Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு தங்களுக்கு எந்தவிதமான உறவும் இல்லை என்று விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும், வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணியும் அறிவித்துள்ளன.

ஆகவே, பாராளுமன்றத்துக்குள் தங்களை தனி்த்துச் செயற்பட அனுமதிக்குமாறு சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் நேற்று புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளன.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் விமல் வீரவங்க கூறியுள்ளதாவது, “ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனான அரசியல் ரீதியான உறவுகளை, எமது கட்சி துண்டித்துள்ளது. ஆகவே, எனது தலைமையின் கீழுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரையும் சுயாதீன அணியாக செயற்படுவதற்கு அனுமதிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை 6 மாதங்களுக்கு முன்னரே நாம் விடுத்திருந்தோம். சுயாதீனமாகச் செயற்படும் கட்சியொன்றுக்கு பாராளுமன்றில் வழங்கப்படும் உரிமைகள், சலுகைகளையும் நாம் கோரியிருந்தோம். ஆனால், சபாநாயகர் என்ற ரீதியில் நீங்கள், இன்னும் எவ்வித முடிவையும் விடுக்கவில்லை.” என்றார்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர், “இந்த விவகாரம் தொடர்பில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு அறிவித்துள்ளோம். இந்த முடிவு குறித்து அக்கூட்டமைப்பு நீங்கள் இன்னும் அறிவிக்கவில்லையென்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன், இன்று தான் (நேற்று) நீங்கள், இப்படியொரு அறிவிப்பையே சபையில் பகிரங்கமாக விடுக்கின்றீர்கள்” என்றார்.

அதற்கு மீண்டும் பதிலளித்த விமல் வீரவங்க, “இல்லை. சபாநாயகரே, இதற்கு முன்னரே நான் கோரிக்கை விடுத்திருந்தேன். நாம் வெளியேறுவதை அனுமதிக்க முடியாது என்றுதான், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கூறியுள்ளது. அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. சுயாதீனமாகச் செயற்படும் உரிமை எமக்குள்ளது” என்றார்.

இதன்போது கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) உறுப்பினர்களான பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் விமலின் கருத்தை ஆதரித்தனர். தனது தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணியும் சுயாதீனமாகச் செயற்படப்போவதாக வாசுதேவ நாணயக்கார இதன்போது குறிப்பிட்டார்.

இடையில் குறுக்கிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், “ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட்டதால் கடந்த தடவை எமது கட்சிக்கு பாராளுமன்றில் தனிக்கட்சிக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவ்வாறான அறிவிப்புகளைகூட விடுக்கமுடியாத சூழ்நிலை எமக்கு ஏற்பட்டது” என்றார். கருத்துகளுக்கு செவிமடுத்த, சபாநாயகர் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி, முடிவுகளை அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.

0 Responses to ஐ.ம.சு.கூ.வோடு ஒட்டுறவில்லை; தனித்துச் செயற்பட அனுமதிக்க வேண்டும்: விமல்- நாணயக்கார கட்சிகள் கோரிக்கை!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...