Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களை மாத்திரமல்ல சர்வதேசத்தையும் நல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“நாங்கள் மக்களிடம் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து சகல பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணபதற்காக ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம். ஆனால் இந்த அரசாங்கம் எங்கள் எல்லோரையும் ஏமாற்றுவதுடன் மட்டுமல்லாமல் வரவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் காலத்தை இழுத்தடிப்பு செய்ய பல தந்திரங்களை செய்து வருகின்றது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா திறப்பு விழாவில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இன்று நாம் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தை நாங்கள் ஆட்சிக்கு கொண்டு வந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் இந்த இரண்டு வருடத்தில் சாதாரண பிரச்சினையில் இருந்து எமது அரசியல் பிரச்சினை கூட தீர்க்கப்படாத நெருக்கடியான நிலையில் தான் நாங்கள் எல்லோரும் இருக்கின்றோம்.

காணாமற்போனோர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. கேப்பாபுலவு மக்கள் காணி விடுவிப்புக்காக தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இவை எவையும் தீர்க்கப்படவில்லை. இதற்கு அப்பால் இலங்கை அரசாங்கமும் ஐ.நா மனித உரிமை பேரவையும் இணை அனுசரணையாக ஏற்றுக் கொண்ட பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படாத நிலமைகள் இருக்கின்றன.

நாங்கள் மக்களிடம் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து சகல பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணபதற்காக ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம். ஆனால் இந்த அரசாங்கம் எங்கள் எல்லோரையும் ஏமாற்றுவதுடன் மட்டுமல்லாமல் வரவிருக்கும் ஐ.நா கூட்டத் தொடரில் காலத்தை இழுத்தடிப்பு செய்ய பல தந்திரங்களை செய்து வருகின்றது.

இந்த விடயங்களைப் பேசுகின்ற எங்களுடைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கல்லால் எறிவது போன்று நேற்றைய தினம் தயாசிறி என்ற அமைச்சர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் மக்களிடம் ஆணைகேட்ட விடயங்களைத் தான் நடைமுறைப்படுத்துமாறு முதலமைச்சர் கேட்கின்றார்.

தயாசிறி அமைச்சர் ஒரு தடவை ஐக்கிய தேசியக் கட்சியிலும், ஒரு தடவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலும் ஒரு கொள்கை இல்லாமல் கட்சி விட்டு கட்சி மாறியவர். கொள்கை இல்லாமல் கட்சி மாறிக் கொண்டிருப்பவர்கள் ஒரு இலட்சியத்திற்காக, கொள்கைக்காக, நீண்டகாலமாக எமது உரிமைக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற எங்களுடைய முதலமைச்சரையோ அல்லது எங்களையோ கேள்வி கேட்பதற்கு எந்தவிதமான அருகதையும் அற்றவர்.

எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள் என எல்லோருக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. எங்களுடைய முதலமைச்சருக்கு எதிராக தொடர்ச்சியாக தென்பகுதியில் இருக்கும் இனவாதிகள் தாக்கிக் கொண்டிருக்கும் போது நாங்கள் பார்வையாளர்களாக இருக்க முடியாது. இலங்கையில் உள்ள உள்நாட்டு பொறிமுறை ஊடாக எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது என்பதை தொடர்ந்து வருகின்ற சம்பவங்கள் ஊடாக அவதானிக்க் கூடியதாக இருக்கின்றது.

ஆகவே, இலங்கை அரசாங்கமும், ஐ.நா சபையும் இணை அணுசரனையாளராக ஏற்றுக் கொண்ட உள்ளகப் பொறிமுறை குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் கூட்டாக இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. தற்போது வடமாகாண முதலமைச்சர் அவர்களிடமும் கேட்டுள்ளேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாகாணசபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கையெழுத்திட்டு ஐ.நா பொதுச்சபைக்கு கடிதம் மூலம் வலியுறுத்த வேண்டிய தேவை இருக்கிறது. வடக்கு மாகாண சபையில் இது தொடர்பில் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களை மாத்திரமல்ல சர்வதேசத்தையும் அரசாங்கம் ஏமாற்றுகின்றது: சிவசக்தி ஆனந்தன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.