Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் ஒட்டுமொத்த வலிகளையும் சுமந்து நிற்கும் பெண்களை மட்டக்களப்பில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி புறக்கணித்துவிட்டதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“எழுக தமிழ் நிகழ்வுக்கு வந்திருந்த பெண்கள், மேடையில் ஏறிப் பேசுமாறு என்னை வலியுறுத்தினர். ஆனால், அழைக்காமல் மேடையேறுவது அகௌரவம் என்பதை அந்தப் பெண்களுக்குச் சொல்லி வைத்தேன். ஒட்டுமொத்தத்தில் கிழக்கு எழுக தமிழ், பெண்களைப் பிரதிபலிக்கத் தவறிவிட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்றுக் கருத்துத் தெரிவித்தபோதே அனந்தி சசிதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “யாழ். எழுக தமிழ் பேரணியில் கூட, தீர்வுத் திட்டம் குறித்துப் பிரஸ்தாபிக்கும்போது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேவைகள், தீர்வுகள் குறித்து ஆலோசனைகள் பெறப்படவில்லை. தமிழ் மக்கள் பேரவையும் எழுக தமிழும், தன்னுடைய பிழைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

எழுக தமிழின் பிரகடனத்தில், காணாமல் போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் என்று தமிழ் மக்களின் பல விவகாரங்கள் கூறப்பட்டிருந்ததால், அதில் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலில் நானும் சக மாகாணசபை உறுப்பினர்களான விந்தன் சிவநேசன் மற்றும் 35 பெண்களோடு யாழ்ப்பாணத்திலிருந்து எனது சொந்தச் செலவில் வந்து கலந்துகொண்டேன். ஆனால், எழுக தமிழ் நிகழ்வில் பேசியவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருந்தார்கள்.

இந்நிலையில், தமிழ்ப்பேரவையில் பெண்ணுரிமை பெண்களுக்கான சமவாய்ப்பு பற்றி எப்படி கதைப்பது? பெண்களுக்கு இடமில்லாத அப்பேரவையில் எதிர்காலம் எவ்வாறிருக்கும்?

வடக்கு - கிழக்கு சார்ந்து, பெண்கள் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். வெளிநாடுகளில் நிதி சேகரிக்கின்ற அமைப்புக்கள் தங்கள் சொகுசுக்காக அவற்றை மேற்கொள்ளாது, பாதிக்கப்பட்டு துயரத்தோடு நாளாந்த வாழ்க்கையில் துவண்டு கொள்ளும் பெண்களுக்காக செயற்பட வேண்டும். நலிவடைந்த பெண்களை வளர்ப்பதற்கான அமைப்புக்கள் தேவை.” என்றுள்ளார்.

0 Responses to ‘எழுக தமிழ்’ பேரணி பெண்களைப் புறக்கணித்து விட்டது: அனந்தி சசிதரன்

Post a Comment

Followers