Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக நம்பிக்கையூட்டிவிட்டு இன்றைக்கு ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பருத்தித்துறையில் அண்மையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கான அரசியல் கருத்தரங்கு ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும், மாவை சேனாதிராஜாவும் ஆற்றிய உரை தொடர்பில், ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை அனுப்பிய அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அண்மைக்காலமாக பல்வேறுபட்ட முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக கேலியானதும் கிண்டலானதும், நையாண்டித்தனமானதுமான கருத்துக்களைச் சுமந்திரன் வெளியிட்டு வருவது கண்டிக்கத்தக்கது. அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது உண்ணாவிரதமிருந்த பதினான்கு பேரும் ஏதோ தங்களது உறவினர்களுக்காக மாத்திரம் உண்ணாவிரதமிருந்தது போலவும் அவர்களுடைய போராட்டம் காணாமல் போகச் செய்யப்பட்ட 20,000 பேருக்கானது அல்ல என்றும் அவர் கூறியதன் மூலம் எமது உறவுகளின் போராட்டத்தையே கொச்சைப்படுத்தியுள்ளார்.

சுமந்திரன், அரசாங்கத்தையும் முப்படைகளையும் பாதுகாக்கும் விதத்திலும் பிரச்சினையின் உண்மையான முகத்தைத் திசைதிருப்பும் நோக்கிலும் கருத்துக்களை வெளியிடுகிறார். அண்மையில் காணாமல் போகச் செய்தவர்களே காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்காகப் போராடுகிறார்கள் என்று அவர் வெளியிட்ட மோசமான கருத்து இதற்குச் சிறந்த உதாரணமாகும்.

புதிய அரசியல் சாசனம் தொடர்பாகவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பிரச்சினை தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைபபுக்குள், தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சுமந்திரனும் சம்பந்தனும் மாத்திரமே தான்தோன்றித்தனமாகக் முடிவுகளை எடுத்து செயற்பட்டு வருகின்றனர்.

வடக்கு-கிழக்கு இணைப்பு என்பது தமிழ் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படைகளில் ஒரு முக்கியமான விடயம். இதனை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளாமையால் தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று சம்பந்தனும், சுமந்திரனும் கூறுகின்றனர். ஆனால், வடக்கு-கிழக்கு இணைவுக்கு தான் எதிரானவன் அல்ல என்று அமைச்சர் ஹக்கீம் கூறுகிறார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் உங்களால் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுவரை இலங்கை அரசாங்கத்தால் நிறைவேற்றப்படவில்லை.

அவ்வாறானதொரு சூழ்நிலையில், இலங்கை அரசாங்கம் கால நீட்டிப்பு கேட்பதன் அர்த்தம் என்ன, அந்தக் கால நீட்டிப்பை சுமந்திரனும் சம்பந்தரும் ஆதரிப்பதன் அர்த்தம் என்ன, அந்தக் காலநீட்டிப்பு கூடாது என மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவித்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை முட்டாள்களாகவும், ஒற்றுமையைக் குலைப்பவர்களாகவும் இவர் குறிப்பிடுகிறார்.

காலத்தை கடத்துவதற்கான ஒரு யுக்தியாகவே காலநீடிப்பை இலங்கை அரசாங்கம் கோருகிறது என்று, தமிழரசுக்கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தலைவர் சம்பந்தருக்கு வலியுறுத்திக் கூறியிருந்ததுடன், ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கும் இக்கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மட்டுமன்றி, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களும்கூட கடிதங்களை அனுப்பியிருந்தனர்.

இது ஒன்றும் இரகசியமான நடவடிக்கை அல்ல. மேலதிக கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்பது இலங்கை அரசாங்கத்தை விடுவிப்பதற்காக அல்ல. மாறாக, இலங்கை தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையை கோரி இந்த பிரச்சினையை ஐ.நா. பொதுச்சபையும் பாதுகாப்புச் சபையும் கையாள்வதற்கான ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும்.

ஆகவே, கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி அரசியல் கட்சிகளும்சரி மேற்கண்ட அடிப்படையிலேயே அந்த கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள் என்பதை சுமந்திரன் இனிமேலாவது புரிந்துகொள்ளட்டும்.

மீள்குடியேற்றம் நடைபெறும். இராணுவம் வெளியேறும். காணாமல் போகச்செய்யப்பட்டோர் கண்டுபிடிக்கப்படுவர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர். வடக்கு-கிழக்கு இணைக்கப்படும். சமஷ்டி அரசியலமைப்பு உருவாகும். தமிழ் மக்கள் கௌரவமாக வாழும் சூழல் ஏற்படும் என்று நீங்களும் மக்களிடம் நம்பிக்கையூட்டினீர்கள். எமது மக்களும் பலமான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். கடந்த இரண்டு வருடங்களாக, அந்த நம்பிக்கைகளுக்கு சாவுமணி அடிக்கப்பட்டதே தவிர, அவர்களது கோரிக்கைகள் எதுவும் தீர்க்கப்பட்டதாக இல்லை.

ஆகவேதான், இன்று தமது கோரிக்கைகளுக்கு தாமே போராடுவதைத் தவிர வேறுவழியில்லை என்பதை உணர்ந்து தாமே போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் மக்கள் உங்கள்மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.”என்றுள்ளது.

0 Responses to சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டனர்: சுரேஷ்

Post a Comment

Followers