Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் தமது விவகாரங்களை தாமே கையாள வேண்டும். அதற்கான அடைவினை எதிர்பார்த்துள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கக் காங்கிரஸ் அவையின் நீதித்துறைக் குழுவின் தலைவரான பொப் குட்லட் தலைமையிலான எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை வந்துள்ளனர். குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் தலா நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவினர், நேற்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் அரசியல் விவகாரங்களில் சீனா, மற்றும் இந்தியாவின் ஆர்வம் தொடர்பாக அமெரிக்கக் காங்கிரஸ் அவை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு, இரா.சம்பந்தன், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையீடு செய்யவில்லை என்றும், அரசியலமைப்பு மறு சீரமைப்பில் இந்தியா தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதாகவும் பதிலளித்தார் என்று, சந்திப்பில் பங்கேற்ற, பாராமன்ற உறு ப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

பிரிக்கப்படாத, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் தமது விவகாரங்களைத் தாமே கையாள அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார். மூன்று பத்தாண்டுகளாக நடந்த போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சாத்தியமான வழிகளில் அமெரிக்கா உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்கு, அமெரிக்கக் காங்கிரஸ் அவை குழுவினர், தமிழ் மக்களின் நிலைப்பாட்டை அமெரிக்காவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கும் போதும் தெரியப்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.

0 Responses to ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் தமது விவகாரத்தை தாமே கையாள வேண்டும்; அமெரிக்க தூதுக்குழுவிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு!

Post a Comment

Followers