Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எந்தவொரு காரணம் கொண்டும் இலங்கை இணையாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அரசியலமைப்பை மீறி நீதிபதிகளை விசாரணைகளுக்காக நியமிக்கப்போவதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்ட ரீதியில் அமைக்கப்படும் நீதிப் பொறிமுறையின் கீழ் விசாரணைகளை நடத்துவதற்கும், அவ்வாறான விசாரணைகளுக்கு பொதுநலவாய நீதிபதிகள், வழக்குரைஞர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் முன்வைத்திருக்கும் யோசனையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.

அரசியலமைப்பின் படி இலங்கையர்களையே நீதிபதிகளாக நியமிக்க முடியும். இதனை மீறிச் செயற்பட முடியாது. இல்லாவிட்டால் அரசியலமைப்பை மாற்ற சர்வஜன வாக்கெடுப்புக்கே செல்லவேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பாக முன்வைத்திருக்கும் அறிக்கை குறித்து ஆராய்ந்து பதிலளிப்பதற்கு இலங்கையின் பிரதிநிதி கால அவகாசம் கோரியுள்ளார். அவர் முன்வைத்திருக்கும் அறிக்கைக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளபோதும், அவர்கள் கூறும் விடயங்களுக்கு முழுமையான இணக்கப்பட்டைத் தெரிவிக்கவில்லை. கலப்புநீதிமன்றம் அமைப்பதற்கோ அல்லது சர்வதேச நீதிபதிகளை விசாரணைகளுக்கு அமர்த்துவதற்கோ அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கவில்லை.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும், பொறுப்புக் கூறல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என 2009ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், ஐக்கிய நாடுகளின் அப்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூனும் இணைந்து வெளியிட்ட கூட்டு ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்டது. இந்த இணக்கப்பாட்டை அடிப்படையா கக் கொண்டே 2009ஆம் ஆண்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் அரசாங்கம் விசாரணை நடத்த இணங்கியிருந்ததுடன், 2014ஆம் ஆண்டாகும் போது இது தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டு, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. குறித்த பிரேரணைக்கு அமைய செயற்பட்டிருந்தால் சர்வதேசத்தால் அல்லது எம்மால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தண்டனை வழங்க வேண்டி ஏற்பட்டிருக்கும். எனினும், எந்த சட்டத்தின் கீழ் இதனை நடைமுறைப்படுத்துவது என்று குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

அதேநேரம், எமது அரசாங்கம் ஒற்றுமையைக் குலைப்பதற்கோ, இறைமையை விட்டுக் கொடுப்பதற்கோ அல்லது சர்வதேச நீதிபதிகளை அமர்த்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கோ இணங்கவில்லை. அவ்வாறானதொரு யோசனைக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுமில்லை, பங்காளராகவும் இல்லை.” என்றுள்ளார்.

0 Responses to சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை இணையாது; வெளிநாட்டு நீதிபதிகளுக்கும் இடமில்லை: ரணில்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...