Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தைப் போன்று வடக்கு- கிழக்கில் இன்னமும் இராணுவ ஆட்சி நிலவுகின்றதா?, என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

"காணிக்கான உரிமையை உறுதிப்படுத்தினால் பொது மக்களின் காணிகளைக் கையளிப்போம் எனக் கூறுவதற்கு விமானப்படையினருக்கு என்ன உரிமை இருக்கிறது? யாருடைய காணிகளை யார் யாருக்கு வழங்குவது" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “முல்லைத்தீவு கேப்பாபுலவு கிராமத்தைச் சேர்ந்த 84 குடும்பங்கள் தமது காணிகளை மீண்டும் வழங்குமாறு கோரி கடந்த 9 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் குழந்தைகள் முதியவர்கள் என பலரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதுடன், சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாதுள்ளது.

இவர்கள் கோரும் காணிகள் குறித்த வரைபடங்களை கரைதுறைபற்று பிரதேச செயலகத்தின் காணி அதிகாரிகளிடம் பெற்றுப் பார்வையிட்டோம். அதேபோல, விமானப் படையினரின் வரைபடம் மற்றும் வனபரிபாலன சபையின் வரைபடம் என்பவற்றை ஒப்பிட்டுப் பார்த்தோம். விமானப் படையினரின் பயன்பாட்டுக்கு உட்படாத காணிகளையே அப்பகுதி மக்கள் கோருகின்றனர். அவை வனபரிபாலன சபையின் கீழும் வரவில்லை.

நல்லாட்சியெனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. இராணுவம் கையகப்படுத்திய காணிகளை ஆறு மாதங்களில் வழங்குவோம் என ஜனாதிபதி வடக்கில் வந்து கூறியிருந்தார். ஆனால் ஒரு வருடம் ஆகியும் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. காணி விவகாரம் தொடர்பில் ஜெனீவாவிலும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. அவையும் நிறைவேற்றப்படவில்லை.

"விமானப்படை அதிகாரிகளுடன் பேசியபோது மேலிடத்தின் உத்தரவு விடுவிக்க முடியும் எனக் கூறினார்கள். யாருடைய காணியை யார் விடுவிப்பது, யாருக்கு விடுவிப்பது. நல்லாட்சி நிலவுகிறதா அல்லது இராணுவ ஆட்சி முன்னெடுக்கப்படுகிறதா எனக் கேட்க விரும்புகிறோம். முல்லைத்தீவில் சிவில் நிர்வாகம் உள்ளது. பிரதேச செயலாளர்கள் இருக்கின்றனர்.

அவர்களின் ஊடாக காணிகளை விடுவிப்பதா அல்லது விமானப்படையினர் விடுவிப்பதா? மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் மோசமான இராணுவ ஆட்சி நிலவியது, தேசிய நல்லிணக்க அரசாங்கத்திலும் கூட இராணுவ ஆட்சி நிலவும் சூழ்நிலையே காணப்படுகிறது.

பொது மக்களின் காணிகளைப் பிடித்துவைத்துக் கொண்டு அதைக் கொடுப்போம், கொடுக்க மாட்டோம் என பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர். கேப்பாபுலவு ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் அரசியல் காரணம் இருப்பதாகவும், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்த இடமளிக்க போவதில்லையெனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியதாக ஊடகமொன்றில் படித்தேன். பொது மக்களின் பல ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் பிடித்து வைத்திருப்பது தனிப்பட்ட பிரச்சினை மாத்திரமன்றி அரசியல் ரீதியான பிரச்சினையே.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு - கிழக்கில் இன்னமும் இராணுவ ஆட்சியா?; சிவசக்தி ஆனந்தன் கேள்வி!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...