Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெரும்பான்மை இனத்திற்கும், பெரும்பான்மை மதத்துக்கும், பெரும்பான்மை மொழிக்கும் அடிமைப்பட்டு சேவகம் செய்வதுதான் தேசிய ஐக்கியம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், தேசிய ஐக்கியம் என்ற போர்வையில் சிறுபான்மையினரின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய சகவாழ்வுக்கான இளைஞர் தலைமைத்துவ மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மனோ கணேசன் கூறியுள்ளதாவது, "சிறுபான்மையினராகிய நாம் பெரும்பான்மையினருக்கு கைகட்டி நிற்பதானது சரணடைவது போன்றதாகும். ஆண்டானுக்கும் அடிமைக்குமிடையில் ஒருபோதும் சமத்துவம் வராது. தேசிய ஐக்கியம் என்ற பெயரில் எங்களது மொழியை, மதத்தை, இனத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டு விழுமியங்களை விலைபேசி விற்க முடியாது.

கட்சிகளுக்கு மத்தியில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் இனம், மதம், மொழி என்று வரும்போது நாங்கள் ஒன்றுபட்டே ஆக வேண்டும். சிறுபான்மையினர் ஒன்று சேர்வது என்பது சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல. பெரும்பான்மை சமூகத்தில் நேர்மையானவர்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களுக்குள் இருக்கின்ற ஒரு சிறுகுழுவினர்தான் சிங்கள மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றனர்.

இலங்கையில் மூன்று மொழிகளும் நான்கு மதங்களும் பத்தொன்பது இனக்குழுக்களும் இருக்கின்றன. இவைகள் எல்லாம் சேர்ந்ததே இலங்கை எனும் எமது நாடு. இந்த நாட்டில் ஒரு மொழி, ஒரு மதம், ஒரு இனம் என்ற கதை செல்லுபடியாகாது. இந்த கோட்பாட்டுக்கு மத்தியிலேயே தேசிய ஐக்கியம், சகவாழ்வு, நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இப்போது ஆட்சி செய்யும் நல்லாட்சி அரசு நீடிக்க வேண்டும். இந்த ஆட்சியின் ஊடாகவே உண்மையான சகவாழ்வை உருவாக்க முடியும்.

மக்களின் எதிர்பார்புக்களை கஷ்டம் என்று பாராது நிறைவேற்றிக் கொடுப்பவனே உண்மையான அரசியல்வாதி. நாங்கள் பாராளுமன்றம் சென்றிருப்பதும் அமைச்சரவை அமைச்சராக இருப்பதும் தேங்காய் திருவுவதற்கு அல்ல. மக்களுக்கு பணியாற்றுவதற்காகவே. தொலைபேசி அழைப்பு வந்தால் அதற்கு பதிலளிக்க மாட்டேன், சமூக ஊடகங்களிலே மக்களுடன் கலந்துரையாட மாட்டேன், மக்களை சந்திக்க மாட்டேன், அவர்களது கோரிக்கைகளை செவிமடுக்க மாட்டேன் என்று நினைப்பவர்கள், பாராளுமன்றத்தில் இருக்க லாயக்கற்றவர்கள்.

எப்போது நான் செய்யும் மக்கள் பணி எனக்கு தொல்லையாக தெரிகிறதோ அன்றே தான் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வேன். எனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு, ஏனைய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போன்று பாலம் கட்டுவதற்கோ அல்லது கட்டிடங்கள் அமைப்பதற்கோ உரியதல்ல. அது மனித மனங்களுக்கிடையே சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான பணியை செய்து வருகின்ற அமைச்சாகும். இன்றைய காலகட்டத்துக்கு இதுவே மிகப்பிரதானமான தேவையாக இருக்கிறது.” என்றுள்ளார்.

0 Responses to தேசிய ஐக்கியம் என்கிற போர்வையில் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது: மனோ

Post a Comment

Followers