Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதலில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணையை நடத்தக் கூடாது என்பதில் அரசாங்கம் குறியாக இருக்கின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையினால் போர்க்குற்ற விசாரணை நடத்த முடியுமா என்று ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதனையடுத்து, அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும், தென்னிலங்கை அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் கேட்கப்பட்டபோதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, “போர்க்குற்ற விசாரணையை நடாத்துவதற்கு அரசாங்கத்துக்கு எந்தவிதமான ஊக்கமோ, உற்சாகமோ, தேவையோ இருப்பதாகத் தெரியவில்லை. அதனாலேயே இவ்வாறான கருத்தை நான் தெரிவித்த உடனேயே, அவ்வாறு செய்ய முடியாதென்று அவர்கள் பதற்றம் அடைவதிலிருந்து தெரிகின்றது.

இந்தப் போர்க்குற்ற விசாரணையை நடத்தக் கூடாது என்ற எண்ணத்தில் தான் அவர்கள் எல்லோரும் இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. போர்க்குற்ற விசாரணையை நாங்கள் நடத்தப் போவதாக இருந்தால், அவர்களுக்கு மனவருத்தமோ, மனச்சஞ்சலமோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனவே, அரசாங்கம் மற்றும் தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் போர்க்குற்ற விசாரணையை நடத்தப்போவதில்லை என்பதை வெளிவுலகுக்கும் மக்களுக்கும் எடுத்துக் காட்டத்தான் நான் இதைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதற்கு சட்டத்தில் இடமிருக்கின்றதா எனக் கேட்டேனே தவிர, சட்டத்தில் இடம் இருப்பதாக நான் கூறவில்லை.

சிலவிடயங்களில் எங்களுக்கு இருக்கும் உரித்துக்கள் எங்களுக்கு நன்றாகத் தெரியும். 13வது திருத்தச் சட்டத்தின் கீழ், எங்களுக்குத் தரப்பட வேண்டிய உரித்துக்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பதுடன், அவை தரப்படவில்லை. அல்லது தரப்பட்டவற்றை ஆளுநர் மூலமாக கட்டுப்படுத்தும் அதிகாரமும் அவர்களுக்கு இருக்கின்றது.

ஆகவே, இதைப் பற்றி நான் குறிப்பிட்டது, எங்களுடைய பெரும்பான்மையின அரசியல்வாதிகள் போர்க்குற்ற விசாரணை சம்மந்தமாக எவ்வளவு மனக்கிலேசம் அடைந்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத் தான். இவ்வாறானதொரு மனநிலையில் இருக்கின்ற கூட்டத்தினர் அல்லது அரசியல் கட்சியினர், எவ்வாறு எங்களுடைய மக்களுடைய போர்க்குற்றம் சம்மந்தமான விசாரணைகளை நடத்த முன்வருவருவார்கள் என்பது இதிலிருந்து புரிகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to போர்க்குற்ற விசாரணையை நடத்தக் கூடாது என்பதில் அரசாங்கம் குறியாக இருக்கிறது: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...