Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வாக்குறுதிகளை யார் வழங்கினாலும் ஏற்க முடியாது. சொந்தக் காணிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னரே தாம் முன்னெடுத்துள்ள போராட்டத்தினை கைவிட முடியும் என்று முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் அறிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு பிரிவினர், மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் எனவும், போராட்டத்தை கைவிடுமாறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களைச் சந்தித்து முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.

எனினும், “காணிகளுக்குள் எம்மை செல்ல அனுமதித்ததன் பின்னரே நாம் போராட்டத்தை கைவிடுவோம். அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம்” என அம்மக்கள் மாவட்டச் செயலரிடம் தெரிவித்துள்ளனர். மக்கள் இவ்வாறு தெரிவித்த நிலையில் மாவ ட்ட செயலர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இப்பகுதியில் 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 42 ஏக்கர் காணி விமானப்படை முகாமுக்குள் உள்ளடங்கியுள்ளது. 42 ஏக்கர் காணியில் 25 ஏக்கர் காணியை விடுவிக்க கொழும்பில், ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினர், மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விமானப்படையினர் சம்மதித்துள்ளனர்.

எனினும் உறுதிமொழியையடுத்து போராட்டத்தை கைவிடமாட்டோம் எனவும், காணிகளை விடுவித்தால் மாத்திரமே போராட்ட த்தை கைவிடுவோம் என மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கடும் மழைக்கு மத்தியிலும் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணி மீட்பு போராட்டம் தொடர்ந்தும் இன்று புதன்கிழமை 15வது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to வாக்குறுதிகளை ஏற்க முடியாது; காணிகளை ஒப்படைத்தாலே போராட்டத்தை நிறுத்த முடியும்: கேப்பாபுலவு மக்கள் உறுதி!

Post a Comment

Followers