்கை கொங்கோவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறக் காரணமாக அமைந்ததுடன் கடந்த வாரம் மட்டும் ஆர்ப்பாட்டக் காரர்களின் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 40 பேர் கொல்லப் பட்டிருந்தனர். கொங்கோவில் அமைதியான அதிகார மாற்றம் ஏற்படத் தவறும் பட்சத்தில் அது 1996 தொடக்கம் 2003 ஆம் ஆண்டு வரை கிழக்கு கொங்கோவில் மில்லியன் கணக்கான மக்களின் உயிரைப் பலி வாங்கிய குழப்ப நிலைக்கு ஈடாக இன்னொரு குழப்பத்தைத் தோற்றுவிக்கும் என மேற்குலக மற்றும் ஆப்பிரிக்க சக்திகள் பயப்படுகின்றன. கிழக்கு கொங்கோவின் குழப்பநிலையில் பெரும்பாலான மக்கள் நோய் மற்றும் வறுமையால் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to 2017 இறுதிக்குள் பதவி விலகும் நெருக்கடியில் கொங்கோ அதிபர் ஜோசெஃப் கபிலா

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...