Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இருத்தல் பற்றியும், இல்லாமை பற்றியும், தனிமனித தத்துவம் பற்றியும், ஆழமான தரிசனங்களை மேற்கொண்டவர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள். தமிழ்ச் சமூகத்தை சிறைப்பிடித்திருக்கும் சடங்குகளுக்குள்ளும், மூடநம்பிக்கைகளுக்குள்ளும் இறுதிவரை சிக்கிக் கொள்ளாமல் ஒரு புரட்சிகர வாழ்வை வாழ்ந்து மடிந்த பிரம்மஞானி அவர்.

தான் மரணித்ததும் தனது உடலை எரித்து விட்டு எஞ்சும் சாம்பலை (அஸ்தி) இயற்கையோடு சங்கமிக்க வைக்குமாறு தனது அந்திம நாட்களில் தனது துணைவியாரான அடேல் அன்ரியிடம் அவர் வேண்டிக் கொண்டார். அதன்படியே அவரும் பாலா அண்ணையின் ஈம நிகழ்வை நடத்தி அவரது அஸ்தியை இயற்கையோடு சங்கமிக்க வைத்தார்.

பாலா அண்ணையின் தனிமனித தத்துவத்தையும், அவரது புரட்சிகர வாழ்க்கை முறையையும் நன்கு புரிந்து கொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களும், பாலா அண்ணையின் விருப்பத்திற்கு அமைவாக அவரது அந்திம நிகழ்வை அடேல் அன்ரி நடாத்துவதற்கு பரிபூரண ஒத்துழைப்பு வழங்கியதோடு, அடேல் அன்ரியின் மனம் நோகும் வகையிலான எந்தச் செய்கைகளுக்கும் அன்று இடமளிக்கவில்லை.

இன்று பாலா அண்ணையின் அஸ்தி எவரிடமும் இல்லை. 20.12.2016 அன்று அடேல் அன்ரி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது போன்று பாலா அண்ணையின் அஸ்தி அவர் விரும்பிய இயற்கை எழில்கொஞ்சும் சூழலோடு பத்தாண்டுகளுக்கு முன்னரே சங்கமமாகி விட்டது. முதிர்ந்த மரங்களின் கீழேயும், மென்மையாக விரிந்தோடும் அருவியொன்றிலும், உதிர்ந்த இலைகளின் மத்தியிலும், மலர் மஞ்சங்களின் நடுவிலும் ஒன்றித்திருக்கும் பாலா அண்ணையின் அஸ்தியை இனி எவர் நினைத்தாலும் இயற்கையிடமிருந்து பிரித்தெடுத்து விட முடியாது.

யதார்த்தம் இவ்விதம் இருக்கும் பொழுது, பாலா அண்ணையின் அஸ்தியின் ஒரு பகுதி தம்மிடம் இருப்பதாகவும், அதனை ஒக்ஸ்போர்ட்டின் காட்டுப்புறத்தில் உள்ள மாட்டுப்பண்ணையில் புதைத்து, அங்கு பாலா அண்ணைக்கு கற்தூபி கட்டப் போவதாகத் தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் கும்பல் அறிவித்திருப்பதை கடைந்தெடுக்கப்பட்ட அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகவே நாம் கருத வேண்டும்.

இது போதாதென்று பாலா அண்ணையின் அஸ்தி என்று இப்பொழுது எதுவுமே இல்லை என்று அடேல் அன்ரி அவர்கள் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்ட பின்னரும்கூட, அடேல் அன்ரிக்குத் தெரியாமல் பாலா அண்ணையின் அஸ்தியின் ஒரு பகுதி தமிழீழ தேசியத் தலைவரின் பணிப்பிற்கு அமைவாக எடுத்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதாகப் புதிதாக இவர்கள் அவிழ்த்து விட்டிருக்கும் கட்டுக்கதை, அரசியல் இலாபத்திற்காக எந்த விதமான நாகரீக வரம்புகளையும் மீறுவதற்கும் இவர்கள் தயாராக உள்ளார்கள் என்பதையே பட்டவர்த்தனமாக்குகின்றது.

ஒருவருடைய அஸ்தியை என்ன செய்வது என்று தீர்மானிக்கும் உரிமை அவரது உரித்துனர்களுக்கு மட்டுமே உள்ளது. இதுதான் தமிழர்களின் நாகரீகமும் கூட. இறந்தவரின் உரித்துனருக்குத் தெரியாமல் இறந்தவரின் அஸ்தியின் ஒரு பகுதியை வேறு ஆட்கள் எடுத்து வைப்பது என்பது நாகரீகமற்ற திருட்டுச் செயலாகவே தமிழ்ச் சமூகத்தால் பார்க்கப்படும். யதார்த்தம் இவ்விதம் இருக்கும் பொழுது, அடேல் அன்ரிக்குத் தெரியாமல் பாலா அண்ணையின் அஸ்தியின் ஒரு பகுதியை எடுத்து வைக்குமாறு தலைவர் அவர்கள் பணித்தார் என்று தலைமைச் செயலகம் என்ற குழுவினர் கூறுவது, தமிழீழத் தேசியத் தலைவருக்குக் களங்கம் கற்பிப்பதற்கு இவர்கள் எடுக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும்.

ஆக, ஏதோ ஒரு வெற்றுச் சாம்பலை பாலா அண்ணையின் அஸ்தி என்று கூறி, அந்த வெற்றுச் சாம்பலை இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் காட்டுப்புறத்தில் உள்ள மாட்டுப்பண்ணையில் புதைத்து, அங்கு மக்களின் பணத்தில் கற்தூபி ஒன்றை நிர்மாணித்து, இங்குதான் பாலா அண்ணையின் எச்சங்கள் உள்ளன என்று கூறி அதனைப் புனித பூமியாக்கி மக்களிடம் பணம் பறிக்கும் அஸ்தி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கும் தலைமைச் செயலகம் என்ற கும்பல் தயாராகி விட்டது என்றே கருத வேண்டியுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், தம்மிடம் உள்ள வெற்றுச் சாம்பலை பாலா அண்ணையின் அஸ்தி என்று நிரூபிப்பதற்காக, பாலா அண்ணை கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னாள் பணிப்பாளரான கே.பி ரெஜி என்றழைக்கப்படும் காந்தலிங்கம் பிறேம்ரெஜி தான் அவருக்கு கொள்ளி வைத்தார் என்றும், அதன் காரணமாக அவரிடம் சுடலை நிர்வாகிகளால் பாலா அண்ணையின் அஸ்தி கையளிக்கப்பட்டது என்றும் இன்னுமொரு கட்டுக்கதையை இப்பொழுது தலைமைச் செயலகம் என்ற இந்தக் கும்பல் அவிழ்த்து விட்டுள்ளது.

காலம் காலமாக இந்துக்கள் பின்பற்றும் வழக்கத்திற்கு அமையத் தனக்கு கொள்ளி வைக்குமாறு ரெஜியிடம் பாலா அண்ணை கேட்டுக் கொண்டார் என்று ஒரு கதைக்கு வைத்துக் கொள்வோம். அப்படியே ரெஜியும் கொள்ளி வைத்தார் என்றும் வைத்துக் கொள்வோம். இப்பொழுது இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஒரு கிறிஸ்துவத் தாய்க்கும், கிறிஸ்துவராக மதம் மாறிய சைவப் பூசகர் வழிவந்த தந்தைக்கும் மகனாகப் பிறந்து, கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்று எழுதிய நாத்தீகரான பாலா அண்ணை எப்பொழுது இந்துவாக மதம் மாறினார்? அப்படியென்றால் ஐம்பதுனாயிரம் மக்கள் கலந்து கொண்ட பாலா அண்ணையின் வீரவணக்க நிகழ்வில் ஏன் எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்து மதக் கிரியைகள் எவையும் நிகழவில்லை?

இறந்தவர்களுக்குக் கொள்ளி வைப்பது என்பது இந்துக்களைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான நிகழ்வு. கொள்ளி வைப்பது என்பது வெறுமனவே இறந்தவரின் சிதைக்கு தீமூட்டுவதைத் தொடக்கி வைக்கும் நிகழ்வு மட்டுமன்று. இறந்தவரின் மறுலோக வாழ்விற்கு ஆதாரமான நிகழ்வாகவும் கொள்ளி வைத்தல் இந்துக்களால் பார்க்கப்படுகின்றது.

இந்துக்களைப் பொறுத்தவரை மனிதர்கள் மரணிப்பதில்லை. அவர்களின் உடல்கள் மட்டுமே இறந்து விடுவதாகக் கருதப்படுகின்றன. அதேநேரத்தில் இறக்கும் உடல்களில் இருந்து புறப்படும் ஆன்மா, அது செய்த பாவ, புண்ணியங்களுக்கு அமைய மறுபிறவியை எடுப்பதாகக் கருதப்படுகின்றது. உடலுக்குரிய ஆன்மா நல்வினை புரிந்திருந்தால் அது அமரத்துவம் பெற்றுத் தேவலோகம் சென்று விடும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதாவது தனது வாழ்நாளில் நல்வினை புரிந்தவர் தேவர் என்ற நிலையை எய்துவிடுவாராம். அதனால்தான் இறந்தவர்களைப் பொதுவாக இந்துக்கள் அமரர்கள் என்று அழைப்பார்கள். எனவே ஒருவர் இறந்ததும் அவருக்கு ஆற்றப்படும் இந்து மதச் சடங்குகள் அனைத்தும் அவரை தேவலோகப் பயணத்திற்குத் தயாராகி விட்ட ஒருவராகக் கருதியே நிகழ்த்தப்படுகின்றன.

இங்குதான் கொள்ளி வைப்பது முக்கியத்துவம் பெறுகின்றது. இறந்த ஒருவருக்குக் கொள்ளி வைப்பவர், அமரத்துவம் எய்தியதாகக் கருதப்படும் தனது இறந்த உறவினரின் ஆன்மா தேவலோகம் செல்வதற்கு அந்தணரின் உதவியுடன் வழிவகை செய்பவராகவே பார்க்கப்படுகின்றார். பண்டைக் காலம் தொட்டு இக்காலம் வரை இந்துக்களின் வாழ்வோடு ஒன்றித்துப் போயிருக்கும் இந்த வைதீக வழிவந்த மரபு, சங்க காலத்திலேயே தமிழர்களின் வாழ்வில் புகுத்தப்பட்டு விட்டது. அதாவது ஒருவருக்கு கொள்ளி வைக்கப்படாது போனால், அவரது ஆன்மா தேவலோகத்தைச் சென்றடையாது என்ற நம்பிக்கை வைதீகர்களால் சங்கத் தமிழர்களிடையே விதைக்கப்பட்ட ஒன்று. இதன் காரணமாக அந்தணர்களையும், பெண்களையும், நோயாளிகளையும் கொல்வது எவ்வாறு பாவச் செயலாகப் பார்க்கப்பட்டதோ, அவ்வாறே கொள்ளி வைப்பதற்கு உரித்துனர் இல்லாத ஒருவரைக் கொல்வதும் பாவச் செயலாகவே கருதப்பட்டது. இது பற்றிய குறிப்பு புறநானூற்றில் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிக்காக நெட்டிமையார் என்ற புலவர் எழுதிய பாடலில் உள்ளது:

‘ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென’

அதாவது கொள்ளி வைப்பதற்கு வாரிசுடைய ஒருவரைப் பொன்னைப் பெற்றதற்கு நிகரான பேறு பெற்றவராகவும், அவ்வாறு கொள்ளி வைப்பதற்கு உரித்துனர் இல்லாத ஒருவரைப் பரிதாபத்திற்குரியவராகவும் பண்டைக் காலத்திலேயே வைதீகவாதம் வரையறுத்தது: இந்த நம்பிக்கையைச் சங்கத் தமிழர் வாழ்விலும் வைதீகவாதம் புகுத்திக் கொண்டது. இதுவே மரபு என்ற பெயரில் இந்து மதச் சடங்குகளைப் பின்பற்றும் தமிழர்களால் இன்றைய காலத்திலும் தொடரப்படுகின்றது.

இப்பொழுது பாலா அண்ணையின் விடயத்திற்கு வருவோம். 2003ஆம் ஆண்டு விடுதலை என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட தனது நூலில் மரணம் பற்றி பின்வருமாறு பாலா அண்ணை எழுதியிருந்தார்:

‘காலத்தில் நிகழும் எனது பயணம் சாவுடன் முடிவடைகிறது. நிலையற்ற இந்த உலகில், நிலையான ஒன்று உண்டு என்றால் அதுதான் சாவு. எனது உயிர்ப்பின் கணத்திலிருந்து சாவும் என்னோடு உடன்பிறப்பு எடுத்திருக்கிறது. எனது இருத்தலின் ஒவ்வொரு கணத்திலும் இல்லாமை என்ற சூன்யத்தை நான் எதிர்கொண்டு வாழ்கிறேன். எனது சாவை நான் பட்டறிந்து கொள்ள முடியாது. இந்த உலகில் அது மட்டும் எனது அனுபவத்திற்கு அப்பாலானது. எனது அனுபவத்தின் முடிவாக, எனது இருத்தலின் முடிவாக, நான் இல்லாமல் போகும் இறுதிக் கணமாகச் சாவு என்னை எதிர்கொண்டு நிற்கிறது.’

அதாவது பாலா அண்ணையைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் இருப்பு என்பது அவனது மரணத்தோடு நிறைவுக்கு வரும் ஒன்று. இன்னொரு விதத்தில் கூறுவதானால், மரணத்திற்குப் பின்னர் மறுலோகம் என்றொன்று இருக்கின்றதென்றோ, அன்றி மரணத்தின் பின்னர் தான் அமரத்துவம் பெற்று தேவனாக புதுப்பிறவியெடுப்பேன் என்றோ எந்தவொரு தருணத்திலும் பாலா அண்ணை நம்பவில்லை. இதுபற்றி விடுதலை நூலின் இன்னுமொரு இடத்தில் பின்வருமாறு பாலா அண்ணை குறிப்பிடுகின்றார்.

‘ஆதியிலிருந்தே மனிதன் ஒரு கனவு கண்டான். இந்தப் பூவுலக வாழ்வின் நிர்ப்பந்தங்களுக்கு அப்பால், நிச்சயமற்ற தன்மைகளுக்கு அப்பால், துன்பத்தின் அழுத்தத்திற்கு அப்பால், காலத்தின் எல்லைக்கு அப்பால், சாவின் நியதிக்கு அப்பால், இல்லாமை என்ற சூன்யத்திற்கு அப்பால், ஒரு நித்திய சீவியத்தை, பேரானந்த பரவசத்தில் லயித்திருக்கும் சிரஞ்சீவியான வாழ்வைக் கனவு கண்டான். மனிதனின் இந்தக் கனவிலிருந்து ஒரு கருத்துலகம் பிறந்தது. அழியாத ஆன்மா என்றும், ஆவி உலகம் என்றும், அடுத்த பிறவி என்றும், சுவர்க்கம் என்றும், நரகம் என்றும் இந்தப் பூவுலகத்திற்கு அப்பால், நாம் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மடியும் இந்த நிஜவுலகத்திற்கு அப்பால், நாம் தொட்டுணர்ந்து, பட்டறிந்து கொள்ளும் இந்தப் புறவுலகத்திற்கு அப்பால், மனிதன் ஒரு பூடகமான உலகைக் கற்பிதம் செய்து கொண்டான். இந்தக் கற்பனாவாதம் இயற்கைக்குப் பதிலாக ஒரு இந்திரலோகத்தைப் படைத்தது. மனிதன் ஒரு அந்நிய உலகத்தின் அபூர்வப் பிறவியாக மாற்றப்பட்டான். இதனால் பூமியில் புதைந்து கிடந்த மனிதனின் பூர்வீக வேர் பிடுங்கி எறியப்பட்டது. மனிதனின் மனக்குகை இருளுக்குள்ளும், அடிமன பாதாளத்திற்குள்ளும், ஆதியும், அந்தமுமற்ற அழியாத ஆன்மா ஒன்று புகுந்து கொண்டது.’

ஆக, பாலா அண்ணையைப் பொறுத்தவரை, ஆன்மாவும் கற்பனை, அமரத்துவமும் கற்பனை, இந்திரலோகமும் கற்பனை. சாகும் வரை மனிதர்கள் வாழும் வாழ்வு மட்டுமே உண்மையானது. இவ்வாறாக சிந்தித்த பாலா அண்ணை என்ற பிரம்மஞானி, சடங்குகள் பற்றி என்ன கூறினார்?

‘நாம் பிறந்த கணத்திலிருந்தே கருத்துலகம் எம்மை ஆட்கொண்டு விடுகிறது. நாம் விழிப்புணர்வு பெறுவதற்கு முன்னரே எமக்கு விலங்குகளை மாட்டி விடுகிறது. விபரமறியாத பருவத்திலேயே எமது விதியை நிர்ணயித்து விடுகிறது.

நாம் பிறந்த கணத்திலிருந்து எமக்கொரு பெயர் என்றும், எமக்கொரு சாதி என்றும், எமக்கொரு மதம் என்றும், மரபு என்றும், சம்பிரதாயம் என்றும் கருத்துலகம் குத்திவிடும் சமூகக் குறிகள் சுடுகாடுவரை எம்மைப் பின்தொடர்கின்றன. நாம் வாழ்ந்த குடும்பம், நாம் படித்த பாடசாலை, நாம் வழிபட்ட கோவில், நாம் வாசித்த நூல்கள், நாம் பழகிய நண்பர்கள், நாம் வரித்துக் கொண்ட ஆசான்கள் என நாம் கொண்ட உறவுகளால் காலம் காலமாக எமது மூளையில் திணிக்கப்பட்ட எண்ணங்கள், நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், உலகப் பார்வைகளால் எமது மனமும், எமது சுயமும் தோற்றப்பாடு கொள்கிறது. எம்மீது திணிக்கப்பட்டதும், நாமாகப் பற்றிக் கொண்டதுமான கருத்துக்கள் எமக்கு உள்ளே இருப்புக் கொண்டு எம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றன. நாம் கருத்துக்களால் வனையப்பெற்ற சமூகப் பொம்மைகள்.’

இங்கு ஒரு விடயத்தை பாலா அண்ணை தெளிவுபடுத்துகின்றார். மனிதனை ஆட்கொண்டிருக்கும் கருத்துலகம் அவன் இறந்த பின்னரும் அவனது சுடுகாடு வரை சடங்குகள் வடிவில் தொடர்கின்றது என்பதுதான் அது.

ஆக, பாலா அண்ணையின் விடுதலை நூலில் இருந்து மேற்கோள் காட்டப்பட்ட மேற்கண்ட பதிவுகளை படிப்பவர்களுக்கு ஒரு விடயம் புரியும். வைதீகர்களால் சங்கத் தமிழர்களின் வாழ்வில் புகுத்தப்பட்டு, இன்று தமிழ் இந்துக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும் கொள்ளி வைத்தலும், அதனையொட்டிய சடங்குகளும் பாலா அண்ணையால் நிராகரிக்கப்பட்டவை. அப்படிப்பட்ட பாலா அண்ணை, தனக்குக் கொள்ளி வைக்குமாறு கே.பி.ரெஜியிடம் கேட்டார் என்பதும், அவ்வாறு ரெஜியும் கொள்ளி வைத்தார் என்று கூறுவதும் மிகவும் வேடிக்கையானது தான்.

நாத்தீகர்களாக இருப்பவர்களில் பலர் பொதுவாக மதங்களில் உள்ள தத்துவங்களை ஆழமாகக் கற்றறிந்தவர்களாக இருப்பதில்லை. ஆனால் பாலா அண்ணை விதிவிலக்கானவர். சைவ, கிறிஸ்துவ பூர்வீகங்களைக் கொண்டவர் என்ற வகையில் இரண்டு மதங்களின் சித்தாந்தங்களையும், வேதாந்தங்களையும் நுணுகி ஆராய்ந்தவர் பாலா அண்ணை. அதேபோன்று பௌத்த மதத்தையும் ஆழமாக ஆய்வு செய்தவர் அவர். இவ்வாறு மூன்று மதங்களையும் ஆழமாக ஆராய்ந்த பின்னரே கடவுள் என்பதும், ஆன்மா என்பதும், இந்திரலோகம் என்பதும் மனிதர்களின் கற்பனை என்ற முடிவுக்கு பாலா அண்ணை வந்தார். அதேநேரத்தில் நீட்சே, ஹேகல், கார்ள் மார்க்ஸ், சார்த்தர், அல்பேர்ட் கம்யூ, கைடேகர், போன்ற நாத்திகவாதிகளின் சித்தாங்களையும் கண்மூடித்தனமாக பாலா அண்ணை ஏற்கவில்லை. அவற்றையும் அவர் விமர்சித்தார். ஆக ஆத்தீகவாதத்தை மட்டுமன்றி நாத்தீகவாதத்தையும் விமர்சனக் கண்ணோட்டத்துடனேயே பாலா அண்ணை அணுகினார். இதனால் தான் பாலா அண்ணையின் விடுதலை நூலில் ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி, மிசேல் பூக்கோ போன்ற தத்துவஞானிகளும் தமக்கென்று தனியான இடத்தைப் பிடித்துள்ளார்கள்.

சரி, பாலா அண்ணையின் ஈம நிகழ்வில் என்னதான் நடந்தது?

14.12.2006 அன்று சாவைத் தழுவிய பாலா அண்ணைக்கான வீரவணக்க நிகழ்வு 20.12.2006 அன்று வடக்கு இலண்டனில் உள்ள அலெக்சாண்டரா பலஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு மக்களால் வீரவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானிய காவல்துறையின் உந்துருளி அணியினர் வழித்துணை வழங்க, பிஞ்ச்லி ஈஸ்ட் சுடுகாட்டிற்கு பாலா அண்ணையின் திருவுடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அடேல் அன்ரி, அன்ரியின் தாயார், பாலா அண்ணையின் இரத்த உறவினராகிய ஒருவர் மற்றும் பாலா அண்ணையோடு பணிபுரிந்த, பழகிய சிலரும் இருந்தார்கள். இவர்களோடு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலரும் நின்றிருந்தார்கள். கூடவே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொறுப்பாளர் என்ற வகையில் ரெஜியும் நின்றார். பாலா அண்ணைக்கான வீரவணக்க நிகழ்வையும், ஈம நிகழ்வையும் ஏற்பாடு செய்வதற்கு அடேல் அன்ரிக்கு உறுதுணை புரிந்த பிரித்தானிய தமிழ் ஒன்றியத்தின் பொறுப்பாளர் அ.சாந்தன் அங்கு முன்னிலை வகித்தார். பிஞ்ச்லி ஈஸ்ட் சுடுகாட்டில் உள்ள சிறிய மண்டபத்தில், முக்கால்வாசிக்கு திரைநீக்கம் செய்யப்பட்ட மேடை ஒன்றில் பாலா அண்ணையின் திருவுடல் தாங்கிய பேழை வைக்கப்பட்டிருந்தது. அங்கு எந்தச் சடங்குகளும் நடைபெறவில்லை. யாரும் எதுவும் பேசவில்லை. திடீரென எல்லோரும் பாலா அண்ணையின் திருவுடல் தாங்கிய பேழை வைக்கப்பட்டிருந்த மேடைக்கு அருகில் அழைக்கப்பட்டார்கள். எல்லோரும் மேடைக்கு அருகில் வந்ததும், சில வினாடிகளுக்கு உரையாற்றுவதற்கு ரெஜி அனுமதிக்கப்பட்டார். ‘பாலா அண்ணையின் இறுதிப் பயணம் இத்தோடு நிறைவுக்கு வருகின்றது’ என்று ரெஜி கூறினார். அதனைத் தொடர்ந்து மேடையின் திரை மூடப்பட்டது. அங்கிருந்த சுடுகாட்டின் பணியாளர்கள் மின்விசையை அழுத்தினார்கள்.

இதுதான் நடந்தது. ரெஜி கொள்ளி வைக்கவுமில்லை: பாலா அண்ணையின் திருவுடலை எரியூட்டும் மின்விசையையும் அழுத்தவுமில்லை.

சரி, பாலா அண்ணையின் திருவுடல் தகனம் செய்யப்பட்ட பின்னர் என்ன நடந்தது? இதனை 20.12.2006 அன்று தான் வெளியிட்ட அறிக்கையில் அடேல் அன்ரி அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது தனது அன்புக் கணவரின் திருவுடல் தகனம் செய்யப்பட்ட இரண்டு நாட்களின் பின்னர் அவரது அஸ்தி தன்னிடம் கையளிக்கப்பட்டதென்றும், அதனைத் தனது கணவரின் விருப்பத்திற்கு இணங்கத் தான் இயற்கையோடு சங்கமிக்க வைத்து விட்டதாகவும் ஐயம்திரிபற அடேல் அன்ரி கூறியிருக்கின்றார்.

ஆக, பாலா அண்ணையின் ஒரேயொரு உரித்துனரான அடேல் அன்ரியிடம் கையளிக்கப்பட்ட பாலா அண்ணையின் அஸ்தி எப்படி ரெஜியின் கைகளுக்குப் போயிருக்கும்? ரெஜி கொள்ளி வைக்கவுமில்லை. பாலா அண்ணையின் உறவினரும் இல்லை. பாலா அண்ணையின் அஸ்திக்கு உரித்துனரும் இல்லை. சுடலை நிர்வாகிகளிடமிருந்து பாலா அண்ணையின் அஸ்தியை ரெஜி பெற்றிருப்பதாயின், அல்லது அதில் ஒரு பகுதியைத் திருடியிருப்பதாயின், குறைந்த பட்சம் பாலா அண்ணையின் ஈம நிகழ்வையாவது அவர் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அவ்வாறு எதனையும் அவர் செய்யவே இல்லை. பாலா அண்ணையின் ஈம நிகழ்விற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு, அடேல் அன்ரியின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பிரித்தானிய தமிழ் ஒன்றியத்தின் பொறுப்பாளர் அ.சாந்தன் மட்டுமே அவருக்கு உறுதுணை புரிந்திருந்தார். அப்படி இருந்த பொழுதும், பாலா அண்ணையின் அஸ்தியைக் கையாளும் முழு உரிமையும் அடேல் அன்ரிக்கு மட்டுமே இருந்தது. அது பிரித்தானிய தமிழ் ஒன்றியப் பொறுப்பாளர் உட்பட வேறு எவருக்குமே இருக்கவில்லை.

அப்படியிருக்கும் பொழுது எப்படி ரெஜியால் பாலா அண்ணையின் அஸ்தியின் ஒரு பகுதியைப் பெற்றிருக்க முடியும்? இரவோடு இரவாக பிஞ்ச்லி ஈஸ்ட் சுடுகாட்டுக்குள் புகுந்து அஸ்தித் திருட்டில் ஈடுபட்டாரா?

பாலா அண்ணையின் இறுதி நிகழ்வில் ரெஜிக்கு இரண்டு பணிகளைப் பிரித்தானிய தமிழ் ஒன்றியத்தின் பொறுப்பாளர் வழங்கியிருந்தார். ஒன்று வீரவணக்க நிகழ்வின் பொழுது நடைபெற்ற அணிவகுப்பிற்கு ஆட்களைப் பயிற்றுவிப்பது. மற்றையது பாலா அண்ணையின் ஈம நிகழ்வு நடைபெற்ற சுடுகாட்டில் இறுதியுரை ஆற்றுவது. அவ்வளவுதான். இதற்கு அப்பால் பாலா அண்ணையின் இறுதி நிகழ்வில் ரெஜிக்கு எந்தப் பங்கும் இருக்கவில்லை.

எனவே, வெற்றுச் சாம்பலை வைத்துக் கொண்டு ஒக்ஸ்போர்ட் காட்டுப்புற மாட்டுப்பண்ணையில் அஸ்தி அரசியல் செய்ய முற்படும் தலைமைச் செயலகம் என்ற கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு நாகரீகம் அறிந்த ஒவ்வொரு தமிழர்களும் தெரிவிக்கக்கூடிய செய்திகள் இரண்டு தான். இல்லாத அஸ்தியை வைத்துக் கொண்டு அநாகரீக அரசியல் செய்வதை விடுத்து தமிழின அழிப்பிற்கு நீதி கிடைப்பதற்குத் தேவையான அரசியல் பணிகளை காத்திரமான முறையில் முன்னெடுங்கள். கடந்த பத்தாண்டுகளாகத் தனது அன்புக் கணவனை இழந்து, அரசியலில் இருந்து ஒதுங்கி வாழும் அடேல் என்ற வெள்ளையுள்ளம் கொண்ட பெண்மணியின் மனதை நோகடிக்காது அவரை இனியாவது நிம்மதியாக வாழ விடுங்கள்.

இதற்குப் பின்னரும் புதிது புதிதாக அஸ்திக் கதைகளைத் தலைமைச் செயலகம் என்ற கும்பல் கிளப்பி விடுவதும், பாலா அண்ணையின் அஸ்தி என்ற பெயரில் வெற்றுச் சாம்பலை வைத்து அநாகரீக அரசியல் செய்வதும், தமிழீழ தேச விடுதலைக்குக் கொள்ளி வைக்கும் இழிசெயலாகவே நாகரீகம் தெரிந்த ஒவ்வொரு தமிழர்களாலும் கருதப்படும்.

நன்றி: ஈழமுரசு

0 Responses to தேச விடுதலைக்குக் கொள்ளி வைப்போரின் அஸ்தி அரசியல் - கலாநிதி சேரமான்

Post a Comment

Followers