Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எங்கள் செழுமைமிகு பண்பாட்டினால் பிரித்தறுக்க முடியாத இணைப்புடையவர்கள் தமிழ் மக்கள் என்று ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் திரண்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்கள் முன்னெடுத்துள்ள ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தின் பின்னர், வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உலகின் பழமையான செம்மொழிகளின் பட்டியலில் தமிழ் சேர்க்கப்பட்டிருக்கிறது. இற்றைக்கு 3000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த சிந்துவெளி எனும் மூத்த நாகரிகமான சிந்துவெளியில் ஆதித் தமிழ் பற்றிய குறிப்புக்கள் உண்டெனவும் ஆய்வுகள் சொல்கின்றன.

இப்படியாக மொழியடிப்படையில் மூத்ததாக மதிக்கப்படும் தமிழை தம் தாய் மொழியாகக் கொண்ட தமிழர்களாகிய நாம் உலகளவில் ஒடுக்கப்படுகின்றோம். தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும், நாம் கொண்டிருக்கும் தனித்துவமான அனைத்து அடையாளங்களும் அவிழ்த்துவீசப்படும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நாட்டைப் பறித்தனர். அகதியானோம். நிலத்தைப் பறித்தனர். ஏதிலியானோம். மிச்சசொச்ச மரபுரிமைசார் பண்பாட்டு (தொன்றுதொட்டு பேணிக்காத்துவரும் நம் சமூக நடைமுறைகள்) அடையாளங்களுடன் உலகம் முழுவதும் அலைந்துழல்கின்றோம். இந்த அலைந்துழவில் கசியும் துயரின் வலியை வேறு எவ்வினமும் கடந்திருக்காது என்பதை உலகே அறியும்.

இத்தனை அநியாயங்களையும் இச் செவ்வினத்தின் மீது கட்டவிழ்த்தது யாரெனில், உலக முதலாளிகளின் கைக்கூலிகளாக செயற்படும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும், அவர்களுக்கு முண்டுகொடுக்கும் அரசுகளும்தான். சுயமாகத் தம் காலில் நின்று, தம் பொருளாதாரத்தையும், பண்பாட்டையும் பேணிக்காத்து வரும் இனங்கள் அனைத்தையும் ஏதுமற்றவர்களாக்கி, அவர்களைத் தம் பொருளாதார அடிமைகளாக்கும் வல்லரசு நாடுகளின் திட்டத்திற்கு வழிவிட்டு நிற்கின்றன இவ்வரசுகள்.

அதன்வழியாகவே இப்போது எங்கள் மரபுரிமைகளும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அதற்கான திட்டங்களோடும், கவர்ச்சிகரமான விளம்பரப் பலகைகளுடனும் பன்னாட்டு நிறுவனங்கள் களத்துக்கு வந்துவிட்டன. அவர்களுக்கு வரவேற்பளிக்க அரசுகளும் தயாராகிவிட்டன.

அந்த வரவேற்பைத்தான் இந்திய அரசு “பீட்டா” என்கிற அமெரிக்க அமைப்புக்கு அளித்துக்கொண்டிருக்கிறது. “பீட்டாவின்” பின்னணியில் நின்று இந்திய உபகண்டத்தின் தொல்குடித் தமிழர்களின் மரபுரிமைகளில் ஒன்றான ஏறுதழுவுதல் விளையாட்டை தடைசெய்யவும் தன் நீதிக் கரங்களை அரசு கொஞ்சமும் கூச்சமின்றி பயன்படுத்துகின்றது. தமிழ் நாகரிகத்தின் தோற்றம் தொட்டு விளையாடப்பட்டு வந்த ஏறுதழுவுதல் என்கிற வீர தீர விளையாட்டை மிருகவதை எனக் கூறி தடைசெய்யவும் துணிந்துவிட்டது. இவை எல்லாவற்றுக்கும் பின்னால் அழுக்குநிறைந்த வணிக தந்திரம் கிளையோடியிருப்பதை இளைஞர்களாகிய நாம் உணர்கின்றோம்.

இவ்வாறு ஆக்கிரமிக்கப்படும் மரபுரிமை மீட்புக்காகத்தான் எம் தொப்புள்கொடி சொந்தங்களான தமிழக இளைஞர்கள் வீதியில் இறங்கியிருக்கின்றனர். அவர்களிடம் தம் மரபுரிமையை மீட்கள உயர்த்தப்பட்ட கைகளையும், வானைப் பிளக்கும் குரல்களையும் தவிர வேறு ஆயுதங்கள் இல்லை.

தமிழக கடற்கரைகளிலும், கிராமங்களிலும், வீதிகளிலும் ஒற்றுமையுணர்வோடு கிளர்ந்திருக்கும் எம் சொந்தங்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கவே நல்லூரடியில் இணைகிறோம். தமிழகத்தின் அலங்காநல்லூரில் திரண்ட இளைஞர்களுக்கு தோள்கொடுக்கவே ஈழத்தின் நல்லூரடியில் திரண்டிருக்கிறோம்.
நாம் எழ எழ வீழ்த்தப்பட்டபோதெல்லாம், தம் உடலை தீயில் விழுத்தி எமக்காக உயிர்தந்த உறவுகள் அவர்கள். அவர்களுக்கு ஒரு இன்னல் நிகழேல், பாக்கு நீரிணையால் பிரிந்து கிடப்பினும், தோப்பாகக் கரம்கோர்ப்போம் என்பதை தமிழரை ஒடுக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் சொல்லிக்கொள்ளவே இங்கு திரண்டிருக்கிறோம்.

தமிழர்களாகிய நாம் கால நீட்சியின் அலங்கோலத்தினால் திக்குத்திக்காகப் பிரிந்து கிடப்பினும் உணர்வால் எப்போதும் ஒன்றித்தவர்கள். பல்லாயிரம் வயது கொண்ட எங்கள் செழுமைமிகு பண்பாட்டினால் பிரித்தறுக்க முடியாத இணைப்புடையவர்கள். எங்கள் கிளைகள்தான் முறிக்கப்பட்டிருக்கின்றனவே தவிர வேர்களல்ல. தமிழ் எனும் ஆணிவேர் மிகப் பலமானது என்பதை உலகின் முன் நினைவுபடுத்துகின்றோம்.” என்றுள்ளது.

0 Responses to ‘செழுமைமிகு பண்பாட்டினால் பிரித்தறுக்க முடியாத இணைப்புடையவர்கள் தமிழர்கள்’; ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் திரண்ட யாழ். இளைஞர்கள்!

Post a Comment

Followers