Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் ஈழ விடுதலைப் போருக்கு ஆயுதக்களம் அமைத்த மாமனிதர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்: நிற்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.

இன்று எம்ஜிஆர் பிறந்த தினம்.இதை முன்னிட்டு வைகோ அறிக்கை விடுத்துள்ளார். ,அறிக்கையில்,என் மடியில் விழுந்தது ஒரு கனி. அதனை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் போற்றப்பட்ட அன்றைய புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களைக் குறித்து, 1967 ஜனவரி 1 ஆம் நாள், சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாட்டின் நிறைவு நாள் பேருரையில், தமிழர்களின் சகாப்த நாயகன் பேரறிஞர் அண்ணா அவர்கள்,

“என் இனிய நண்பர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள், கழகத்திற்கு நிதி தருவதாகச் சொன்னார். நிதி வேண்டாம். உங்கள் முகத்தைக் காட்டினால் தொகுதிக்கு 30 ஆயிரம் வாக்குகள் அதிகமாகக் கிடைக்கும்” என்று கூறியபோது, மண்தரையில் அமர்ந்து இருந்த மக்கள் கடல் விண்ணதிர ஆரவாரம் செய்தபோது, அப்படிக் கைதட்டியவர்களுள் ஒருவன்தான், அப்போதைய சட்டக்கல்லூரி மாணவனாகிய
நான்.

பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்ட பொன்மனச் செம்மல், பிரச்சாரம் முடிந்து நண்பகல் தாண்டி வீடு திரும்பியபோது, அங்கு சந்திக்க வந்த நடிகவேள் எம்.ஆர்.இராதாவால் சுடப்பட்டார்.

காட்டுத் தீயெனச் செய்தி பரவியபோது கலங்கிப் போய், இராயப்பேட்டை அரசு மருத்துவமனை நோக்கி ஓடியவர்களுள் நானும் ஒருவன்.

அந்த நேரத்தில், தேர்தல் களத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள்
மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்ற தோற்றத்தில், கழுத்தில் இருந்து
சிரசு வரை கட்டுப்போட்டு அமர்ந்து இருக்கின்ற படம், தமிழகமெங்கும்
வாக்காளர்களிடம் திமுக ஆதரவு அலையாக எழுந்ததை, அக்களத்தில் நேரடியாகக்
கண்டேன்.

1969 ஜனவரி பிற்பகுதியில் புற்றுநோய் முற்றிய நிலையில், பேரறிஞர் அண்ணா
அவர்கள் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, ஜனவரி
26 குடியரசு நாளில், சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில்,
இந்தி இசை நிகழ்ச்சி நடத்திய மாணவர்களைத் தாக்கியதற்காக நான்
சட்டக்கல்லூரியில் இருந்து இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டு
இருந்தேன். நண்பர் முரசொலி செல்வம், விருதுநகர் சீனிவாசன், எல்.கணேசன்
ஆகியோரின் உதவியோடு, ஒரு வார காலம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையிலேயே
இருந்தேன்.

மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் அங்கிருந்த கழகத் தலைவர்களுக்கும்
காலை, நண்பகல், மாலை, இரவு என ஒவ்வொரு வேளைக்கும் சிற்றுண்டி, தேநீர்,
உணவு எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் வேனில் கொண்டு வந்து வழங்கிக் கொண்டே
இருந்தார்கள். எம்.ஜி.ஆரின் ஓட்டுநர் இராமசாமியோடு அன்பாகப் பேசி நிறைய
விவரங்களை அறிந்து கொண்டேன். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிர்வாகிகள், அவரது
மெய்க்காப்பாளர்களிடமும் பேசி, எம்.ஜி.ஆர் சுடப்பட்டபோது நடந்த
நிகழ்வுகளைப் பற்றிக் கேட்டேன்.

அதற்கு அவர்கள், “குண்டுச்சத்தம் கேட்டுத்தான் அறைக்குள் ஓடினோம்.
வாத்தியார் (எம்.ஜி.ஆர்) கழுத்தில் இருந்து ரத்தம் கொப்பளித்துக்கொண்டு
இருந்தது. அந்த நிலையிலும் கழுத்தைப் பிடித்துக் கொண்டு இராதா அண்ணனைக்
காப்பத்துங்க... அவரை உடனே ஆஸ்பத்திரிக்கு அனுப்புங்க என்று சொன்னார்”
என்றார்கள்.

(எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டு இராதா தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.)

எம்.ஜி.ஆர் என்ற மாமனிதரை, மனிதநேயத்தின் சிகரமாக, மானசீகமாகப் போற்றினேன்.

1971 பொதுத் தேர்தலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்
பிரச்சாரத்திற்கு வந்தபோது, சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில்
போட்டியிட்ட சகோதரர் ச. சுப்பையா அவர்களை ஆதரித்து, நகரச் செயலாளர்
பி.காம் பழநிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
பேசுவதற்காக வரும் எம்.ஜி.ஆர் அவர்களை வரவேற்று எல்லையில் இருந்து காரில்
பின்தொடர வேண்டும் என்று இராஜபாளையம் சாலையில் காத்திருந்துவிட்டு இரவு
ஒரு மணிக்கு மேல் அங்கிருந்து புறப்பட்டு இராஜபாளையம்,
திருவில்லிபுத்தூர் வழியாகச் சிவகாசிக்குச் சென்றேன்.

அங்கே நண்பர் காளிமுத்துவை ஆதரித்து அதிகாலை 2.30 மணிக்கு எம்.ஜி.ஆர்
பேசினார். இலட்சக்கணக்கான மக்கள் கடல்.

சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் வழிநெடுகிலும்
நடுச்சாமத்திற்குப் பின்னரும் இலட்சக்கணக்கான மக்கள் எம்.ஜி.ஆர்
அவர்களின் முகத்தைப் பார்க்கக் காத்துக் கிடந்ததைக் கண்டு, வியப்பின்
உச்சிக்கே சென்றேன்.

இராஜபாளையம் கூட்டம் முடிந்து அதிகாலை 4.00 மணிக்கு சங்கரன்கோவிலுக்கு வர
வேண்டியவர் அங்கிருந்து திரும்பி மதுரைக்குப் போய்விட்டார். பாண்டியன்
ஓட்டலில் ஓய்வு எடுக்கின்றார்.

மறுநாள் மாலையில் எப்படியும் அவரை நெல்லை மாவட்டத்திற்கு அழைத்து வந்து
விடவேண்டும் என்று நான் வெள்ளத்துரைப் பாண்டியன், கா.மு. கதிரவன், ஆலடி
அருணா ஆகியோர், பகல் 12 மணிக்கு, எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் அவரது
அறைக்குச் சென்றோம்.

நான் நெல்லை மாவட்டச் சுற்றுப்பயணத்திற்கு வந்தால், அடுத்த மூன்று
மாவட்டங்களுக்குப் பிரச்சாரத்திற்குச் செல்ல முடியாமல் போய்விடும். எனவே,
வர வாய்ப்பு இல்லை என்றார்.

படுக்கையில் படுத்தவாறு கழுத்தளவு போர்வையை மூடிக்கொண்டு தலையில் தொப்பி
இல்லாமல் தலைமுடி பொலிவாக இருந்த சூழலில் அவரைப் பார்த்து “உங்கள்
முகதரிசனத்திற்காகவே மக்கள் ஏங்குகிறார்கள். நீங்கள் எங்கும் ஐந்து
நிமிடங்களுக்குமேல் பேச வேண்டாம். மக்கள் வழிநெடுகிலும் விடிய விடிய
ரோட்டில் காத்துக் கிடக்கிறார்கள்” என்றேன்.

என்னை உற்றுப் பார்த்தார். “சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய மனம் இல்லை.
அதோ, சோபாவில் உடைகள் இருக்கின்றன பாருங்கள். நான்கு மணிக்குப்
புறப்படுகிறேன்” என்றார். 3.50க்கெல்லாம் மஞ்சள் நிற சில்க் ஜிப்பாவில்
ஒளிப்பிரகாசமாகப் பிரச்சார வேனுக்கு வந்தார். 120 கிலோ மீட்டர் வேகத்தில்
வேன் பறந்தது. சங்கரன்கோவிலில் நின்று கொண்டு, உதயசூரியனுக்கு ஓட்டுப்
போடுங்கள் என்ற முழக்கம் பிரச்சார வேனில் ஒலித்தபோது கையை உயர்த்தி அவரே
முழங்குவது போன்ற தோற்றத்தில் வந்த காட்சியை என்னால் என்றைக்கும் மறக்க
முடியாது.

அந்தத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைத் தி.மு.கழகம் பெற்றது.

அறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு யார்? நாவலரா? கலைஞரா? யார்
முதல்வர்? என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்தபோது மக்கள் திலகம் தமது
முழு ஆதரவையும் கலைஞருக்குத் தந்தார்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை
அமைச்சராகப் பணியாற்ற எம்.ஜி.ஆர் விரும்பினார். இதயவீணை படப்பிடிப்பு
காஷ்மீரில் இருந்தவாறு தன்னிடம் மெடிக்கல் மந்திரியாக வேண்டும் என்று
கேட்டதாகக் கூறி கலைஞர் அவர்கள், மெடிக்கல் மந்திரி என்றொரு பதவி இல்லை
என்பதுகூட இவருக்குத் தெரியவில்லையே என்று சகாக்களிடம் கேலி பேசியதை நான்
அறிவேன்.

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவைப் பூக்காரி என்ற முதல்
திரைப்படத்திலேயே இரட்டை வேடத்தில் நடிக்க வைத்ததுடன், தி.மு.க.
தலைமைக்கழகத்தில் இருந்து அனைத்து வட்டச் செயலாளர்களுக்கும் அகில உலக
மு.க.முத்து ரசிகர் மன்றத்துக்கு உங்கள் பகுதியில் மன்றங்கள் அமைக்க
வேண்டும் என்ற தாக்கீது வந்தது.

கலைஞரின் உள்நோக்கத்தை உணர்ந்து கொண்ட எம்.ஜி.ஆர். மனம் கொந்தளித்ததில்
வியப்பு இல்லை.

1971 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தி.மு.க.வேட்பாளருக்கும் கலைஞர் அவர்கள்
30 ஆயிரம் ரூபாய் தேர்தல் நிதி கொடுத்ததை அறிந்தபோதுதான் தி.மு.க.வின்
பொருளாளரான எம்.ஜி.ஆர் அதிர்ச்சி அடைந்தார்.

1962, 1967 பொதுத் தேர்தல்களின் தி.முக.வின் பல வேட்பாளர்களுக்கு
எம்.ஜி.ஆர் திரைத்துறையில் தான் சம்பாதித்த பணத்தை அள்ளிக் கொடுத்தார்
என்ற உண்மையை மனச்சாட்சி உள்ள தி.மு.க.வினர் மனதளவில் ஒப்புக்
கொள்வார்கள்.

மதுரை மாநில மாநாட்டில் எம்.ஜி.ஆர் பெயர் உச்சரிக்கப்பட்ட போதெல்லால்
அலைகடலின் ஆரவாரமாக இலட்சக்கணக்கான தோழர்களின் கரவொலியும் விசிலும்
விண்ணைப் பிளந்தன.

மாநாட்டில் முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது அந்த வரவேற்பு
இல்லை. நானும் அந்த மேடையின் பின்வரிசையில் அமர்ந்து இருந்தேன். மதுரைக்
காஞ்சி குறித்துப் பேசத் தொடங்கிய கலைஞர் இருபதாம் நிமிடத்தில் மயக்கம்
வருகிறது என்று கூறி நாற்காலியில் உட்கார்ந்து விட்டார். எம்.ஜி.ஆர்
பதறியவாறு அரசு விருந்தினர் மாளிகைக்கு உடன் சென்றார்.

1972 ஆம் ஆண்டு தலைமைக் கழகத்திற்குச் சென்று பொருளாளர் என்ற முறையில்
வரவு செலவுக் கணக்கைக் கேட்டபோது, அதற்குக் கிடைத்த பதில் எம்.ஜி.ஆருக்கு
ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, அக்டோபர் 8 ஆம் நாள் லாயிட்ஸ்
சாலையிலும், திருக்கழுக்குன்றத்திலும் தி.மு.க. மேடைகளில் பேசிய
எம்.ஜி.ஆர் அமைச்சர்களை மட்டும் சொத்துக்கணக்குக் காட்டச்சொன்னால்
தன்னைத் தவறாக நினைப்பார்கள் என்று கருதி, திமுகவினர் அனைவரும் சொத்துக்
கணக்கைக் காட்டவேண்டும் என்று பேசினார்.

சிறந்த ராஜதந்திரியான கலைஞர் அவர்கள், எம்.ஜி.ஆர் பேசியதை அப்படியே
அவருக்கு எதிரான ஆயுதமாகத் திறமையாகப் பயன்படுத்தினார்.

கட்சிக்கு உயிரான கிளைச் செயலாளர்கள் முதல் அனைவரையும் கணக்குக் காட்டச்
சொல்லிக் கழகத்தின் மீது களங்கத்தைச் சுமத்துகிறார் எம்.ஜி.ஆர். மத்திய
அரசின் வருமான வரி வேட்டைக்குப் பயந்து கட்சிக்குத் துரோகம்
இழைக்கின்றார் என்று சிலரை அறிக்கை விடவும் வைத்தார்.

அக்டோபர் 10 ஆம் தேதியன்று எம்.ஜி.ஆர் அவர்களை ஏன் கட்சியை விட்டு
நீக்கக் கூடாது என்பதற்கு இத்தனை நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்
என்று தலைமைச் செயற்குழுவில் தீர்மானத்தை அறிவித்து விட்டு, அந்தக் கெடு
முடிவதற்கு உள்ளாகவே இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் பொதுக்குழுவைக்
கூட்டி, எம்.ஜி.ஆர் அவர்களைத் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில்
இருந்தே நீக்கி அறிவிப்பைச் செய்ய வைத்தார் கலைஞர்.

எம்.ஜி.ஆர் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்கிறது என்று அக்டோபர் 10
ஆம் தேதி சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியில் எடுக்கப்பட்ட முடிவை
வாசலில் காத்திருந்த என்னிடம் நாவலர் சொன்னபோது, என் இருதயம் நொறுங்கிப்
போயிற்று.

நான் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆதரவாளன் அல்ல. கழகத்தின் தலைவர் அண்ணன்
கலைஞர் அவர்களை உயிருக்கும் மேலாக நேசித்த உண்மைத் தொண்டன். ஆனால்
திமுகவுக்குப் பெரும் பாதகம் விளையும் என்று அஞ்சினேன். அப்போது வேலூர்
சிஎம்சி மருத்துவமனையில் எனது தந்தையார் வையாபுரியார் அவர்கள் புற்று
நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு படுத்த படுக்கையாக இருந்தார்.
ஆழிப்பேரலை போல் எம்.ஜி.ஆர் ஆதரவு அலை தமிழகமெங்கும் வீசியது.

எம்.ஜி.ஆர் படத்தை ஒட்டாமல் எந்த வாகனமும் சாலைகளில் செல்ல முடியவில்லை.
தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் திமுக பொதுக்கூட்டத்தை நடத்த முடியவில்லை.
நெல்லையில் நடத்தப்பட்ட திமுக பொதுக்கூட்டத்தில் கல்வீச்சும் கலவரமும்
நடந்ததால் கூட்டம் பாதியிலேயே கலைந்தது என்று கேள்விப்பட்டு நெல்லைக்கு
விரைந்து மாணவர் தி.மு.க. சார்பில் ஆயிரம் பேரைத் திரட்டிக் கொண்டு
அன்றைய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பத்மநாபன் அவர்கள் ஒரு விபத்தில்
சிக்கி கால் ஊனமுற்றதால் அவர் காரில் வர நாங்கள் நடந்தே சென்று நகரின்
அத்தனை வார்டுகளிலும் தி.மு.க.கொடி ஏற்றி தேரடித் திடலில் துரைமுருகன்,
வலம்புரி ஜான், என்.வி.என். சோமு ஆகிய மூவரையும் உரையாற்ற வைத்தேன்.

என் தந்தையார் மறைந்தபின்னர் தெற்குச் சீமையில், குறிப்பாக ஒருங்கிணைந்த
நெல்லை மாவட்டத்தில் அண்ணா திமுகவினரின் தாக்குதலுக்கு அஞ்சாமல் ஊர்
ஊராகச் சென்று கொடி ஏற்றிக் கூட்டம் பேசினேன்.

கழுகுமலைக்குப் பக்கத்தில் இருக்கின்ற ஆலங்குளம் என்ற ஊரிலும், பனவடலி
சத்திரத்திற்கு அருகில் உள்ள மடத்துப்பட்டி என்ற ஊரிலும் அதிமுகவினரின்
கொலைவெறித் தாக்குதலை எதிர்கொண்டேன்.

1977 சட்டமன்றத் தேர்தலில் திருச்சிக்குத் தெற்கே நான் தேர்தல் வேலை
பார்த்த சங்கரன்கோவில் தொகுதியில் மட்டும்தான் திமுக வெற்றி பெற்றது. என்
உழைப்பைக் கலைஞர் அங்கீகரித்தார். நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராக
ஆக்கினார். அந்தப் பதவியைக் கழகத்தின் உயர்விற்கும் கலைஞரின் புகழை
உயர்த்துவதற்கும் பயன்படுத்தியதோடு கழகம் நடத்திய அத்தனைப்
போராட்டங்களிலும் எம்.பி. என்கின்ற தலைக்கனம் இல்லாமல் சி வகுப்புக்
கைதியாகவே தோழர்களோடு சிறையில் இருந்தேன்.

கலைஞரின் பக்தன் என்ற கண்மூடித்தனமான மனப்பாங்கால் புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர் அவர்களை மேடைகளில் கடுமையாக விமர்சித்தேன். கலைஞருக்காகவே
தொண்டர் படையை உருவாக்கினேன். கலைஞர் மீது துரும்பு விழுவதற்கும்
பொறுக்காமல், இராதாபுரத்தில் கலைஞர் மீது உளி வீசிய செபாஸ்டியனைப்
பிடித்து நையப்புடைத்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தேன். கலைஞர் அவர்கள்
தம் துணைவியார் தயாளு அம்மாள் அவர்களோடு மதுரையில் இருந்து சென்னைக்குப்
பாண்டியன் விரைவு ரயிலில் பயணித்தபோது அதிமுக அமைச்சரின்
அடாவடித்தனத்தைத் தடுக்கக் கலைஞர் பயணித்த பெட்டியின் வாசலில்
விடியவிடியக் காவல் காத்தேன்.

1986 ஆம் ஆண்டு புது டெல்லிக்கு வந்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவிடம்
விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிக்
கேட்டபோது, எம்.ஜி.ஆர்தான் இலங்கையில் பிரச்சினை ஏற்படுத்துகிறார் என்று
பிரதமர் ராஜீவ் காந்தியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே குற்றம்
சாட்டினார்.

மறுநாள் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் பிரதமர் ராஜீவ் காந்தியைப்
பார்த்துக்கேட்டேன்.

வெளிநாட்டில் இருந்து வந்த அதிபர் நாம் போடுகின்ற சாப்பாட்டைத்
தின்றுவிட்டு மரியாதையாகப் போக வேண்டும். தமிழ்நாட்டு முதல் அமைச்சரை
எப்படிக் குற்றம் சாட்டலாம்? அவருக்குப் பக்கத்தில் சிரித்துக் கொண்டு
நின்றாரே பிரதமர் ராஜீவ் காந்தி என்று நான் கண்டனம் தெரிவித்தபோது,
காங்கிரஸ் எம்பிக்கள் எழுந்து எம்.ஜி.ஆர் மீது கோபால்சாமிக்கு என்ன
திடீர்க் காதல்? என்றனர்.

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எம்.ஜி.ஆரை எதிர்க்கின்றேன். ஆனால் அவர்
எங்கள் முதல் அமைச்சர். ஈழத்தமிழர்களைக் கொலை செய்கின்ற இலங்கை அதிபர்
எங்கள் முதல்வரை விமர்சிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று
சொன்னேன்.

இலாபியில் அதிமுக எம்பிக்கள் என் கைகளைப் பற்றிக் கொண்டு, காங்கிரஸ்
கூட்டணியால் நாங்கள் வாய் திறக்க முடியவில்லை. ராஜீவ்காந்திக்கு நல்ல
சவுக்கடி கொடுத்தீர்கள் என்றனர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் 9000 ரூபாய் வருமான வரம்பைத்
திரும்பப் பெற்று, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 சதவிகிதமாக இருந்த இட
ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்தி, ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டை 68
சதவிகிதமாக தமிழ்நாட்டில் ஆக்கித் தந்த சமூக நீதியின் காவலர் ஆவார்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுக்கு நூற்றாண்டு விழா எடுத்து, ஆண்டு
முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாடியதோடு, பெரியார் அவர்களின் தமிழ் மொழி
எழுத்துச் சீர்திருத்தத்தைத் தமிழக அரசு ஏற்றதோடு, அதற்கான அரசு ஆணையும்
பிறப்பித்து, எல்லையற்ற புகழைக் குவித்தவர் எம்.ஜி.ஆர்.

மாவட்டந்தோறும் பகுத்தறிவுப் பகலவனின் நினைவுத்தூணையும் நிறுவிக் காட்டினார்.

1987 இல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் விடுதலைப்புலிகளின்
தலைவர் பிரபாகரனை நயவஞ்சகமாக இந்தியாவுக்கு அழைத்து வந்து, டெல்லி அசோகா
ஓட்டலில் சிறை வைத்துவிட்டு, சிங்கள அரசின் அதிபர் ஜெயவர்த்தனேவோடு
ஒப்பந்தம் செய்து ஈழத்தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் செய்தார்.
அப்போது தலைவர் பிரபாகரன் அவர்களோடு தொலைபேசியில் 33 நிமிடங்கள்
பேசியபோது அதிர்ச்சி தந்த பல உண்மைகளை அறிந்தேன்.

ஓராண்டு கழித்து விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாணத் தளபதி கிட்டு சென்னையில்
இருக்கிறார், எம்.ஜி.ஆர் அவர்கள் மருத்துவ ஆய்வுக்காக அமெரிக்கா சென்று
சென்னை திரும்பி இருக்கின்றார். நீங்கள் ஏன் எம்.ஜி.ஆரையே
ஆதரிக்கின்றீர்கள்? வருங்காலத்தைக் கருதி கலைஞரை ஆதரிக்க முன்வாருங்கள்
என்றேன்.

தழுதழுத்த குரலில் கிட்டு சொன்னார் அண்ணே வயிறு இருக்கே அண்ணே.
பொடியன்கள் (புலிகள்) பட்டினி கிடக்கின்றார்கள்.. 3 வேளை சாப்பாட்டுக்கு
ஒருநாளைக்கு 5 ரூபாய் தருகிறோம். முந்தா நாள் எம்.ஜி.ஆர் அவர்களைப்
பார்க்கப் போனேன். அன்று ஒரு 25 இலட்சம், மறுநாள் 25இலட்சம் கொடுத்து
அனுப்பினார். அந்தப் பணம் இந்தப் பைகளில்தான் இருக்கின்றது. எங்களுக்குப்
பொருளதார உதவி செய்யக் கலைஞர் முன்வருவாரா? என்று கேட்டார்.

கண்களில் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, நான் உங்களிடம் பேசியது
தவறு என்றேன்.

மேலும் ஐந்து கோடி தருவதாகவும் எம்.ஜி.ஆர் கூறி இருக்கின்றார் என்றார்
கிட்டு. நான் திடுக்கிட்டுப் போனேன்.

எம்.ஜி.ஆர் அவர்கள் மறைவுக்குப் பின் 1989 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில்
இந்திய அமைதிப்படை இலங்கைத் தீவில் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை
நிறுத்திக் கொண்டு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று முழக்கமிட்ட
திமுக தலைமை, தேர்தலில் வெற்றி பெற்றுக் கலைஞர் முதல் அமைச்சரான பின்பு
ஆலிவர் ரோடு இல்லத்தில் பேபி சுப்பிரமணியம் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின்
பிரதிநிதிகளுடன் நாங்கள் முதல் அமைச்சர் கலைஞரைச் சந்தித்து இந்திய அரசு
போர் நிறுத்தம் அறிவிக்க நீங்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான்
கூறியபோது அவர் சொன்னபதில் எங்கள் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டது.

விடுதலைப்புலிகள் முதலில் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுப் போரை
நிறுத்துகிறோம் என்று அறிவிக்கட்டும். அதற்குப் பிறகு பார்க்கலாம்
என்றார். உள்ளம் உடைந்தவர்களாக நாங்கள் வெளியே வந்தோம்.

ஜெமினி மேம்பாலத்திற்கு அருகில் அப்போது இருந்த உட்லண்ட்ஸ் உணவக
வளாகத்தில் காரை நிறுத்திவிட்டு ஆலோசித்தோம். தி.மு.க.விற்கும்
விடுதலைப்புலிகளுக்கும் இடையே வேற்றுமையும் வெறுப்பும் ஏற்பட்டு விடக்
கூடாது என்பதாலும், மரணபூமியில் போராடும் விடுதலைப்புலிகளையும்
தமிழர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் நானே பிரபாகரனைச்
சந்திக்க வன்னிக்காட்டுக்குப் புறப்படுகிறேன் என்றேன்.

அதிர்ச்சியுற்ற புலிகள், உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அதனால்
முடியாது என்றனர். நான் சொல்வதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். தலைவர்
பிரபாகரனுக்கு உடனே தகவல் சொல்லுங்கள் என்றேன். அப்படியே தகவல்
அனுப்பினார்கள்.

மறுநாள் காலையில் பேபி சுப்பிரமணியம் வீட்டுக்கு வந்தார். இந்திய இலங்கை
இருநாட்டுக் கடற்படை ரோந்து சுற்றுகிறது. இந்த நிலைமையில் கோபால்சாமி
அண்ணன் வருவது உயிருக்கு ஆபத்தாக முடியும். வர வேண்டாம் எனத் தெரிவிக்கச்
சொன்னார் என்றார்.

நான் எல்லாவற்றையும் யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.
கண்டிப்பாக நான் வன்னிக்காட்டுக்கு வந்தே தீருவேன் என்றேன்.

மறுநாள் பேபி சுப்பிரமணியம் மீண்டும் வீட்டுக்கு வந்தார். “அண்ணா,
ஏற்பாடுகள் நடக்கின்றன. பிப்ரவரி 6 ஆம் தேதி இரவு பட்டுக்கோட்டைக்கு
அருகில் பிள்ளையார் திடலில் இருந்து படகில் புறப்படலாம். மூன்று
எஞ்சின்கள் பொருத்தப்பட்ட இயந்திரப் படகைத் தலைவர் அனுப்பி வைக்கின்றார்.
வழக்கமாகத் தலைவருக்குப் படகை ஓட்டும் பாலன் / தளபதி குமரப்பாவின்
அண்ணன், அவரைத்தான் தலைவர் அனுப்பி வைக்கிறார்” என்றார்.

தை அமாவாசை இரவில் நான் ஒன்பது விடுதலைப்புலிகளுடன் படகுகளில் புறப்பட்டேன்.

“மானம் என் மகன் கேட்ட தாலாட்டு,
மரணம் அவன் ஆடிய விளையாட்டு”

என்ற கலைஞரின் கவிதை வரிகளையே குறிப்பிட்டு இந்தக் கடிதம் உங்கள் கைகளில்
கிடைக்கும்போது நான் வன்னிக்காட்டை நோக்கிப் போய்க்கொண்டு இருப்பேன்.
கழகத்திற்குக் கடுகு அளவும் ஊறு நேராமல், என்னையே பலியிட்டுக் கொள்வேன்
என்று நான் எழுதிய கடிதத்தை, உயிர் நண்பர் குட்டி என்ற சண்முகசிதம்பரம்
கோபாலபுரத்தில் பிப்ரவரி 7 ஆம் தேதி காலையில் முதல்வரின் கைகளில்
கொடுத்தார்.

இலங்கைக் கடற்படையின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு நேரடியாகச்
செல்லாமல், 180 கிலோமீட்டர் சுற்றி வந்து, பரந்தன் என்ற இடத்தை
நெருங்கும்போது கரையில் இருந்து இந்திய அமைதிப்படை எங்கள் படகு மீது
துப்பாக்கிச் சூடு நடத்தியது, அதில் நாங்கள் உயிர் தப்பினோம்.
வன்னிக்காட்டுக்குச் சென்று தலைவர் பிரபாகரனைச் சந்தித்தேன். ஒவ்வொரு
நாளும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது இந்திய
அமைதிப்படைக்குத் தலைமை தாங்கிய தளபதி கல்கத், சென்னை கோபாலபுரம்
இல்லத்தில் கலைஞரைச் சந்தித்தபின், வை.கோபால்சாமி இலங்கைக்குச்
சென்றதற்கும், திமுகவுக்கும் சம்பந்தம் இல்லை என்று பொதுச்செயலாளர்
பேராசிரியர் பெயரால் அறிக்கை விடச்செய்தார் கலைஞர்.

வன்னிக்காட்டுக்குள் இருந்த நான் இதனை அறிந்தபோது என் இதயம் சுக்கல்
சுக்கலாக வெடித்தது. குறிப்பிட்ட நாளில் ஒரு படகு நாயாறு பகுதிக்கு
வந்தது என்பதை இந்திய அமைதிப்படை கண்டுபிடித்தது என்று
விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவினர் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கூறி
இருந்தனர். அப்படி என்றால், குறிப்பிட்ட அந்தப் பகுதிக்குள்தான்
பிரபாகரன் இருப்பார் என்று இந்திய இராணுவத்தினருக்குத் துப்புக்
கொடுக்கின்ற துரோகத்தைத் திமுக தலைமை விதைத்து விட்டது என்று குமுறினேன்.
என் மனக்குமுறலை என் நாட்குறிப்பில் 6 பக்கங்ள எழுதியுள்ளேன். காலம்
வரும்போது வெளியிடுவேன்.

நான் தமிழ்நாட்டுக்குப் போக மாட்டேன். கலைஞர் அவர்கள் செய்த இந்தத்
துரோகத்தைச் சகிக்கவே முடியவில்லை. நான் இங்கேயே உங்களோடு இருப்பது என்று
முடிவு செய்து விட்டேன் என்றேன். பூமிக்கடியில் எனக்கு ஒதுக்கப்பட்டு
இருந்த, நிலவறையின் படிக்கட்டுகளில் ஒரு காலை மேலே உள்ள படிக்கட்டிலும்
மற்றொரு காலை அடுத்த படிக்கட்டிலும் வைத்து நின்றுகொண்டு தலைவர்
பிரபாகரன் அவர்கள் என்னிடம் பேசிய அந்தக் காட்சி அடிக்கடி என்
மனக்கண்ணில் தோன்றிக்கொண்டே இருக்கின்றது.

“நீங்க சொல்றது தப்பு அண்ணே. நீங்கள் தமிழ்நாட்டுக்குப் போயாக வேண்டும்.
அங்கே எங்களுக்காக நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன.
உங்களைப் பத்திரமாகத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கின்றேன் என்று பேபி
சுப்பிரமணியம் மூலமாக அக்காவுக்குத் (என் துணைவியார்) தகவல் அனுப்பி
விட்டேன். நீங்கள் வந்து இறங்கிய வழியில் இரண்டு நாட்டுக் கப்பல்களும்
நிற்கின்றன. எனவே, அந்த வழியாக இப்போது திரும்பிப் போக முடியாது. எனவே,
அடர்ந்த காட்டுக்கு ஊடாகத்தான் சென்றாக வேண்டும். முட்கள் உடம்பைக்
கிழிக்கும். ஆனாலும் உங்களைப் பத்திரமாக வீட்டில் கொண்டு போய்ச்
சேர்ப்பேன்” என்று சொன்னார்.

அன்று இரவு என்னைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான பிரியாவிடைக்
கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசிய உரை, உன்குழாய் (யூட்யூப்)
இணையதளத்தில் உள்ளது. பார்த்துக் கொள்ளுங்கள். அதன் ஒளிநாடா என்னிடம்
இருக்கின்றது.

பிரிகேடியர் பால்ராஜ், தளபதிகள் பானு, வல்வெட்டித்துறை ஜேம்ஸ், பாம்பு
அஜித், தலைவரின் பிரதான மெய்க்காப்பாளர் கடாபி உள்ளிட்ட 7 தளபதிகளுடன்
மொத்தம் 57 விடுதலைப்புலிகளை என்னைப் பாதுகாப்பதற்காக உடன் அனுப்பி
வைத்தார்.

பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் தலைமையில்தான் யானை இறவுச் சமர்
நடைபெற்றது, இராணுவ சாகசத்தில் உலகையே திகைக்க வைத்து விடுதலைப் புலிகள்
யானை இறவைக் கைப்பற்றினர்.

ஆயிரக்கணக்கான இந்திய இராணுவத்தினர் சுற்றி வளைத்து நிற்கின்றார்கள்.
அவர்களுடன் மோதல் ஏற்பட்டுப் புலிகள் பிடிபட்டால் அவர்கள் நச்சுக்
குப்பிகளைக் கடித்துத் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வார்கள். ஆனால்
நான் பிடிபட்டால், பிரபாகரன் இருக்கும் இடம் எங்கே? என்று கேட்டு என்னைச்
சித்திரவதை செய்வார்கள். அதை என்னால் தாங்கிக் கொள்ள இயலாது. எனவே,
எனக்கும் ஒரு நச்சுக்குப்பியை கொடுங்கள் என்று கேட்டேன்.

முதலில் பிரபாகரன் மறுத்தார். அப்படி ஒரு அபாயம் நேர விட மாட்டோம் என்றார்.

ஒரு வேளை நடந்துவிட்டால் என்ன ஆவது? மறுக்காதீர்கள். எனக்கும் ஒரு
நச்சுக்குப்பியைக் கொடுங்கள் என்றேன்.

தலைவர் பிரபாகரன் அவர்கள் தன் கழுத்தில் எப்போதும் இரண்டு சயனைடுக்
குப்பிகளை இணைத்துக் கட்டி இருப்பார். அப்படித் தன் கழுத்தில் இருந்த
சயனைடுக் குப்பிகளுள் ஒன்றைத் தனியாகப் பிரித்து, பொட்டு அம்மானிடம்
பொருத்தமான ஒரு கயிறு கொண்டு வரச் சொல்லி அதில் அந்தக் குப்பியைக் கட்டி
என் கழுத்தில் அவரே அணிவித்தார். அந்த நச்சுக்குப்பியை இன்றைக்கும்
பத்திரமாக வைத்து இருக்கின்றேன்.

முதல் நாள் இரவிலேயே முதல் அமைச்சர் கலைஞருக்குத் தன் கைப்பட, விடுதலைப்
புலிகள் லெட்டர் பேடில் மூன்று பக்கங்கள் அளவில் ஒரு கடிதம் எழுதிக்
கொடுத்தார்.

அதில் மரணத்திற்கு அஞ்சாமல் உயிரைத் துச்சமாகக் கருதி,
வன்னிக்காட்டுக்குள் வந்து அண்ணன் வை.கோபால்சாமி அவர்கள் என்னைச்
சந்தித்ததை நினைக்கையில், தமிழ் இனத்தின் மீது அவர் கொண்டுள்ள பற்றுதலைக்
கருதி, நான் ஆயிரம் முறை இறக்கலாம் என்ற மனத்தெம்பு எனக்கு ஏற்பட்டது
என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தக் கடிதத்தைக் கலைஞரிடம் கொடுத்தபோது, கடிதத்தைப் படித்து விட்டு,
தன்னைப் பற்றிப் புகழவில்லையே என்ற ஆத்திரத்தில் கலைஞர் அவர்கள் என்னிடம்
வெறுப்பாகப் பேசினார்.

நான் தமிழகம் வந்து சென்னை சேர்ந்தபின் அன்று இரவு என்னைச் சந்தித்த கடல்
புலிகளின் தலைவர் தளபதி சூசை, அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு போய் ஒரு
ஜெராக்ஸ் காப்பியுடன் திருப்பிக்கொடுத்தார். 27 ஆண்டுகள் இந்தக் கடிதத்தை
வெளியிடாமல் ரகசியத்தை பாதுகாத்த நான் 2016 செப்டெம்பர் 15 இல்
திருச்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழா
மாநாட்டில்தான் அந்தக் கடிதத்தை நான் வெளியிட்டேன்.

வன்னிக்காட்டில் தலைவர் பிரபாகரன் என்னிடம் சொன்ன பல செய்திகளை
அறிந்தபொழுது, எம்.ஜி.ஆர் என்ற மாமனிதரை என் உள்ளம் பூஜித்து ஆராதனை
செய்தது.

“முதன் முதலாக நானும், பாலசிங்கமும் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களைச்
சந்தித்து உதவி கேட்டபோது, பத்து இலட்சம் ரூபாய் தருவார் என்று
எதிர்பார்த்தோம். ஆனால் அவர் இரண்டு கோடி ரூபாய் தருகிறேன் என்று
சொன்னபோது எனக்குத் தலை சுற்றியது” என்றார்.

“இந்திரா காந்தி அம்மையார் மறைவுக்குப் பின் பிரதமர் ராஜீவ் காந்தி
காலத்தில் நிதி உதவி தருகிறோம் என டெல்லிக்கு வரவழைத்து இந்திய அரசு
எங்களை ஏமாற்றி விட்டது என்று, அன்றைக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில்
தங்கி இருந்த முதல்வர் எம்.ஜி.ஆரிடம் நான் கூறியபோது, ஏன்
கவலைப்படுகின்றீர்கள்? அதைவிட அதிகமாக நான் தருகிறேன் என்று கூறிவிட்டு,
டெல்லி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு முதல்வர் எம்.ஜி.ஆர் சென்னை
திரும்பினார். ஈழத்தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்குத் தருகிறோம் என்று
வெளிப்படையாகக் காசோலை மூலம் 4 கோடி ரூபாய் கொடுத்தார்.

போரில் காயப்பட்ட புலிகளுக்கு மதுரையில் தனியாக ஒரு மருத்துவமனையை
ஏற்படுத்தி மருத்துவச் சிகிச்சைகள் அளித்தார். ஆயுதப் பற்றாக்குறையால்
நாங்கள் தவித்தபோது, ஒரு பேருதவியையும் செய்தார். 1986 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தைப் பிரதமர் ராஜீவ் செய்தபிறகு, டெல்லியில் இருந்து என்னைச் சென்னைக்கு அழைத்து வந்தவுடன், முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்திக்கவேண்டும் என்று வற்புறுத்தியதன் பேரில் போய்ப் பார்த்தேன். எம்.ஜி.ஆர் அவர்கள் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார். இந்த ஒப்பந்தத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார்” என்றார்.

இதையெல்லாம் கேட்ட பின்னர் சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைவதற்கு ஆயுதக்களம் அமைத்துக் கொடுத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்பதை உணர்ந்தேன்.

அதன் பின்னர் மேடைகளில் எம்.ஜி.ஆர் அவர்களை விமர்சிப்பதை அடியோடு
நிறுத்திக் கொண்டேன். இதைவிட இன்னும் அதிகமாக எம்.ஜி.ஆர் அவர்கள் மீது எனக்கு வான் அளவு மரியாதை ஏற்பட்டதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் மீண்டும் மருத்துவ ஆய்வுக்காக அமெரிக்காவில்
புரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபோது, பிரதமர் ராஜீவ்காந்தி
அமெரிக்காவில் பால்டிமோர் நகருக்குச் சென்றார். அங்கிருந்த தன்னைப்
பார்க்கப் பிரதமர் வருவார் என்று எதிர்பார்த்து இலங்கையில்
விடுதலைப்புலிகளுடன் இந்திய அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற
கோரிக்கை மனுவை தயாரிக்கச் செய்து காத்திருந்தார். ஆனால் பிரதமர் ராஜீவ்காந்தி புரூக்ளின் செல்லவில்லை. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு
மிகவும் வேண்டியவரான டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் இருந்ததால், அந்தக்கோரிக்கைக் கடிதத்தை அவர் மூலம் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்ப
ஏற்பாடு செய்தார்.

இதனைக் கூறியவர் அமெரிக்காவில் தமிழ்நாடு பவுண்டேசன் தலைவராக
ஒருகாலகட்டத்தில் பதவி வகித்த பழநி பெரியசாமி அவர்கள். புரூக்ளின்
மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் இருந்தபோது அவருக்கு எல்லாவிதத்திலும்
உதவியாக இருந்தார். பின்னர் அவருக்குத் தொழில் அமைச்சர் பதவி கொடுக்க
எம்.ஜி.ஆர் முன்வந்தபோது, பழநி பெரியசாமி மறுத்தார் என்ற உண்மையும்
எனக்குத் தெரியும்.

பிரதமர் ராஜீவ் காந்திக்கு அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்து
எம்.ஜி.ஆர் அனுப்பிய கோரிக்கை மனுவின் நகலைப் பெற முயற்சித்துக் கொண்டு இருக்கின்றேன். மரண வாயிலில் தான் இருந்தபோதும் ஈழத்தமிழர்களை, விடுதலைப்புலிகளைப் பாதுகாக்கத் துடித்த எம்.ஜி.ஆர் என்ற அந்த மூன்றெழுத்து மந்திரம், ஈழத்தமிழர்களின் இதயச்சுவரில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டு விட்டது.

சுதந்திரத் தமிழ் ஈழம் ஒருநாள் மலரத்தான் போகிறது.

யுகயுகாந்திரங்களுக்கும் தலைவர் பிரபாகரன் பெயரும், மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர் அவர்கள் பெயரும் நிலைத்து நிற்கும்.

2017 ஜனவரி 17. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா
என்பதால், இதுநாள் வரை என் இதயத்தில் பூட்டி வைத்து இருந்த உணர்ச்சிகளை அறிக்கையாகத் தந்துள்ளேன்.

0 Responses to தமிழ் ஈழ விடுதலைப் போருக்கு ஆயுதக்களம் அமைத்த மாமனிதர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்: வைகோ

Post a Comment

Followers