Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடத்திய போலிஸ் ரெயிடில் ISIS இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான சந்தேக நபர்களைக் கைது செய்திருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது. கடந்த மாதம் இஸ்தான்புல் இரவு விடுதியில் ஜிஹாதிஸ்ட்டுக்கள் நடத்திய மிக மோசமான தாக்குதலை அடுத்தே துருக்கி போலிஸ் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

2017 ஆம் ஆண்டு பிறக்க 75 நிமிடங்களே இருந்த நிலையில் இஸ்தான்புல்லில் உள்ள றெயினா இரவு விடுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காகக் கூடியிருந்த மக்கள் மீது ஜிஹாதிஸ்ட்டுக்கள் நடத்திய தாக்குதலில் பெரும்பாலான வெளிநாட்டினர் உட்பட 39 பேர் கொல்லப் பட்டனர். இதையடுத்து துருக்கி வரலாற்றிலேயே போலிசார் மேற்கொண்ட மிகப் பெரிய ரெயிடான ஞாயிற்றுக்கிழமை ரெயிடில் கிட்டத்தட்ட 400 பேர் சுற்றி வளைக்கப் பட்டுக் கைது செய்யப் பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது. இதுவரை கைது செய்யப் பட்ட 423 சந்தேக நபர்களில் துருக்கியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த வெளிநாட்டினரும் அடங்குவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. தலைநகர் அங்காராவில் உள்ள 4 மாவட்டங்களில் மட்டும் கிட்டத்தட்ட 60 வெளிநாட்டு ஜிகாதிஸ்ட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

மிகவும் அமைதியான நகரான அயேகனில் மட்டும் சிரியாவுக்கு பயணம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் 9 பேர் கைதாகி உள்ளனர். இஸ்தான்புல்லில் 18 பேர் கைது செய்யப் பட்டும் கைதானவர்களில் 10 சிறுவர்கள் உட்பட 14 வெளிநாட்டினர் விடுவிக்கப் படும் நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. புதுவருடத் தினத்தன்று இஸ்தான்புல் இரவு விடுதியில் தாக்குதல் நடத்திய சர்ச்சைக்குரிய துப்பாக்கிதாரியான உஷ்பெக் நாட்டவரான அப்துல்கதிர் மஷாரிபோவ் என்பவரை ஜனவரி 16 ஆம் திகதியே துருக்கி போலிஸ் கைது செய்திருந்தது. 2016 ஆம் ஆண்டு துருக்கியில் ISIS உம் குர்து போராளிகளும் நடத்தியிருந்த பல தரப்பட்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். இதையடுத்து சிரியாவில் ISIS இயக்கத்துக்கு எதிரான போரில் துருக்கி இராணுவமும் பங்கேற்று வருகின்றது.

சிரிய நகரான அல்-பாப் இனை ISIS இடமிருந்து மீட்கும் போரில் இதுவரை 48 துருக்கிப் படையினர் கொல்லப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தனது சொந்த நாட்டுக்குள்ளேயும் எல்லைகளிலும் ஜிஹாதிஸ்ட்டுக்களைத் தடுத்து நிறுத்த துருக்கி அரசு போதுமான நடவடிக்கை எடுப்பதில்லை என அதன் மேற்குலக நட்பு நாடுகள் குற்றம்  சாட்டி வருகின்றன. ஆனால் இதனை துருக்கி அரசு மறுத்து வருவதுடன் 2013 ஆம் ஆண்டே ISIS இனை ஒரு தீவிரவாத அமைப்பாக அது பிரகடனப் படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to நாடளாவிய ரெயிடில் நூற்றுக் கணக்கான ISIS சந்தேக நபர்களைக் கைது செய்தது துருக்கி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.