Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு கேப்பாபுலவில் விமானப்படையின் முகாம் அமைக்கப்பட்டுள்ள காணிகள், அரசாங்கத்துக்கு சொந்தமானது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அங்கு தம்முடைய காணிகள் இருப்பதாக பொதுமக்கள் பிரதேச செயலாளரினூடாக உறுதிப்படுத்தினால் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை நிலைமை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி வருவதாகவும், ஆனாலும் அவர்கள் வேறு நோக்கத்தில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சந்தேகிப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கேப்பாபுலவு தொடர்பான பிரச்சினை தொடர்பில் அந்த மக்களை சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளோம். இரு வாரங்களுக்கு முன்னர் 243 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. வவுனியாவில் 16 ஏக்கர் காணியை விடுவித்துள்ளோம்.

மக்கள் உறுதிப்படுத்தியமைக்கமைய அவர்களின் காணிகளை இராணுவம் விடுவித்து வருகிறது. இங்கும் பொதுமக்கள் தமது சொந்த இடம் என்பதை நிரூபித்தால் தேவையான நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொள்ள தயாராக இருக்கிறது.

தற்பொழுது படை முகாம் அமைந்துள்ள இடம் அரசாங்கத்துக்கு சொந்தமான பகுதியாகும். இது வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழே வருகிறது. யாராவது இந்த காணி தம்முடையது என ஆதாரங்களுடன் நிரூபித்தால் விமானப் படை அதற்கான ஒழுங்குகளை செய்யும். பிரதேச செயலகத்தினூடாக மக்களுக்கு உறுதிகளை சமர்ப்பிக்க முடியும்.

ஆனால் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்தியும் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வேறு நோக்கத்தில் இவ்வாறு போராட்டம் நடத்துகின்றனர் என்ற சந்தேகம் எழுகிறது. அரசியல் நோக்கத்தில் இதனை செய்கின்றனரா என்று தெரியாது.

2009ஆம் ஆண்டு முதல் கேப்பாபுலவில் இந்த பிரச்சினை வரவில்லை. இது அரசாங்க காணி என்ற அறிவுறுத்தலின் பிரகாரமே இங்கு முகாம் நிர்மாணிக்கப்பட்டது. நாம் மக்களுடன் பேசி வருகிறோம்.” என்றுள்ளார்.

0 Responses to கேப்பாபுலவில் அரச காணிகளிலேயே விமானப்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது: இராணுவப் பேச்சாளர்

Post a Comment

Followers