Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சொட்டுநீர் மானியம் பெறுவது இனி எளிதுதான் என்று கோவை எஸ்.நந்தகோபால் விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தண்ணீருக்காக ‘மூன்றாம் உலகப்போர் மூளும்’ என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். ஆனால், நம் நாட்டில் மாநிலங்களுக்கு இடையிலேயே தண்ணீருக்காகப் போர் மூண்டுகொண்டிருக்கிறது. இந்தச் சம்பவங்களெல்லாம் நாம் விழித்துக்கொள்வதற்கான சமிக்ஞைகள்தான். இனியாவது தண்ணீரைப் பணத்தைப் போல எண்ணி எண்ணிச் செலவழிக்க வேண்டும். அதற்கு முறையான சொட்டுநீர்ப் பாசனம், அதற்கான கருவிகள், கருவிகளைப் பராமரிக்கும் முறைகள் போன்றவை குறித்து அலசுகிறது, இக்குறுந்தொடர்.

சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பதற்காக அரசு மானியங்களை அள்ளித்தந்தாலும். அவை விவசாயிகளைச் சென்றடைவதில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருகின்றன. அவற்றைச் சரி செய்வதற்காகத் தற்போது, ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆன்லைன் முறை முன்பிருந்தே நடைமுறையில் இருந்தாலும், விவசாயிகள் சுலபத்தில் பயன்படுத்தக்கூடிய வகையில் அது இல்லை. அதனால், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் நிறுவனங்களின் முகவர்கள் மூலமாகவேதான் விவசாயிகள் விண்ணப்பித்து வந்தனர்.

முகவர்கள் கேட்கும் பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களைக் கொடுத்துவிட்டு, அவர்கள் கேட்கும் பணத்தையும் கொடுத்துவிட்டால்... சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொடுத்து விடுவார்கள். மானியம், சொட்டுநீர் அமைக்கும் நிறுவனங்களின் வங்கிக்கணக்குக்கே சென்றுவிடும். இந்த முறையில் தனக்கு வழங்கப்பட்ட மானியம் எவ்வளவு என்பது விவசாயிகளுக்கே தெரியாமல் இருந்தது. முகவர்கள் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டிய நிலைதான் இருந்தது. இந்தப் பிரச்னைகளுக்காக, விவசாயிகள் பயனடையும் வகையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்

மென்பொருளில் சில புதிய மாற்றங்களைச் செய்துள்ளது, தோட்டக்கலைத்துறை.தற்போது ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்போது. ஒவ்வொரு நிறுவனத்தின் விலைப் பட்டியலையும் விவசாயிகள் பார்வையிட முடியும். அவற்றிலிருந்து தனது நிதிநிலைமைக்கு ஏற்ற நிறுவனங்களை விவசாயிகளே தேர்வு செய்ய முடியும். அத்துடன், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கவிருக்கும் பரப்பளவைப் பதிவு செய்தால்... அதற்கான மானியத்தொகை எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலமாக மானியத்தின் முழுப் பலனையும் விவசாயிகள் அனுபவிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை!: https://tnhorticulture.tn.gov.in/horti/mimis/

என்ற இணையதள முகவரிக்குச் சென்றால்... நுண்ணுயிர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு எனும் பக்கம் திறக்கும். இந்தப் பக்கத்தைத் திறந்து இடதுபுறம் உள்ள மெனுவில் விவசாயி என்ற தலைப்பை கிளிக் செய்து விவசாயியே விண்ணப்பிக்க முடியும். புதிய விண்ணப்பம் செய்ய, ஏற்கெனவே செய்த விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, நிறுவனங்களின் விலைப் பட்டியல் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் தனித்தனித் தலைப்புகள் இருக்கும். அவற்றில் தேவையான தலைப்பை கிளிக் செய்து விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

விவசாயி, தோட்டக்கலை அலுவலர், நிறுவனங்கள் என இந்த மூன்று நபர்களில் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால், எந்த விவசாயி பெயரில் விண்ணப்பம் செய்யப்படுகிறதோ, அந்த விவசாயியின் குடும்ப அட்டை எண் மற்றும் செல்போன் எண்ணைப் பதிவு செய்தால்தான் விண்ணப்பிக்கவே முடியும். செல்போன் எண் பதிவு செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட விவசாயியின் செல்போனுக்கு ‘ஒன் டைம் பாஸ்வேர்டு’ (OTP) குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்தப் பாஸ்வேர்டை பதிவு செய்தால்தான் விண்ணப்பிப்பதைச் சமர்ப்பிக்க முடியும்.

இதனால், சம்பந்தப்பட்ட விவசாயிக்குத் தெரியாமல் யாரும் விண்ணப்பிக்க முடியாது.விண்ணப்பிக்கும் இணையதளத்தின் முதல்பக்கம்...சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க உள்ள நிலத்தின் சர்வே எண், பரப்பு, பயிர்களின் விவரம் ஆகியவற்றைப் பதிவு செய்தவுடன், அதற்கான மானியத்தொகை விவரங்களும் செல்போன் எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக வந்துவிடும். நில உரிமையாளர்கள் மட்டும் அல்லாமல் குத்தகை விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் முறை எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழிலேயே இருக்கிறது. இந்த முறையில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக... நிலம் தொடர்பான பட்டா, சிட்டா, வரைபடம், விவசாயியின் புகைப்படம், சிறு குறு விவசாயி என்பதற்கான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றைத் தேவைப்படும் இடங்களில் அப்லோட் செய்யவேண்டும். நாம் விண்ணப்பித்த பிறகு, அதில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், அந்த மாற்றத்தையும் நாமே செய்துகொள்ளும் வகையில் ‘எடிட்’ வசதியும் உள்ளது.

தற்போது மானியத்துக்காக விண்ணப்பித்து விட்டு ஒவ்வொரு மேசையாகச் சென்று அலுவலர்களிடம் கெஞ்ச வேண்டிய நிலை மாறிவிட்டது. ஆன்லைன் விண்ணப்ப முறையில்... நமது விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது... ஒன்றிய அளவில் நிலுவையில் இருக்கிறதா... மாவட்ட அளவில் நிலுவையில் இருக்கிறதா... என்ன காரணத்தால் நிலுவையில் இருக்கிறது? போன்ற விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். ஆன்லைன் விண்ணப்ப முறை குறித்து நம்மிடம் பேசிய தோட்டக்கலை அதிகாரி ஒருவர், “இது அருமையான முறை. இதன் மூலமாக விண்ணப்பம் செய்வதற்காக விவசாயி அலையத் தேவையில்லை.

அனைத்து நிறுவனங்களின் விலைப் பட்டியலையும் தெரிந்துகொண்டு, தனக்கேற்ற நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், சம்பந்தப்பட்ட விவசாயிக்குத் தெரியாமல் அவரது நிலத்துக்கு இனி யாரும் மானியம் கோர முடியாது.

தற்போது இந்த முறை செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனாலும், இதில் இன்னும் சின்னச் சின்னத் தொழில்நுட்ப பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றைச் சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. விரைவில் சரி செய்யப்பட்டுவிடும். இந்த முறையில் விண்ணப்பம் செய்ய நினைப்பவர்கள்,  தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு அருகிலுள்ள தோட்டக்கலைத்துறை
அலுவலகத்தைத் தொடர்புகொண்டால் உரிய விளக்கம் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to சொட்டுநீர் மானியம் பெறுவது இனி எளிதுதான்!

Post a Comment

Followers