Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று செவ்வாய்க்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இராணுவ அதிகாரிகள் முன் நடத்திய உரை ஒன்றில் ஈரானின் ஆன்மிகத் தலைவரான அயதொல்லாஹ் அலி கமெனெய் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நன்றி செலுத்த வேண்டும் ஏனெனில் அவர் அமெரிக்காவின் உண்மை முகத்தைப் பிரதிபலிக்கின்றார் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

''கடந்த 30 வருடங்களாக நாம் கூறி வருகின்றோம். அதாவது அரசியல்,  பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும்  சமூகம் ஆகிய துறைகளில் அமெரிக்காவின் ஆட்சி முறையில் ஊழல் நிலவி வருகின்றது என. அதை இந்த ஜெண்டில்மேன் (டிரம்ப்) முன்வந்து வெளிப்படையாகவே தேர்தல் சமயத்திலும் தேர்தலுக்குப் பின்னரும் உறுதிப் படுத்தி வருகின்றார். அமெரிக்க விமான நிலையத்தில் கைவிலங்கிடப் பட்ட 5 வயது ஈரானிய சிறுவனது நிலமை அமெரிக்க மனித உரிமைச் சட்டத்தின் உண்மையான அர்த்தத்தையே வெளிக்காட்டுகின்றது என்றும் கமெனெய் குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி 3 ஆம் திகதி டிரம்ப் டுவீட் ஒன்றில்  ஈரான் நெருப்புடன் விளையாடுவதாகவும் ஒபாமா அவர்களுக்கு எந்தளவு இரக்கத்துடன் நடந்து கொண்டார் என்பதை அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடியாக கமெனெய் கூறுகையில் ஒபாமா அவர்கள் தான் ஈரான் மீது பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பொருளாதாரத் தடைகளை விதித்த தலைவர் என்றும் இதன் மூலம் ஈராக்கிலும் சிரியாவிலும் அவரது ஸ்திரத் தன்மை அற்ற நடவடிக்கைகளை ISIS சாதகமாக்கிக் கொள்ள முடிந்தது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவட் ஷரீஃப்  கூறுகையில் வெள்ளை மாளிகையில் டிரம்ப் இருக்கும் பட்சத்தில் வாஷிங்டன் அல்லது ஏனைய முக்கிய சக்திகளுடனான ஈரானின் அணு ஒப்பந்தம் மிகச் சிரமம் வாய்ந்தது என்றும் டிரம்ப் இந்த ஒப்பந்தம் தொடர்பில் கவனம் செலுத்துவார் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் ஆனால் மிகத் தெளிவாகத் தெரியும் விடயம் என்னவென்றால் புதிய ஒப்பந்தங்களை ஈரானோ ஐரோப்பாவோ அல்லது சர்வதேச சமூகமோ எந்தளவு ஏற்றுக் கொள்ளும் என்பது இப்போது கணிக்க முடியாது என்பதே ஆகும் எனவும் ஷரிஃப் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

0 Responses to அமெரிக்காவின் உண்மை முகத்தை டொனால்ட் டிரம்ப் பிரதிபலிக்கின்றார்! : ஈரான் ஆன்மிகத் தலைவர் அயதொல்லாஹ் அலி கமெனெய்

Post a Comment

Followers