Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிகாரத்தை பலப்படுத்துவது அல்ல. மாறாக, அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதே நாட்டின் இன்றைய முக்கிய தேவையாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிலையான அபிவிருத்தி யுகம் ‘தேசிய வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் உத்தியோகபூர்வ வைபவம் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதம நீதியரசர் ஸ்ரீபவன், அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

“நாட்டின் எதிர்காலம் தொடர்பில் அவசியமான விடயங்களை உள்ளடக்கிய புதிய தேசிய வேலைத் திட்டம் புதிய வருடத்தில் ஆரம்பமாகிறது. சர்வதேச முன்னேற்றத்தோடு எமது நாட்டுக்குப் பொருத்தமானதைத் தெரிவு செய்து பொறுப்புக்களை நிறைவேற்றி பயணத்தை முன்னெடுப்பது இன்று எமது தேவையாகவுள்ளது.

எமக்கு பல ஆயிரமாண்டுகால சிறந்த வரலாறு உள்ளது. ‘நீங்கள் இந்த பூமியின் பாதுகாவலர்’ என மஹிந்த தேரர் அன்று போதித்தது இன்றும் அது எமக்குப் பொருந்தும். நிலையான அபிவிருத்தி தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ள நிலையில் விசேட மாநாடுகள், அமர்வுகள், பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதுடன் பல முன்னணி நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் சகல உலக நாடுகளும் ஐ. நா. வின் நிலையான அபிவிருத்தி பிரகடனத்தில் இணைந்து செயற்பட்டு வருகின்றமை முக்கிய அம்சமாகும்.

தத்தமது நாட்டுக்குப் பொருத்தமான வகையில் இதற்கான அபிவிருத்தித் திட்டங்களை அந்த நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. நாமும் சர்வதேச நாடுகளின் வேலைத் திட்டங்களை ஆய்வுக்கு உட்படுத்தி செயற்படவுள்ளோம். இதற்கிணங்க தேசிய ரீதியில் செயற் திட்டங்களை நாம் ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகும்.

2030ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை நிலையான அபிவிருத்தி யுக வேலைத் திட்டங்களை தயாரித்துள்ளது. இதற்கமைய எமது நாட்டுக்குப் பொருத்தமான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

நாடு தொடர்பான இலக்கை வெற்றிகொள்வதற்கு எமது கடமைகள் பொறுப்புக்களை நிறைவேற்றி முன்னேறிச் செல்ல வேண்டிய தேவை எமக்குள்ளது. இயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடலைப் பாதுகாத்துக்கொண்டு இத்தகைய வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சர்வதேச நாடுகளுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

விவசாய அபிவிருத்தியை இலக்காகக் கொண்டதாகவே எமது திட்டங்கள் அமைந்துள்ளன. அதனையொட்டியதாகவே நிலையான அபிவிருத்தி யுகத்திற்கான வேலைத் திட்டங்கள் அமையும். தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் அறிஞர்களின் அனுபவத்துடனேயே தேசிய கைத்தொழில் துறை முன்னேற்றத்திற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

2017ஆம் ஆண்டை வறுமை ஒழிப்புக்கான ஆண்டாக நாம் கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர் பிரகடனப்படுத்தியுள்ளோம், அதற்கான செயற்பாடுகள் சில அமைச்சுக்களுக்கோ நிறுவனங்களுக்கோ மட்டுப்படுத்தப்படவில்லை. அனைத்துத் தரப்பினருக்கும் அதற்கான பொறுப்புகள் உள்ளன.

வறுமை ஒழிப்பு போன்றே உணவு பாதுகாப்பும் முக்கியமானதொரு அம்சமாகும். தேசிய சர்வதேச ரீதியான ஆய்வுகளின் படி மூன்றில் ஒரு பகுதி உணவு வீண் விரயம் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகின் சனத்தொகையில் 4இல் ஒரு தொகையினர் வறுமையிலுள்ளனர். உலகில் 100ற்கு 20 வீதமானோர் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கையிலும் மூன்றில் ஒரு பகுதி உணவு வீண் விரயம் செய்யப்படுகிறது. இவற்றை நாம் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது.

‘நிலையான அபிவிருத்தியுகம்’ வேலைத் திட்டத்தின் மூலம் சிறந்த கல்வி, நீர் பாதுகாப்பு, நிலையான மின் உற்பத்தி, வருமான முரண்பாடுகளை இல்லாதொழித்தல், நகர அபிவிருத்தி, சுற்றாடல் பாதுகாப்பு, நல்லிணக்கம் மூலமான சமாதானம் போன்றவற்றிற்கு முக்கியத்துவமளிக்கப்படவுள்ளது.

வெளிநாட்டில் தொழில் புரியும் பணிப் பெண்கள் மூலமே எமது நாட்டுக்குப் பெருமளவு வருமானம் கிடைத்து வருகிறது. இந்த நிதியிலிருந்தே எமது நாட்டுக்குத் தேவையான டீசல், பெற்றோல் போன்றவை கொள்வனவு செய்யப்படுகிறது.

2017ஆம் ஆண்டு நாட்டைப் பலப்படுத்தும் வருடமாக அமைவது முக்கியம். வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து விடுதலை பெறவேண்டியது அவசியமாகும். அத்துடன் எமது ஏற்றுமதி உற்பத்தியை அதிகரிப்பதும் முக்கியமாகும்.” என்றுள்ளார்.

0 Responses to நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதே நாட்டின் இன்றைய தேவை: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers