Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரலாறு படைத்த மெரினா போராட்டம்!

பதிந்தவர்: தம்பியன் 21 January 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக (20.01.17) 4ஆம் நாளா௧ தமிழ் மாணவர் இளைஞர் போராட்டம் தொடர்ந்தது. இன்று 5வது நாள்.

முதல் நாள் 100 பேரில் தொடங்கிய போராட்டம், பல லட்சத்தை தொட்டது. பிற்பகல் முதல் இரவுவரை பல்லாயிரக்கணக்கானோர் குடும்பமாகவும் குழுவாகவும் ஊர்வலமாகவும் வந்து தங்கள் ஆதரவை மாணவர்_இளைஞர்களுக்கு தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

நம் கண்ணில் பட்டதும் நெஞ்சில் எழுந்ததும்.... உலகின் 2-வது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையின் வடகோடியில் உள்ள
உழைப்பாளர் சிலையில் இருந்து தென் கோடியில் உள்ள கலங்கரை விளக்கம் வரை சுமார் 4 கி. மீ நீளத்திற்கு அரை கி. மீ. அகலத்திற்கு "வெள்ளம் போல்" மக்கள் கூட்டம் காணப்பட்டது.

கடற்கரை காமராஜர் சாலையில், மக்கள் கூட்டத்துக்கு மத்தியில், பிரமாண்ட மான "காளை சிலை" யையும் அதற்குமேலே "தமிழன்டா" என்று எழுதப்பட்டு பட்டொளி வீசி பறந்த கொடியையும் சுமந்தபடி ஒரு வாகனம் சென்றது. இதைப்பார்த்தவர்கள் ஆர்ப்பரித்து கரவொலி எழுப்பினர்.

ஆண்களும் பெண்களும் சம எண்ணிக்கையில் இருந்தனர். குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் தென்பட்டனர். பல குழந்தைகள் வண்ணக்காகிதத்தில் செய்யப் பட்ட காளைமாட்டுக் கொம்பை தலையில் அணிந்திருந்தனர். பல்வேறு கோஷங்கள் அடங்கிய பதாகைகள் எண்ணிலடங்கா இடம்பெற்றிருத்தாலும் பெரும்பாலும் "எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும்" "WE WANT JALLIKATTU "
என்ற வார்த்தைகள் தென்பட்டன.

நொச்சிக்குப்பம் மீனவர்கள் கடற்கரை சாலையில் கட்டுமரத்தை நிறுத்தி தங்கள் ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

விவேகானந்தர் இல்லம் எதிரில் போராட்டக் களத்தின் மையப்பகுதி இருந்தாலும், கடற்கரை நெடுகிலும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. ஓரிடத்தில், கடந்த காலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டுக் காட்சிகள் ஒளிபரப்பப் பட்டன. ௮தை பல்லாயிரம் பேர் திரண்டுநின்று பார்த்தனர். அதில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும், கதிகலங்க வைத்த காளைகளுக்கும் பலத்த கரவொலிகள் கிடைத்தன.

மணல் பரப்பில் பீட்டாவை கண்டிக்கும் வகையில் மணல் சிற்பம் அழகுற அமைக்கப் பட்டிருந்தது.

மெரினாவில் ஒரு போலீஸ் காரரும் கண்ணில் படவில்லை. கருப்பு சட்டை அணிந்த இளைஞர்கள் சாலை நடுவிலும் சந்திப்புகளிலும் நின்று அற்புதமாக பணியாற்றினர்.

உடன் பிறந்த சகோதரர்களுடன் இருக்கும் பாதுகாப்பு உணர்வை பெண்கள் பெற்றனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்வலங்கள் வந்தவண்ணம் இருந்தன. காந்திசிலை பின்புறம் படிக்கட்டுகளில் குவிந்திருந்த கூட்டத்தில் ஒருவர் பேசுகையில் "நம் அப்துல்கலாம் இப்படிப் பட்ட மாணவர்களைதான் தேடினார், அவர் இன்று இருந்தால் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார்" என்றார்.

கோஷங்கள் வடிவில் எழுந்த இளைஞர்களின் உஷ்ணக் காற்றுகள் டெல்லி நோக்கி௫ சென்று கொண்டிருந்தன.

தமிழ்ச் சமுதாயத்தில் ஈகை சிந்தனை படைத்தோர் அதிகம் அல்லவா? அவர்கள் அனுப்பிய பழங்கள், ரொட்டிகள், உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் ஆங்காங்கு விநியோகப் பட்டவண்ணம் இருந்தன. ஆர்ப்பாட்டம், ஆவேசத்துக்கு மத்தியில் இளைஞர் குழுக்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.

மாலை 6.30 மணியளவில், வெளிச்சம் குறைந்து இருள் சூழ்ந்த நிலையில் அனைவரும் செல்போன் ஒளியை உயர்த்திப் பிடித்து தங்களின் ஒன்றுபட்ட உணர்வை உலகுக்கு காட்டினர். இந்நிகழ்வு, விண்ணில் உள்ள நட்சத்திரங்கள் மண்ணுலகத்திற்கு வந்துவிட்டது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. உலகமே வியந்து பாராட்டும் வகையில், தமிழர் வரலாற்றில் பொன்னெழுத்துகளால்
பொறிக்கப்படும், ஓரு மாபெரும் வெற்றிப் போராட்டக் களம் என்ற பெருமையை மெரினா கடற்கரை பெற்றுவிட்டது.

தமிழர்களின் சரித்திர பண்பாட்டு வீர அடையாளமான ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டம் மட்டும்தானா இது?.. இல்லவே இல்லை!... அரைநூற்றாண்டுக்கும் மேலாக தொடரும் காவிரி பிரச்சினையை தீர்த்து வைக்க அக்கறை காட்டாதது, மீனவர்கள் பிரச்சினையில் ஒப்புக்காக அணுகுவது,முல்லைபெரியாறு விவகாரம், பொங்கல் பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுக்காமை, தங்கள் உயிருக்கும்
மேலான தாய்மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது... இப்படி ஏராளமான பிரச்சினைகளில் மத்திய அரசு மீது ஏற்பட்டிருந்த கோபக்கனல் அடுக்குகளின் வெடிப்பும் தான் இந்த அறப்புரட்சிப் போராட்டத்திற்கு வித்திட்டது என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

0 Responses to வரலாறு படைத்த மெரினா போராட்டம்!

Post a Comment

Followers