Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“எமது கையில் என்ன ஆயுதம் இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். துப்பாக்கியால் சுட முடியும். கத்தியால் சுட முடியாது. கத்தியைக்காட்டி சுடப்போகிறேன் என்றால் சிரிப்பார்கள்.”என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“சர்வதேசத்துடன் பேசுவதென்பது, சந்தையில் மரக்கறி வியாபாரம் போன்று விலையைக் கூட்டிச் சொல்லிக் குறைப்பதல்ல. சர்வதேச அமைப்புகளுடன் பேசுகின்றபோது சரியானதைப் பேசவேண்டும், எதைக்கேட்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும்.”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, செங்கலடி சீனிப்போடியார் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாணிக்க வாசகர் மற்றும் சம்பந்தமூர்த்தி ஆகியோரின் நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கம்போடியாவில் 30 வருடங்களின் பின்னர்தான் போர்க்குற்ற விசாரணை ஆரம்பித்தது என்று நான் முன்பொருமுறை கூறியதற்கு பெரியதொரு விமர்சனம். ஆனால், இங்கு 3 வருடங்களுக்குள்ளே நிலைமை மாறியது. 2012, 2013இலும் இரண்டு கால அவகாசங்கள் கொடுக்கப்பட்டு உள்நாட்டு விசாரணைக்காக காலம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் தான் ஏன் ஒன்றும் நடைபெறவில்லை என்று சொன்னார்கள். இலங்கை, தன்னுடைய இறைமை, தன்னாதிக்கத்தினைப் பயன்படுத்தி ஒரு இலங்கை, தன்னுடைய இறைமை தன்னாதிக்கத்தினைப் பயன்படுத்தி ஒரு விசாரணையினை நடத்தாத காரணத்தினால், சர்வதேச விசாரணை கட்டளையிடப்பட்டது.

2014ஆம் ஆண்டு பிரேரணையிலும் கூட ஓர் உள்நாட்டு விசாரணை நடத்தவேண்டும். அதற்குச் சமாந்தரமாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றுதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதான் சர்வதேச முறை. சுயாதீனமாக இயங்குகின்ற நாடுகளினுடைய சபை ஒவ்வொரு நாடுகளும் இதே மாரியான நிலை தங்களுக்கும் வந்துவிடும் என்று அஞ்சுவார்கள். சர்வதேச தலையீடு தங்களுக்கும் வரும் என்று அஞ்சுவார்கள். அவையெல்லாம் மேல்கொண்டு 3 ஆண்டுகளுக்குள் ஒரு சர்வதேச விசாரணை வந்ததென்றால் அது பாரிய வெற்றி.

பாரிய வெற்றியென்று நான் சொன்னால் சிரிப்பார்கள். என்ன இன்னும் மஹிந்த ராஜபக்ஷ சிறைக்குப் போகவில்லையே. அங்கே நடக்கிற பொறிமுறையிலே அதுதான் வெற்றி. அதனால்தான் சொன்னேன் என்ன கருவியை நாங்கள் எதற்காகப் பிரயோகிக்கிறோம் என்பதனை அறிந்திருக்க வேண்டும். சர்வதேச விசாரணை நடந்தது, அதிலும் ஒரு மாயை ஒன்று இருந்தது. நடந்து முடிந்தது. முடிந்து 2015 மார்ச் மாதத்தில் அதன் அறிக்கை வெளிவரவிருந்த நேரத்தில் இங்கு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் அந்த அறிக்கையைப் பிற்போடுமாறு கேட்டார்கள். 6 மாதங்கள், அதாவது செப்டெம்பர் வரையில் பிற்போடப்பட்டது. பிற்போடப்பட்டபோது எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று கதறி ஒப்பாரி வைத்தவர்கள் ஏராளம்.

பிற்போடப்பட்ட அறிக்கை 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் திகதி வெளியிடப்பட்டது. அது முழுமையான அறிக்கை. அது ஓர் அரைகுறை அறிக்கையல்ல. கடந்த சனிக்கிழமை (11) சொல்லியிருந்தேன், உலகத்திலே நடத்தப்பட்ட விசாரணைகளிலே மிகவும் உயரிய விசாரணை இலங்கை சம்பந்தமாகத்தான் நடத்தப்பட்டிருக்கிறது. வேறு ஒரு நாடு சம்பந்தமாகவும் வேறு எந்த நாட்டிலும் நடத்தப்படவில்லை. 2015இல் வெளியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேசக் குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. அது ஒரு கலப்புப் பொறிமுறையின் மூலமாக நீதிமன்ற தண்டனை வழங்கும் பொறிமுறை செயற்பட வேண்டும் என்றார்கள்.

விசாரணை முடிந்தது, தண்டனை வழங்கக்கூடியவர்களை நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தி தண்டனை கொடுங்கள் என்று சொன்னார்கள். அதனை விசாரணையல்ல கலப்புப் பொறிமுறை என்று சொன்னார்கள். அவருடைய சிபாரிசு வருவதற்கு முன்னதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில், எழுத்து வடிவில் ஒரு கலப்புப் பொறிமுறையை நாங்களே கேட்டிருந்தோம். முழுமையான சர்வதேச விசாரணையை நாங்கள் கேட்கவில்லை. வேறு ஒரு சர்வதேச விசாரணையை வைத்தாலும் இலங்கை முகம் கொடுக்கத் தேவையில்லை.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் ஒரு நாட்டுத் தலைவருக்கு எதிராக பகிராங்கமாக பிடிவிறாந்து கொடுக்கப்பட்டு 10 ஆண்டுகளாகின்றன. அவர் இப்போதும் தன்னுடைய நாட்டுக்குத் தலைவராகத்தான் இருக்கிறார். அதனைச் செயற்படுத்த முடியவில்லை. நடக்கின்ற விசாரணை நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். பிடிவிறாந்து கொடுத்தால் பிடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். சிறைத்தண்டனை கொடுத்தால் சிறைக்கு அனுப்பக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு அந்த நாட்டுச் சட்டங்களிலே அந்த மாற்றம் கொண்டுவரப்படவேண்டும்.

பலர் ஏன் உள்ளகப் பொறிமுறை என்று சொல்கிறார்கள். உள்ளகப்பொறிமுறை இருந்தால்தான் அதனைச் செயற்படுத்த முடியும். நாட்டிலே வாழுகின்றவர்களுக்கெதிராக வழக்குத் தொடரமுடியும். ஆனால், உள்ளகப் பொறிமுறை உள்ளக நீதிபதிகள் மட்டுமல்ல. தீர்மானத்தில் தெட்டத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு நீதிபதிகள், வெளிநாட்டு வழக்கறிஞர்கள், வெளிநாட்டு வழக்குத் தொடுநர்கள், வெளிநாட்டு விசாரணையாளர்கள், இவர்கள் எல்லோரும் பங்குபெறுகின்ற நீதிமன்றப் பொறிமுறை, இவையெல்லாம் சொல்லப்பட்டதுதான்.

ஒக்டோபர் 01ஆம் திகதி இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் விசேட நீதிமன்றப் பொறிமுறை எப்படியான கலப்பு நீதிமன்றமுறை என்பது மிகத்தெட்டத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. புதிய அரசாங்கம் இது செய்வோம் என்று வாக்குறுதியளித்தார்கள். இலங்கையை இணங்கச் செய்யப்பண்ணுவதற்காக சில விட்டுக் கொடுப்புகளைச் செய்தோம். தீர்மானத்தினை நிறைவேற்றிவிடலாம். அது ஒரு நாட்டைக் கட்டுப்படுத்தாது. வற்புறுத்தல், அழுத்தம் இலங்கைக்கு இருந்தது. இலங்கையையும் இணங்கப்பண்ணினோம். ஆனால், அடிப்படையிலே நாங்கள் எதனையும் மாற்றிக்கொள்ளவில்லை.

இலங்கை முழுமையாகப் பொறுப்பெடுத்தது, கையெழுத்திட்டது. ஜனாதிபதியும் பிரதமரும் பணிப்புரை விடுத்து இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க அதில் கையொப்பமிட்டிருக்கிறார். ஆனால், அந்தத் தீர்மானம் இலங்கை நடைமுறைப்படுத்துகிறது என்பது பற்றி மனித உரிமைகள் பேரவையினால் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதுதான் மார்ச் 10ஆம் திகதி வெளிவந்தது. அந்த அறிக்கையில் சில சில விடயங்கள் இலங்கை செய்திருக்கிறது. பலவற்றைச் செய்யவில்லை என்று ஆணையாளர் கூறியிருக்கிறார். அவற்றினைச் செய்வதற்காக இலங்கையில் தன்னுடைய அலுவலகம் ஒன்று நிறுவப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

அவருடைய சிபாரிசின் அடிப்படையில் தான் இன்னுமொரு தீர்மானம் 23ஆம் திகதி நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த நிலையில்தான் இங்கே ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் செய்யவேண்டும் என்றிருக்கிறார். நாங்களும் செய்யவேண்டும் என்கிறோம். துரதிர்ஷ்டவசமாக சில கடிதங்கள் செய்யத் தேவையில்லை என்று அனுப்பப்பட்டிருக்கின்றன. நான் பார்த்த கடிதங்களிலே இந்தப் பொறிமுறை கைவிடவேண்டும் என்றுதான் எழுதியிருக்கிறார்கள். இதைக் கைவிட்டு விட்டு இலங்கையைப் பொதுச்சபைக்கு அனுப்பி, பாதுகாப்புச் சபைக்கு அனுப்பி அங்கிருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புமாறு கூறப்பட்டிருக்கிறது. இப்படிக் கடிதம் அங்கே போவதையிட்டு மிகவும் வெட்கமாக இருக்கிறது.

ஏனென்றால் அதில் கையெழுத்து வைக்கிறவர்களில் சிலர் நிபுணத்துவம் மிக்கவர்கள். அது செய்யப்பட முடியாது என்பது அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். இது செய்யமுடியாது என்று எங்களுக்குத் தெரியும். சந்தையில் மரக்கறி வாங்குகின்ற வியாபாரமா, விலையைக் கூட்டிச் சொல்லிக் குறைப்பதற்கு. சர்வதேச நிறுவனங்களுடன் பேசுகிறபோது சரியானதைப் பேசவேண்டும். எதைக் கேட்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும். இதிலே சாத்தியமானது என்பது என்ன என்று எங்களுக்குத் தெரியும் என்று அவர்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான் சொன்னேன், துப்பாக்கியென்றால்தான் சுடலாம், கத்தியால் சுடமுடியாது. கத்தியைக்காட்டி உன்னைச் சுடப்போகிறேன் என்றால் சிரிப்பார்கள். அப்படிச் சிரிப்புக்கிடமாக எங்களை நாங்கள் மாற்றக்கூடாது.

இவ்வளவு கஷ்டப்பட்டு 2009இல் இலங்கையைப் பாராட்டிய சர்வதேச மனித உரிமைப் பேரவை 3 வருடங்கள் போனது. பிறகு 3 வருடங்கள் போனது சர்வதேச விசாரணைக்கு. இன்னுமொரு 3 வருடங்கள் போகும். நாங்கள் என்னசெய்யலாம்? இருக்கிறதைத்தானே பாவிக்கலாம். கிடைத்த ஆயுதம் என்னவென்று தெரியாமல் கூடுதலாக நாங்கள் உபயோகிப்போம் என்று சொல்லக்கூடாது. சரியானதைச் சாரியான நேரத்தில் நாங்கள் பிரயோகிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to எமது கையில் என்ன ஆயுதம் இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்: சுமந்திரன்

Post a Comment

Followers