Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை இராணுவத்தினரை யுத்த நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு நிறுத்துமாறும் எந்தவொரு சர்வதேச நாடும் கூறவில்லை என்று முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

காணாமற்போனவர்கள் தொடர்பில் அலுவலகம் அமைக்கப்படுவது இராணுவத்தினரை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய வகையிலான அரசியலமைப்பு மாற்றமொன்று இந்த வருடத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அது புதிய அரசியலமைப்பாக இருக்கலாம் அல்லது அரசியலமைப்பு திருத்தமாகவும் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேசிய சமாதானப் பேரவையின் 'அனைத்து சமயத் தலைவர்களின் தேசிய மாநாடு' நேற்று திங்கட்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நாட்டின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த சர்வமதத் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு மாவட்ட ரீதியில் நல்லிணக்கம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தனர்.

இம்மாநாட்டில் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் சிறப்புரையாற்றும்போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “யுத்தத்தில் காணாமற்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்துள்ளது என்பதை தெளிவாகக் கூறாவிட்டால் அவர்களுடைய உறவினர்கள் தொடர்ந்தும் கண்ணீர் வடித்தவாறு தேடிக் கொண்டேயிருப்பர். எனவேதான் காணாமற்போனவர்களுக்கான அலுவலகத்தை அமைத்து அதில் காணாமற்போனவர்கள் என்ன ஆனார்கள் என்பதை அறிக்கையாக தயாரித்து வெளியிடும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகமொன்றை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை விரைவில் அமைத்து காணாமற்போனவர்களின் உறவுகளுக்கு தெளிவான நிலைப்பாடொன்று அறிவிக்கப்பட வேண்டும். எனினும், இந்த அலுவலகம் தொடர்பில் சில இராணுவத்தினர் சந்தேகத்தை விதைத்துள்ளனர். இந்த அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தொடர்புபட்ட இராணுவத்தினரை யுத்த குற்ற நீதிமன்றத்துக்கு இழுக்கப் போவதாகக் கூறப்படுகிறது. அப்படியான எந்தவொரு தேவையும் எமக்கு இல்லை. இப்படிச் செய்யுமாறு எந்தவொரு சர்வதேசமும் கூறவில்லை.

அதேநேரம், இந்த வருடத்துக்குள் அரசியலமைப்பு மாற்றமொன்று கொண்டுவரப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பாக இருக்கலாம் அல்லது அரசியலமைப்பு திருத்தமாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் இது அமைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் சிங்கள தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே தமது உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாகவே உறுதிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவத்தினரை யுத்த நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டிய தேவை இல்லை: சந்திரிக்கா

Post a Comment

Followers