Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினரும், உறவினரும் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் நியாயமானது. அதனை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்திடமும், பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்ட தங்களின் உறவுகள் எங்கே என்று தானே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு உண்மையான பதில் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சின் துணைச் செயலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சில மாதங்களுக்கு முன்பு வவுனியா சென்ற போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை, குறிப்பாக பல தாய்மார்கள், மனைவிமார்கள் என்னை சந்தித்தார்கள். அதனை தொடர்ந்து அந்த விடயத்தை பாராளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணையாக நாங்கள் கிளப்பி ஒரு விவாதம் நடத்தினோம்.

அதற்கு பிறகு தான் ஒரு சில மாதங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் திறப்பது என முடிவெடுத்து அது சட்டமாக பலவிதமான குழப்பங்களின் மத்தியில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம் இன்னும் அமுல் படுத்தப்படவில்லை.

இந்த பெற்றோர்கள், மனைவிமார்கள், பிள்ளைகள் என்ன கேட்கின்றார்கள், தங்கள் சொந்தங்களுக்கு என்ன நடந்தது என அறிய விரும்புகின்றார்கள். இராணுவத்தால், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமது பிள்ளைகள், கணவன்மாருக்கு என்ன நடந்தது என அறிய விரும்புகின்றார்கள். அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்பது பற்றி தெளிவான பதில் இருக்க வேண்டும் என்று கோருகின்றார்கள். அவர்களது கோரிக்கை நியாயமானது.

இந்த நிலைமை தொடர கூடாது, உண்மையை அறிந்து மக்களது மனதில் சமாதானம் ஏற்பட கூடிய வகையில் அதற்கு பதில் அளிக்கப்பட வேண்டும். அந்த மக்களுக்கு ஒரு ஆறுதல் கொடுக்கப்பட வேண்டும். அந்த மக்களுக்கு ஒரு அமைதி கொடுக்கப்பட வேண்டும். அவர்களது மனதில் சாந்தி ஏற்பட கூடிய வகையில் ஒரு முடிவுக்கு வந்து அது ஒரு உத்தியோகபூர்வமான முடிவாக வெளிவர வேண்டும். இந்த மக்களின் உண்ணாவிரத போராட்டத்தில் உள்ள நியாயத்தை எவரும் மறுக்க முடியாது.” என்றுள்ளார்.

0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ‘உண்மையான பதில்’ வழங்கப்பட வேண்டும்: சம்பந்தன்

Post a Comment

Followers