Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில்; அரசாங்கம் காட்டும் தாமதத்தை கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகங்கள் வடக்கு- கிழக்கில் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த அலுவலகங்களைத் திறப்பது கடினமானதுமல்ல. இதனை ஜெனீவாவில் கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்புகளில் தான் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக இணங்கி நிறைவேற்றிய தீர்மானத்தையே இன்னும் செயல்படுத்தாத சந்தர்ப்பத்தில் அடுத்த ஜெனீவா அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

இந்த அமர்வு இடம்பெறும் காலம் இலங்கை அரசாங்கம் கோரிய கால அவகாசங்கள் அனைத்தும் நிறைவடையும் காலம். இந்தக் காலப் பகுதியில் பிரித்தானியாவால் இலங்கை தொடர்பில் ஒரு பிரேரணை ஐ.நா.வில் கொண்டு வருவதற்கான முன் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாகப் பல விடயங்களை நகர்த்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில், நான் கடந்த வாரம் திடீர் பயணம் மேற்கொண்டு ஜெனீவாவுக்குச் சென்றிருந்தேன்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகத்தின் அலுவலத்தில் சந்திப்புக்களை மேற்கொண்டு எதிர்வரும் அமர்வில் ஆணையாளரின் அறிக்கையில் கண்டிப்பாக இறுக்கமான விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும் எனக் கோரினேன்.ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் 12 நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்து தற்போதுள்ள நிலைமைகள் தெரியப்படுத்தப்பட்டன.

2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டே நிறைவேற்றிய போதும்கூட இன்றுவரை எதுவுமே இடம்பெறாத நிலையில் அடுத்த அமர்வு இடம்பெறவுள்ளது. இலங்கை கோரிய 18 மாத காலத்தின் முன்னேற்றத்தைக் காண்பிக்காத நிலமையில் மேலும் கால அவகாசத்தைக் கோருவதை ஏற்கமுடியாது.

எனவே,உடனடியாகத் தீர்க்கக் கூடிய விடயங்களான காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமற்போனோர் அலுவலகச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி அடுத்தகட்ட நீதி விசாரணை, சட்ட உருவாக்கம் போன்ற வற்றுக்கும் ஆணையாளரின் நேரடி அலுவலகக் கண்காணிப்பில் முன்னெடுக்க கூடியதான மேற்பார்வையுடன் கூடிய மிக இறுக்கமான நடைமுறையே வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

அதனை மிக இலகுவாக ஐ.நா.வால் நடைமுறைப்படுத்த முடியும். அதற்காகவே வடக்கு, கிழக்கில் ஐ.நா. ஆணையாளரின் அலுவலகத்தை திறந்து நேரடிக் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவது ஐ.நா.வைப் பொறுத்தமட்டில் கடினமான காரியம் அல்ல. இதனை நான் ஜெனீவாவில் கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்புகளில் வலியுறுத்தியுள்ளேன்." என்றுள்ளார்.

0 Responses to ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கண்காணிப்பு அலுவலகங்கள் வடக்கு- கிழக்கில் அவசியம்: சுமந்திரன்

Post a Comment

Followers