Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் நாங்கள் எங்களை சிறுபான்மையினர்களாகக் கொள்ளவில்லை. நாம் எமது பிரதேசத்தில் பெரும்பான்மையினர்தான். 1919 தொடக்கம் சிங்களத் தலைவர்கள் இதை ஒப்புக்கொண்டுள்ளர்கள். எனவே, அதிகாரப்பகிர்வுக்கு முழு உரித்தான நாங்கள் இதைக் கோர முடிவதோடு எங்கள் வேலைகளை நாங்களே பார்த்துக் கொண்டு இருக்கவும் முடியும்.” என்று வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

50 வருடங்களுக்கு மேலாக ஒரு சட்டத்தரணியாகவும் அதில் பாதிக் காலம் நீதிபதியாகவும் பணியாற்றிய எனக்கு நாட்டின் பாதுகாப்பு பற்றிய அக்கறை இருக்கின்றது. எனவே, பயங்கரவாத முகத்தோடு எங்கள் மக்களைப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே வடக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கௌரவ அமைச்சர் அவர்களே நான் முதலமைச்சராக கனடா பயணமாகி அங்கு வாழ்கின்ற இலங்கை மக்களைச் சந்தித்தேன். அவர்கள் எல்லோருமே எங்கள் திறன் அபிவிருத்தி, முதலீட்டு முன்னேற்ற ஆக்க முயற்சி, கலாச்சார பரிமாறல் போன்றவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். எல்லோருமே நாட்டோடு இசைந்து இவற்றைச் செய்யத் தயாராக உள்ளார்கள்.

ஆனால், அரசும் அதிகாரிகளும் வெளி நாட்டு இலங்கையர் மீது கொண்டுள்ள சில கருத்துக்கள் இவர்களை இலங்கை வராது தடுக்கின்றன. தெரிவு செய்யப்பட்ட தடை நீக்கங்களைக் கொண்டுவராமல் எல்லா அமைப்புகளின் தடையையும் நீக்கி இங்கு வரும் ஒவ்வொரு நபரையும் நன்கு விசாரணை செய்யுங்கள் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

எங்கள் நலனுக்காக இவர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கி இவர்கள் திறமைகளைப் பயன்படுத்தி பணமுடையில் இருக்கும் அரசுக்கு இவர்கள் பணம் போய்ச்சேரும் வழியைப் பார்க்க வேண்டும் .

இன்னொரு முக்கிய விடயம் பற்றியும் நான் இங்கே வெளிக்காட்டியாக வேண்டும். காணமற்போனவர்களுக்காக அவர்கள் உறவுகள் உண்ணாவிரதம். ஆரம்பித்து இது நான்காவது தினம். மருத்துவர்கள் நேற்றிரவு இவர்களைப் பரிசோதித்து கோமா நிலையை இவர்கள் அடைந்து விட்டதாகக் கூறுகிறார்கள். இவர்களுக்கு உறுதி அளிக்கும் விதத்தில் ஏதாவது செய்யப்படல் வேண்டும் . ஒரு கூட்டத்தில் ஒரு தாய் தன் மகளின் படத்தை தூக்கிப் பிடித்தபடி நிற்பதைக் காணமுடிகிறது. குறைந்தபட்சம் இந்தப் இந்தப் பெண்ணின் இருப்பிடத்தையாவது கண்டுபிடிக்க வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக அவர்கள் இறந்து விட்டார்கள் அல்ல்லது வெளிநாடு போய்விட்டார்கள் என்று கூறுவது தவறு. உண்ணாவிரதம் இருப்பவர்களில் எவராவது இறந்தால் விளைவுகள் பாரதூரமாக மாறலாம். எனவே மிகவும் மோசமான உடல் நிலையில் இருக்கும் இவர்கள் சம்பந்தமாக உடன் நட வடிக்கை எடுக்கும்படி நான் அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கை வந்தபோது ஒரு விசேஷ செய்தியாளர் கொடூரமான மனிதபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டார் என்று ஒரு அறிக்கை எனக்குக் கிடைத்தது. இங்குள்ள நிலைமையை இது தெளிவாகவே விளக்குகின்றது.

இன்னொரு விடயத்தை நான் சொல்கிறேன் பரவலாக்கலுக்கும் அதிகாரப்பகிர்தலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அமைச்சர் நன்கு அறிவார். இங்குள்ள தூதரக அலுவலகங்களில் பரவலாக்கலை கொண்டு வருவதன் மூலம் கொழும்பு மத்தி விடாப்பிடியாக ஒன்றை வைத்திருப்பதை விட பலர் இதை பகிர்ந்து செய்ய முடியும் .

கிழக்கிலும் வடக்கிலும் இருக்கும் நாங்கள் எங்களை சிறுபான்மையினர்களாகக் கொள்ளவில்லை. நாம் நமது பிரதேசத்தில் பெரும்பான்மையினர்தான். 1919 தொடக்கம் சிங்களத் தலைவர்கள் இதை ஒப்புக்கொண்டுள்ளர்கள். எனவே அதிகாரப்பகிர்வுக்கு முழு உரித்தான நாங்கள் இதைக் கோர முடிவதோடு எங்கள் வேலைகளை நாங்களே பார்த்துக் கொண்டு இருக்கவும் முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to அதிகாரப்பகிர்வினை கோருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers