Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு மாகாணத்தில் வரலாறு காணாத எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்றுகூடி தமிழினத்தின் உரிமைக்காகத் குரல் கொடுத்துள்ளனர்.

அவர்களின் உரிமைக்குரல் ஈழத்தமிழர் விடயத்தில் உறங்குகின்ற சர்வதேச சமூகத்தை தட்டியெழுப்பி இன்னும் துயிலுதியோ வன்நெஞ்சப் பேதையர் போல் என்று கேட்பது போல அமைந்துள்ளது.

தவிர இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் என்பதையும் சப்புச்சவரான தீர்வு எதனையும் தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதையும் இடித்துரைப்பது போல கிழக்கின் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி அமைந்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

கிழக்கு மாகாணம் தமிழர்களிடமிருந்து பறிபோகிறது. இதைத் தடுத்து நிறுத்த யாருமிலையோ என்று தமிழ்ப் பற்றாளர்களின் நெஞ்சம் கலங்கிய வேளை தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடந்த கிழக்கின் எழுக தமிழ் எழுச்சி, தமிழ் இனத்தின் நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கும் விடுதலைப் போராட்டம் தோல்வியில் முடிந்தமையால் தமிழர்களை இனி எதுவும் செய்யலாம் என்று நினைத்தவர்களுக்கும் நல்லதோர் பதிலடியாக அமையும் என்பது மறுக்க முடியாத உண்மை.

கிழக்கு மாகாணத்தில் எழுக தமிழ் எழுச்சிப்பேரணி இடம்பெறுவதைத் தடுப்பதில் தேர்தல் அரசியல் இலாபத்தில் வீழ்ந்துளலும் நம்மவர்கள் சிலர் கடும் பிரயத்தனம் செய்தனர். இத்தகையவர்கள் பேரணிக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டனர்.

இதோ இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கப் போகிறது. அதற்கிடையில் இத்தகைய பேரணிகள் தேவைதானா என்று கேள்வி எழுப்பினர்.

ஆக, வடக்கில் நடந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணியைத் தடுக்க முற்பட்டவர்கள் கிழக்கிலும் அதே கயமைத்தனத்தைச் செய்தனர்.

இருந்தும் வீறுகொண்ட ஓர் இனத்தை அடக்கிவிடமுடியாது என்பது போல இது காலும் பொறுமை காத்த தமிழ் உறவுகள் அந்தப் பொறுமையை உடைத்து எழுக தமிழ் என்ற கோசத்தோடு எழுச்சிப் பேரணியாக எழுந்தனர்.

கிழக்கின் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத ஒரு பேரணியாக எழுக தமிழ் எழுச்சிப்பேரணி நடைபெற்றமை தமிழ் மக்கள் பேரவையின் முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்கள் சார்ந்து எடுக்கும் நடவடிக்கைகளுக்கான அங்கீகாரமென்றும் கருத முடியும்.

தவிர வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம். வடக்கும் கிழக்கும் பிரிபட முடியாத தேசம் என்பதை எழுக தமிழ் எழுச்சிப் பேரணி இந்த உலகிற்கும் இலங்கை அரசிற்கும் மீண்டும் ஒரு தடவை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

மேலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை, காணாமற்போன வர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவில்லை, சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கப்படவில்லை என்ற பல பிரச்சினைகள் இன்னமும் தொடர்கின்றன.

இது தொடர்பிலும் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்பதை பகிரங்கமாகக் கேட்பதாகவும் கிழக்கின் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அலை கடலெனத் திரண்ட தமிழ்மக்களின் உணர்வுப் பிரவாகம் அமைந்துள்ளது.

இதேவேளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி மேடையில் ஏறியபோது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கரகோசம் செய்து ஆரவாரத்தோடு அவரை வரவேற்ற நிகழ்வு வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணம் இணைய வேண் டும் என்பதற்கான அங்கீகாரம் என்றால் அது மிகையில்லை.

ஆகவே வடக்கிலும் கிழக்கிலும் நடைபெற்ற எழுக தமிழ் எழுச்சிப்பேரணி தமிழ்மக்களின் உணர்வுபூர்வ மான- அஹிம்சை வழியிலான போராட்டம் என்பதை உணர்ந்து அதனை ஏற்று வடக்கையும் கிழக்கையும் இணைத்து உரிய தீர்வை வழங்குவது நல்லாட்சியின் தார்மீகக் கடமையாகும்.

0 Responses to வடக்கும், கிழக்கும் இணைவதற்கான அங்கீகாரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com