Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை மீது நிறைவேற்றப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்திலிருந்து ‘சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்’ எனும் பரிந்துரையை நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜெனீவாவுக்கான அவசர பயணத்தினை மேற்கொண்டுள்ள எம்.ஏ.சுமந்திரன், அங்கு சந்திப்புக்களை நடத்தி வருகின்றார். இதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, “இலங்கை மீது நிறைவேற்றப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்கி, தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனவே ஐக்கிய நாடுகள் தீர்மானத்தில் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ள வேண்டாம்" என்று வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை முதலாவது சந்திப்பும், அதன் பின்னர் அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதிநிதிகளுடன் இரண்டாவது சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்புக்கள் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியக் கிடைத்தது. போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்குதல் உள்ளிட்ட சில மாற்றங்களைச் செய்ய முயற்சிக்கின்றது. இதனை அறிந்து இது தொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவே அவசரமாக ஜெனிவா வந்தேன்.

பிரிட்டன் இந்த முறை தீர்மானத்தைக் கொண்டு வரும்போது 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் தீர்மானத்தில் சொல்லப்பட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியே தீர்மானத்தைக் கொண்டு வருமாறு கோரினேன். அதற்கு ஆதரவு வழங்குவதாக பிரிட்டன் உறுதியளித்தது. அத்துடன் ஏற்கனவே வழங்கப்பட்ட 18 மாத காலப் பகுதியில் இலங்கை அரசாங்கம் தான் இணங்கிய விடயங்களைச் செயற்படுத்தவில்லை. எனவே, மேற்பார்வைப் பொறிமுறை மிக இறுக்கமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.நா. தீர்மானத்தில் ‘சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்’ எனும் பரிந்துரையை நீக்க அரசாங்கம் முயற்சி: எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...