Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொது மக்களின் காணிகளை மீளக் கையளிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதிமொழியை இராணுவம் மீறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை சமர்பித்து உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "நாட்டில் 2009ஆம் ஆண்டு மே மாதத்துடன் யுத்தம் முடிவடைந்துவிட்டபோதிலும், தமிழ் மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத நிலைதொடர்ந்து வருகிறது.
எனினும், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தனியார் காணிகள் அனைத்தும் மீள்குடியேற்றத்துக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். எவ்வாறிருப்பினும், சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், வடக்கு- கிழக்கில் பெரும்பான்மையான தனியார் காணிகள் பாதுகாப்புப் படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்படாமல் உள்ளன.

அனைத்து மக்களும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவர்கள் என்று கூறியே 2012ஆம் ஆண்டு சட்டவிரோத இடைத்தங்கல் முகாமான மெனிக்பாம் மூடப்பட்டது. அந்த வருடத்தின் செம்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வை சமாளிப்பதற்காகவே இந்த அவசர நடவடிக்கை அப்போது மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும், மீள்குடியேற மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதன் பின்னரும் தற்போது சீனிமோட்டை எனும் பிரதேசத்திலுள்ள கேப்பாபிலவு கிராமத்தைச் சேர்ந்த மக்களின் காணிகள் இன்னும் பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த மக்கள் தற்போது தங்களது காணிகளைத் திரும்பத் தருமாறு கோரி குழந்தைகள் சகிதம் வீதிகளில் இருந்து தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மக்களின் இந்தப் போராட்டமானது 9ஆவது நாளாகவும் தொடர்கிறது. இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். இந்தப் பகுதியில் 243 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதத்தின் இறுதியில் ஜனாதிபதி இதற்கென முல்லைத்தீவு வருவதாகவும் இருந்தது. எனினும், துரதிஷ்டவசமாக அவரால் அந்தத் தினத்தில் வரமுடிந்திருக்கவில்லை.

எனினும், இந்தக் காணி விடுவிப்பின் மூலம் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லலாம் என்று 4,000 மக்கள் நம்பியிருந்தனர். எனினும், 145 ஏக்கர் காணிகள் மட்டுமே அதில் விடுவிக்கப்பட்டுள்ளன. அதிலும், 50 ஏக்கர் காணிகள் அந்தப் பகுதிக்கு உட்பட்டதில்லை. அவ்வாறு பார்க்கையில் சம்பந்தப்பட்ட பகுதிக்குரிய 95 ஏக்கர் காணி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. சுமார் 150 ஏக்கர் காணி விடுவிக்கப்படவில்லை.

இந்தக் காணி விடுவிப்புக்கான நிகழ்வு நிறைவடைந்ததன் பின்னரே மேற்படி காணிகள் விடுவிக்கப்படாத விடயம் தெரியவந்துள்ளது. இதனால், சொந்த இடங்களுக்குச் செல்லும் எதிர்பார்ப்புடன் வந்த மக்கள் தங்களது காணிகள் விடுவிக்கப்படாமையினால் வீதிகளில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவை அந்த மக்கள் பரம்பரையாக வாழ்ந்து வந்த காணிகள்.

இந்த விடயத்தில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளைப் பாதுகாப்புப் படையினர் மீறியுள்ளனர். தனியார் பஸ் சேவையினர் போராட்டத்தில் ஈடுபட்டால் 24 மணிநேரங்களுக்குள் அதற்குத் தீர்வுகாண செயற்படும் அரசு, இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்டிருக்கும் இனம் மற்றும் அவர்கள் வாழும் பகுதி காரணமாகவா இதில் அலட்சிய மனப்பான்மையைக் காட்டுகின்றது.

மனிக்பாம் முகாமில் இருந்த அகற்றப்பட்டு 2012ஆம் ஆண்டு சீனிமோட்டை எனும் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். அந்தப் பகுதி அப்போது காட்டுப் பிரதேசமாகவே இருந்தது. அதையொரு தற்காலிக ஏற்பாடாகவே அப்போது கூறினர். 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தற்காலிக ஏற்பாடாக செய்யப்பட்ட அந்த நடவடிக்கை 2017ஆம் ஆண்டுவரை நீடித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எழுத்துமூலம் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் இந்த உறுதிமொழி தற்போது மீறப்பட்டுள்ளது. இது தொடர்பான மக்களின் போராட்டத்திற்கு நாமும் முழுமையான ஆதரவைத் தெரிவிக்கின்றோம்.

ஆகவே, கேப்பாபுலவு கிராமத்தில் குடியிருப்பு நிலங்களை அதன் பூர்வீகக் குடியிருப்பாளர்களுக்குத் திரும்ப ஒப்படைப்பதற்கு அரசு உடனடி மற்றும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்." என்றுள்ளார்.

0 Responses to ஜனாதிபதியின் உறுதிமொழியை இராணுவம் மீறியுள்ளது; கேப்பாபுலவு காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்: சுமந்திரன்

Post a Comment

Followers