Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள நிலையான அபிவிருத்திச் சட்டமூலத்திற்கு வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்திற்கு இணங்குவதற்கு வடக்கு மாகாண சபை மறுத்துள்ள அதேநேரம், அரசியலமைப்பு திருத்தமொன்று கொண்டுவரப்படும் வரை அச்சட்டமூலம் தொடர்பான பரிசீலனையை தாமதப்படுத்துவதாக கிழக்கு மாகாண சபை அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகளை நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே சபாநாயகர் கரு ஜெயசூரிய இதனைக் கூறியுள்ளார்.

நிலையான அவிபிருத்தி சட்டமூலம் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், அரசியலமைப்பின் 154 எ(5)(அ) உறுப்புரையின் பிரகாரம் ஒவ்வொரு மாகாணசபைக்கும் ஆற்றுப்படுத்தப்பட்டதன் பின்னர், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதியிலிருந்து ஒரு மாத காலத்தினுள் அந்தந்த மாகாணசபைகளின் அபிப்பிராயங்களை 46அ(2)(அ)ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டது.

இது தொடர்பாக மாகாணசபைகளின் அபிப்பிராயங்கள் பாராளுமன்றத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அதன் பிரகாரம், வட மத்திய மாகாணசபை சட்டமூலத்தை பரிசீலித்ததன் பின்னர் அச்சட்டமூலம் தொடர்பாக அம்மாகாண சபையின் உடன்பாட்டை தெரிவித்துள்ளது.

மத்திய, வடமேல், சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா ஆகிய மாகாண சபைகள் சட்டமூலத்தை பரிசீலித்து, திருத்தங்களுக்கு உட்பட்டு அம்மாகாண சபைகளின் உடன்பாட்டை தெரிவித்துள்ளன.

வடக்கு மாகாண சபை இச் சட்டமூலத்திற்கு தமது உடன்பாட்டை தெரிவிக்கவில்லை என்கின்ற அதேநேரம், அரசியலமைப்பு திருத்தமொன்று கொண்டுவரப்படும் வரை பரிசீலனையை தாமதப்படுத்துவதாக கிழக்கு மாகாண சபை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

ஒவ்வொரு மாகாண சபைகளிடமும் பெறப்பட்ட அபிப்பிராயங்கள் தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருக்கும் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவிற்கும் ஆற்றுப்படுத்தப்படும் என்றும் சபாநாயகர் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to நிலை அபிவிருத்திச் சட்டமூலத்திற்கு வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் எதிர்ப்பு: கரு ஜெயசூரிய

Post a Comment

Followers