Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியின் இறுதி மேடையில் ஏறுவதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அனுமதி கோரியிருந்த போதிலும், தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழு தீர்மானத்தின் பிரகாரம் அவர் அனுமதிக்கப்படவில்லை என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான ரீ.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையிலுள்ள அங்கத்தவர்கள் தவிர்ந்த யாரும் எழுக தமிழ் மேடையில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்கிற தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு எழுக தமிழ் பேரணியின் இறுதிக் கூட்டத்தில் பெண்களுக்குப் மேடையில் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியிருந்தார். குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே ரீ.வசந்தராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எழுக தமிழோடு இணைந்து கொள்வதற்கு பெண்கள் அமைப்புக்கள் துணிவோடு முன்வரவில்லை. சிங்களத் தலைவர்கள் உட்பட வேறு கட்சித் தலைவர்களும் மட்டக்களப்பு எழுக தமிழ் மேடையில் உரையாற்றுவதற்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் எவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அனந்தி யாழ்ப்பாணத்தில் வைத்தே தான் மட்டக்களப்பு எழுக தமிழ் மேடையில் உரையாற்றுவதற்கு வாய்ப்பளிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆனால் அதற்கு தாங்கள் மறுத்து விட்டதாகவும் தமிழ் மக்கள் பேரவை வடக்குப் பிரிவால் எனக்கு அறிவிக்கப்பட்டது.

அனந்தி மட்டக்களப்புக்கு வருகை தருகின்றார், மேடைப் பேச்சுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும், அவையின் தீர்மானத்திற்கு அமைவாக, மட்டக்களப்பு எழுக தமிழ் மேடையில் உரையாற்றுவதற்கான அனுமதியை அனந்திக்கு வழங்க முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளோம். அதனை அவர் ஏற்றுக் கொண்டுதான் மட்டக்களப்புக்கு வந்து எழுக தமிழ் நிகழ்வுகளில் பங்குபற்றுகின்றார் என்பதையும் எனக்கு அறிவித்தார்கள்.

அனந்தி தனது அமைப்பை தமிழ் மக்கள் பேரவையில் இணைத்துக் கொண்டிருந்தால் அவருக்குப் பேசுவதற்கு வாய்ப்பளித்திருக்க முடியும். தமிழ் மக்கள் பேரவையில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பன இணைந்து கொண்டுள்ளன.

தமிழ் மக்கள் பேரவை உருவாகி இப்பொழுது ஒன்றரை வருடங்கள் கழிந்து விட்டது. ஆனால், இதிலே அனந்தி ஏன் தனது அமைப்பை இணைத்துக் கொள்ளவில்லை என்பதற்கான காரணம் நமக்குத் தெரியாது.

பெண்கள் தங்களுக்கான குரலாக தாங்களே நேரடியாக எழுக தமிழில் உரையாற்ற வேண்டும் என்கின்ற கோரிக்கையை எவரும் முன் வைத்திருக்கவுமில்லை. அப்படி ஏதேனும் கோரிக்கைகள் வந்திருந்தால் அதனைப் பரிசீலித்திருக்கலாம்.

மேலும், மட்டக்களப்பிலுள்ள எத்தனையோ பெண்கள் அமைப்புக்களை தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து கொள்ளுமாறு நேரில் சென்று அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், அந்த பெண்கள் அமைப்புக்கள் எவையும் துணிச்சலோடு முன்வரவில்லை. இந்த அமைப்பில் சேர்ந்து கொள்வதற்கு அவர்கள் அச்சத்தோடு இருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் பேரவையை ஓர் ஆயுதக் குழு என்று நினைத்து இந்த அமைப்போடு இணைந்து கொள்வதற்கு அச்சப்படுவது போல் தெரிகின்றது. இந்த அமைப்பில் எந்த அமைப்பையும் நாங்கள் வலிந்திழுத்து வந்து இணைத்துக் கொள்ள முடியாது.

எமது எழுக தமிழ் பிரகடனத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுகச்கு வாழ்வாதாரத்திற்கு வழிவகை கண்டாக வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. பெண்களை நாம் புறக்கணிக்கவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்கள் பேரவை தீர்மானத்தின் படி அனந்தி சசிதரன் ‘எழுக தமிழ்’ மேடையில் ஏற்றப்படவில்லை: ரீ.வசந்தராஜா

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...