Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தி.மு.க. மீது பாயவேண்டாம்,திராணி இருந்தால் ஒ.பி.எஸ்ஸூக்கு பதில்
    சொல்:லவும் என்று திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்
    தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப்
பேசிக் கொண்டிருந்தார் என்று அதிமுகவின் அதிரடி வரவான பொதுச் செயலாளர் திருமதி சசிகலா நடராஜன் குற்றம் சாட்டியிருப்பது அவர் ஏற்கனவே நான் பினாமி அல்ல என்று சொத்துக் குவிப்பு வழக்கில் வைத்த உதவாக்கரை வாதம் போன்று இருக்கிறது.

நினைத்த வேகத்தில், குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆக முடியவில்லை என்ற ஏக்கத்தில் ‘எதைத் தின்னால் பித்தம் தெளியும்’ என்ற போக்கில் தி.மு.க.
மீது போலி விமர்சனத்தை வைத்துள்ளதாகவே கருதுகிறேன். அதிமுகவிற்குள் நடக்கும் கேலிக் கூத்துகளுக்கும், அரசியல் கோமாளித்தனங்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை திருமதி சசிகலா நடராஜன் அறிய வேண்டும் என்றால் அவர் முதலில் “தமிழக அரசியலை” புரிந்து கொள்ள வேண்டும்.

மாண்புமிகு ஆளுநர் அவர்களால் நியமிக்கப்பட்ட முதலமைச்சர் ஓ.
பன்னீர்செல்வம் அவர்களை போயஸ் தோட்டத்திற்கு வர வைத்து, இரண்டு மணி நேரம் மிரட்டி, ராஜினாமா கடிதம் பெற்ற சசிகலா நடராஜன், அதிமுக தொண்டர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க இப்படி தி.மு.க. மீது பழி போடுவது
அரைவேக்காட்டுத்தன அரசியல். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாகவும், வெளியில் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக்கும் கட்சியாகவும் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதனால்தான் முதலமைச்சராக அம்மையார் ஜெயலலிதா அவர்கள் பதவியேற்ற போது அந்த நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் பங்கேற்றேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களே அதற்காக எனக்கு நன்றி தெரிவித்ததை தோழி என்று சொல்லிக் கொள்ளும் திருமதி சசிகலா நடராஜனுக்கு தெரியாமல் இருப்பது எப்படி? ஏன் சட்டமன்றத்திலேயே நேருக்கு நேர் நானும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களும் பரஸ்பரம் வணக்கம் செலுத்தி சிரித்துக் கொண்டிருக்கிறோம். அம்மையார் ஜெயலலிதாவைப் பார்த்து திருமதி சசிகலா நடராஜன் இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க முடியுமா?

அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தது, அவர் திடீரென மறைந்தவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது, அம்மையார் ஜெயலலிதாவின் பூத உடலின் அருகில் இருந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறியது எல்லாமே திராவிட முன்னேற்றக் கழகம் கடைப்பிடிக்கும் அரசியல் நாகரீகத்தின்
வெளிப்பாடு மட்டுமே!

அவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட
பிறகும், அதே அரசியல் நாகரீகத்தை சட்டமன்றத்திலும், வெளியிலும் திராவிட
முன்னேற்றக் கழகம் முன்னெடுத்துச் சென்றது. ஆளுங்கட்சியும்,
எதிர்கட்சியும் தமிழக நலனுக்காக இணைந்து செயல்படுவது ஒரு வேளை திருமதி
சசிகலா நடராஜனுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். அதற்கு தி.மு.க.
பொறுப்பாக முடியாது.

ஆகவே அதிமுகவிற்குள் “சிரிப்பாய் சிரிக்கும் காட்சிகளுக்கு” என்னைப்
பார்த்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் சிரித்ததுதான் காரணம்
என்று கூறுவது விசித்திரமானது, வெட்கக் கேடானது. அதை விட தனது எடுபிடியாக
இருக்கும் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரை மூலமாக ஒரு பேட்டி
கொடுக்க வைத்து, டெல்லி பயணம் என்றெல்லாம் கதை அளப்பது “மொட்டைத்
தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும்” கேவலமான செயல் என்பதை
திருமதி சசிகலா நடராஜன் உணர வேண்டும்.

முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு அவர் பட்ட அவமானங்களை
மறைந்த அம்மையார் ஜெயலலிதா சமாதி முன்பு நின்று பட்டியலிட்டிருக்கிறார்.
திராணி இருந்தால் அதற்கு திருப்பி பதில் சொல்லுங்கள். அதை விட்டு விட்டு
தி.மு.க.வை சீண்ட வேண்டாம் என்று திருமதி சசிகலா நடராஜனை எச்சரிக்க
விரும்புகிறேன். அமைச்சர்களை வைத்து, பாராளுமன்ற துணை சபாநாயகரை வைத்து,
அதிகார பூர்வ ஏடான “நமது எம்.ஜி.ஆர்” இதழை வைத்து முதலமைச்சர் ஓ.
பன்னீர்செல்வம் அவர்களை அவமானப்படுத்தியது திருமதி சசிகலா நடராஜனும்
அவருடைய குடும்ப உறுப்பினர்களும் தானே தவிர தி.மு.க. இல்லை என்பதை
தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அதிமுகவில் உள்ள மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டிய
திருமதி சசிகலா நடராஜனும் அவரது குடும்பத்தினரும் இப்போது முதலமைச்சரையே
மிரட்டி கடிதம் வாங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக குடியரசு
தின விழாவில் தனது மனைவியுடன் வந்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
அவர்கள் பங்கேற்றதை பொறுத்துக் கொள்ள முடியாத திருமதி சசிகலா நடராஜன்
முதலமைச்சரை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்துள்ளார் என்பதுதான் உண்மை.
ஆனால் அந்தக் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில், இன்றைக்கு
மாநிலத்தில் மிகப்பெரிய நிர்வாக சீர்குலைவு ஏற்பட்டு நிலைத்த ஆட்சியின்
சக்கரம் தடுமாறி நிற்கிறது.

இன்றைக்கு முதலமைச்சரையே மிரட்டியிருக்கின்ற நிலையில், இந்த மிரட்டல்
குறித்தும், போயஸ் கார்டனில் அமர்ந்து கொண்டு நிலைத்த ஆட்சியை கவிழ்க்க
சதி செய்த அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று நான் ஏற்கனவே கூறியிருந்ததை மீண்டும் வலியுறுத்துகிறேன். முதல்வரே
மிரட்டப்பட்டிருப்பதால் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுப்பதை விட இது
குறித்து சி.பி.ஐ. நடவடிக்கைக்கு ஆளுநர் உத்தரவிடவேண்டும்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மூன்று மாதங்கள், தேர்தலுக்குப் பிறகு
அம்மையார் ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிப்பால் இரண்டரை மாதங்கள், அவர்
மறைந்த பிறகு செயல்பட விடாத முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அரசால்
இரண்டரை மாதங்கள் என்று ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு மேல் தமிழக அரசு
நிர்வாகம் முழுவதும் செத்து விட்டது. நிர்வாக எந்திரம் நிலைகுலைந்து
கிடக்கிறது. ஆகவே அசாதாரண சூழ்நிலை நிலவும் இந்த நேரத்தில் பொறுப்பு
ஆளுநர் அவர்கள் உடனடியாக சென்னைக்கு வந்து முகாமிட்டு, தமிழக நலனை
பாதுகாக்க நிலையான ஆட்சி அமைவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு,
அரசியல் சட்டத்தை தமிழகத்தில் செயல்பட வைக்க வேண்டும் என வலியுறுத்திக்
கேட்டுக் கொள்கிறேன்

0 Responses to தி.மு.க. மீது பாயவேண்டாம்,திராணி இருந்தால் ஒ.பி.எஸ்ஸூக்கு பதில் சொல்லவும்: மு.க.ஸ்டாலின்

Post a Comment

Followers