Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வங்கதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஹிஜாப் அணிந்த முன்னால் முஸ்லிம் பெண் வெள்ளை மாளிகை ஊழியரான ருமானா அஹ்மெட் என்பவர் டிரம்பின் அண்மைய 7 முஸ்லிம் நாடுகளுக்கான விசா தடை உத்தரவை அடுத்துத் தான் சுய விருப்பத்தின் பேரில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 2011 முதல் வெள்ளை மாளிகை ஊழியராகவும் NSC எனப்படும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் உறுப்பினராகவும் கடமையாற்றிய இவர் டிரம்பின் புதிய நிர்வாகத்தின் கீழ் வெறும் 8 நாட்களே கடமையாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி அட்லாண்டிக் என்ற ஊடகத்துக்கு இவர் அளித்த கட்டுரை ஒன்றில் வெஸ்ட் விங்கின் இன் கீழ் தான் ஒருவர் மட்டுமே ஹிஜாபி அணிந்த முஸ்லிம் பெண் என்றும் ஒபாமா நிர்வாகம் எப்போதும் எனக்கு சிறந்த வரவேற்பை அளித்து வந்தனர் என்றும் தான் மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவுமே அமெரிக்காவுக்காகப் பணியாற்றி வந்தேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் முஸ்லிம் குடிமக்கள் மற்றும் இஸ்லாம் மதம் தொடர்பான மிகச் சரியான பார்வையை புதிய அதிபர் டிரம்புக்கும் அவரது உதவியாளர்களுக்கும் அளிக்கும் குறிக்கோளுடன் செயற்பட நினைத்தேன். ஆனால் அதிபர் டிரம்ப் சிரிய அகதிகளுக்கும் 7 முஸ்லிம் நாடுகளுக்கும் விசா தடை உத்தரவைப் பிறப்பித்ததை அடுத்து என்னையும் ஒரு அச்சுறுத்தலாக நினைக்கக் கூடிய சமூகத்தில் இருந்து வெளியேறுவது நல்லது என்று நினைத்ததால் தான் இம்முடிவை எடுத்தேன் என ருமானா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னதாக ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான 'ஒபாமா கேர்' இனை ரத்து செய்தது போன்றே அண்மையில் முன்னால் அதிபர் ஒபாமா அமெரிக்க வாழ் திருநங்கைகளுக்கு அளித்த முக்கிய சலுகைகள் பலவற்றை டிரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். மேலும் டிரம்பின் குடியேற்றக் கொள்கைகள் குறித்து அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையையும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். குறித்த உளவுத்துறையின் அறிக்கையில்  ஒரு நாட்டின் குடிமக்களாக இருப்பதாலேயே அவர்கள் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களாக இருக்கும் சாத்தியம் இருப்பதாகக் கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் அண்மைக் காலமாக அமெரிக்காவின் முக்கிய சில ஊடகங்கள் வெள்ளை மாளிகைக்குப் புறம்பாக பொய்யான தகவல்களை வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டியிருந்த அதிபர் டிரம்ப் பிபிசி,  சி என் என் மற்றும் தி நியூயோர்க்  டைம்ஸ் போன்ற முக்கிய ஊடகங்கள் உட்பட பல செய்தி நிறுவனங்களை வெள்ளை மாளிகையின் செய்தியாளர் கூட்டத்தில் இருந்து விலக்கியும் இருந்தார். இந்நிலையில் இந்த அதிருப்தியின் ஒரு வெளிப்பாடாக இந்த ஆண்டு வெள்ளை  மாளிகை சார்பில் செய்தியாளர்களுக்கு வழங்கப் படும் விருந்து உபசாரத்தில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என டிரம்ப் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to டிரம்பின் விசா தடை உத்தரவை அடுத்து வங்கதேச பெண் வெள்ளை மாளிகை ஊழியர் சுயமாக வெளியேறினார்

Post a Comment

Followers