Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“வெற்றுச் சத்தத்தை எழுப்பி எமது பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்திவிடமுடியாது. நாங்கள் முன்னோக்கி நகர்ந்துகொண்டே இருப்போம்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார். அது அவருக்கு கைகூடவில்லை. பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். இப்போது, அந்தப் பதவியும் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், அவர் கத்திக் கூச்சல் போடுகின்றார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

‘பலம்மிக்கதோர் இலங்கை’ எனும் பொருளாதாரத் திட்டத்தை, அலரிமாளிகையில் வைத்து உத்தியோகபூர்வமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று புதன்கிழமை ஆரம்பித்து வைத்தார். அதன்பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பிரதமர் தெரிவித்துள்ளதாவது, “அரசியல் வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போராடுகின்றார். நல்லாட்சி அரசாங்கத்தினால், முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டத்தில் அள்ளுண்டுபோயுள்ள அவர், பாராளுமன்ற உறுப்பினர் பதவியையே தக்கவைத்து கொள்வதற்கு திண்டாடுகின்றார்.

நாங்கள், விகாரைகளை உடைக்கவில்லை. மக்களின் காணிகளை அபகரிக்கவில்லை. காணிகளை விற்கவில்லை. துறைமுக நகர் திட்டத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட்ட காணியையும் மீளப்பெற்று, 99 வருட குத்தகைக்கு கொடுத்துள்ளோம்.

தலதா மாளிகையை நாங்கள் உடைக்கவில்லை. மல்வத்துப் பீடத்தை பிளவுப்படுத்துவதற்கு முயலவில்லை. மல்வத்துப் பீடத்துக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு முயன்றவர்கள், மகாநாயக்க தேரர்களை வணங்கி, கெஞ்சுகின்றனர்.

மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதியாக்கியதும், என்னை பிரதமராக்கியதும் வெறுமனே குந்தியிருப்பதற்கு அல்ல. நாட்டை கட்டியெழுப்புவதற்கே எங்களுக்கு மக்களாணை கிடைத்தது. அந்த ஆணையின் கீழ் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்போம்.

நல்லாட்சி அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் நல்ல வரவேற்பு உண்டு. உதவிகள் கிடைக்கின்றன. சத்தத்தை போட்டு எமது பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்திவிடமுடியாது. நாங்கள் முன்னோக்கி நகர்ந்துகொண்டே போவோம். எனினும், அபிவிருத்தியை கண்டு, அச்சம் கொண்டவர்கள் மீண்டும் அதிகாரத்தை பெற்று, கொமிஸ் பெற்றுக்கொள்வதற்கே முயற்சிகின்றனர். தனியொரு கட்சியினால், அரசாங்கத்தை அமைக்கமுடியாது. ஆகையால்தான் நாட்டில் நல்லாட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சிக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டால், கலந்துபேசி அவற்றுக்கு தீர்வு காண்போம். அவ்வாறுதான் கடந்தகால பிரச்சினைகளுக் தீர்வு காணப்பட்டது. அரசாங்கத்தை சீர்குலைப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்படுவதாக கூறப்படுவது எமக்கு பெரிய பிரச்சினையல்ல. பத்திரிகைகளுக்கு நத்தார் காலத்தில் செய்திகள் இருக்காது. அதனால்தான், இவ்வாறான செய்தி பரப்பிவிடப்பட்டுள்ளது. அவர்கள் இவ்வாறு சதியென்று பேசுவதற்காக நாங்கள் என்னச் செய்வது. எவர் என்ன கூறனாலும் அரசாங்கத்துக்கு ஆபத்து ஏற்படவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to சத்தம் போட்டு எமது பயணத்தை தடுக்க முடியாது: ரணில்

Post a Comment

Followers