Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை என்று பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இலங்கைச் சிறையில் உள்ள 61 தமிழக மீனவர்களையும், 116 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை இரவு, பிரதமருக்கு அனுப்பியுள்ள கடித விவரம்:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடித் தளத்திலிருந்து இரண்டு இயந்திரப் படகுகளில் கடந்த 4 -ஆம் தேதி, 10 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை தலைநகரம் கொழும்புவில் கடந்த 2 -ஆம் தேதி, இரு நாட்டு அமைச்சர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் மூலம் மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.அப்பாவி ஏழை மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடித்து வருகின்றனர். அவர்களைக் காக்கும் வகையில் மத்திய அரசு உறுதியான சமிக்ஞைகளை இலங்கைக்கு அளிக்க வேண்டும். பாக். நீரிணை பகுதியில் தமிழக மீனவர்களுக்கு உள்ள மீன்பிடி உரிமையை மீட்டெடுப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

மன அழுத்தம்: இலங்கையின் கடல் பகுதிகளில் தமிழக மீனவர்களின் 116 படகுகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படகுகளை விடுவிக்காத உத்தியை இலங்கை கடைப்பிடித்து வருவது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய மனஅழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. படகுகளை விடுவிக்க பரிசீலிப்பதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டாலும் அதன் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

எனவே இலங்கை கடற்பரப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் மிகப்பெரிய சேதத்துக்கு ஆளாவதற்கு முன்பு அவற்றை விடுவிக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.கடந்த 4 -ஆம் திகதி பிடித்துச் செல்லப்பட்ட 10 மீனவர்கள் உள்பட இலங்கைச் சிறைகளில் உள்ள 61 தமிழக மீனவர்கள், 116 படகுகள் ஆகியவற்றை எந்த தாமதமும் இன்றி உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.